முஸ்லிம்களின் நிலங்கள் அவசரமாக வில்பத்துவுடன் இணைப்பும் சந்தேகங்களும்..!

முசலி பிரதேசத்தின் முஸ்லிம்களுக்கு சொந்தமான கரடிக்குளி, மரிச்சிக்கட்டி உற்பட இன்னும் சில பிரதேசங்களை தேசிய வனப்பிரதேசமாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனா அவர்கள் ரஷ்யாவில் வைத்து கையெழுத்திட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

கடந்த வருட இறுதியில் வில்பத்து சரணாலய பிரதேசத்தை விரிவாக்கி வனவிலங்குகள் வலயமாக வர்த்தமானி பிரசுரம் செய்வதற்கு போதுமான ஆவணங்களை தயாரிக்குமாறு சுற்றாடல் அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனா அவர்கள் உத்தரவு வழங்கியிருந்தார். 

இந்த ஜனாதிபதியின் உத்தரவானது முஸ்லிம்களின் காணிகள் உள்ள பிரதேசம் என்று தெரிந்திருந்தும், சிங்கள இனவாதிகளை திருப்தி படுத்தும் நோக்கில் வழங்கப்பட்டிருக்கலாம் என்றே கடந்த வருடம் சந்தேகிக்கப்பட்டது. ஆனால் இந்த வர்த்தமானி பிரகடனத்தின் மூலம் தானும் ஏனைய ஆட்சியாளர்களை போன்று சிங்கள இனவாதிதான் என்பதனை ஜனாதிபதி உறுதிப்படுத்தியுள்ளார்.

ஏற்கனவே முசலி பிரதேச சபைக்கு உட்பட்ட முஸ்லிம்களுக்கு சொந்தமான உறுதி உள்ள நிலங்களை வில்பத்துவுடன் இணைத்தைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, 2௦12 இன் வர்த்தமானி அறிவித்தலை ரத்துச்செய்யுமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருக்கும் நேரத்தில், இன்னும் அப்பிரதேசத்தினை விரிவாக்கம் செய்து ஏனைய நிலங்களையும் வில்பத்துவுடன் இணைத்திருப்பதானது முஸ்லிம் மக்களை ஆத்திரப்படுத்துவதுடன், முஸ்லிம்கள் இந்த நாட்டில் எந்தவித உரிமைகளுமற்ற அடிமைச் சமூகம் என்பது உறுதிப்பத்தப்பட்டுள்ளது. 

2௦12 இல் வர்த்தமானி அறிவித்தல் வெளியானபோது மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் அதிகாரமுள்ள அமைச்சராகவும், வன்னி மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராகவும், வடக்கின் வசந்தத்தின் இயக்குனராகவும் அதி உச்ச அரசியல் அதிகாரத்தில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் இருந்தார். அதேபோன்று இப்போது அப்பிரதேசம் விரிவாக்கப்பட்டபோதும் அமைச்சராகவும், வன்னி மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராகவும் அமைச்சர் ரிசாத் வதியுதீனே உள்ளார். 

அப்படியானால் அவரால் ஏன் இதனை தடுக்க முடியவில்லை? இதனை தடுப்பதற்கு தன்னால் முடியாவிட்டால் ஏனைய முஸ்லிம் அமைச்சர்களுடன் சேர்ந்து இந்த பிரச்சினைக்கு ஏன் தீர்வுக்கான முற்படவில்லை? 

தேர்தல் ஒன்று அண்மிக்கின்றபோது இந்த வில்பத்து பிரச்சினை ஊடகங்களை ஆதிக்கம் செலுத்துவது என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில், ஜனாதிபதியின் இந்த வர்த்தமானி அறிவித்தல் சில சந்தேகங்களை தோற்றுவிக்கின்றது. 

இந்த வில்பத்து விரிவாக்கத்தின் மூலம் அமைச்சர் ரிசாத் அவர்களுக்கு பல அநூகூலங்கள் இருப்பதாக கூறப்படுகின்றது. அதாவது இப்பிரதேசத்தில் வீட்டுத்திட்டம், காடு அழிப்பு, மண் அகழ்வு போன்ற ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுக்கள் அமைச்சர் மீது முன்வைக்கப்பட்டது. இந்த வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அந்த பிரதேசங்கள் வன பிரதேசத்துக்குள் அடங்கப்பட்டால் அனைத்து குற்றச் சாட்டுக்களிலிருந்தும் அவரால் தப்பித்துக்கொள்ள முடியும் என்பது அரசியல் அவதானிகளின் கருத்தாகும். 

அதுமட்டுமல்லாது தன்னை ஜனாதிபதியாக்குவதற்கு மகிந்த அரசிலிருந்து ரவுப் ஹக்கீமை விட ரிசாத் பதியுதீன் முதலில் வெளியேறினார் என்ற அனுதாபம் ஜனாதிபதியிடம் காணப்படுகின்ற நிலையில், வன்னியில் ரிசாத்துக்கு தற்போது இழந்து கிடக்கின்ற செல்வாக்கினை எதிர்வரும் தேர்தலில் உயர்த்துவதற்காக நன்றிக்கடன் செலுத்தும் முகமாக இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் காணப்படுகின்றது. 

அத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி அவர்கள் ரஷ்யாவில் வைத்து ஏன் ஒப்பமிட வேண்டும்? அங்கு செல்வதற்கு முன்பு அல்லது நாடு திரும்பிய பின்பு பத்திரத்தில் ஏன் ஒப்பமிடவில்லை? 

மேலும் ஜனாதிபதி வர்த்தமானி பத்திரத்தில் ஒப்பமிட்டார் என்ற செய்தி வெளியாகியும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக எந்தவொரு நடவடிக்கையிலும் இறங்காமல் அமைச்சர் ரிசாத் அவர்கள் இருப்பதும் இன்னும் சந்தேகங்களை வலுவடையச் செய்கிறது. 

இதற்கிடையில் ஜனாதிபதி பத்திரத்தில் கையொப்பமிட்டாலும், இன்று 27.௦3.2௦17 அந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இறுதித்திகதியாகும். அதனால் அந்த வர்த்தமானி பத்திரம் அச்சிடப்பட்டு வெளிவரமுன்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் தலைமையில் சட்டத்தரணிகளும், மற்றும் சிவில் சமூகம் என ஏராளமானவர்கள் தங்களது எதிர்ப்பினை தெரிவித்துள்ளார்கள். 

இந்நிலையில் அமைச்சர் ரிசாத் அவர்களின் தரப்பிலிருந்து அரசாங்கத்துக்கு எதிரான எந்தவிதமான எதிர்ப்புக்களும் பதிவாகவில்லை. எனவே, எதிர்வரும் காலங்களில் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் நடவடிக்கைகளை பொறுத்தே இந்த வில்ப்பத்து விரிவாக்கத்தின் சந்தேகத்தினை உறுதிப்படுத்த முடியும். 
முகம்மத் இக்பால்,
சாய்ந்தமருது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -