எஸ்.அஷ்ரப்கான்-
அரசியலுக்காக உம்றாவையும் ஏனைய வணக்க வழிபாடிகளையும் கூட தாம் என்ன செய்கின்றோம்; என்பதைப் புரிந்து கொள்ளாமல் பகிடியும் கிண்டலும் செய்கின்ற நிலைமை கவலையளிக்கின்றது.
பொதுவாக ஊடகங்கள் மனித அறிவை வளர்ப்பதில் பிரதான பாத்திரத்தை வகிக்கின்றது. துரதிஷ்டவசமாக சமூகவலைத்தளம் என்ற ஊடக வரவு மனித அறிவை வளர்ப்பதற்குப் பதிலாக, மனித அறிவை மழுங்கடிப்பதில் பெரும்பங்காற்றிக் கொண்டிருக்கின்றது.
இந்த சமூக வலைத்தளம் என்ற ஆயுதத்தை சிலர் தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக பிழையான வழிகளில் பாவிக்கின்றனர். விளைவு, மனிதன் முட்டாளாக்கப்படுவது ஒருபுறம், கலாச்சார சீரழிவு மறுபுறமும் - மனிதன் தன் வீட்டிலேயே ரகசியாமாக பார்க்க தயங்குகின்ற CD க்களை பகிரங்கமாக சமூக வலைத்தளத்தில் எப்போது போடுவீர்கள்; என்று தைரியமாக கேட்கின்ற நிலை, அது நான் மட்டும் பார்ப்பதற்கல்ல, என் தாயும் சகோதரிகளும் உறவினர்கள் எல்லோரும் பார்க்கத்தான் பதிவேற்ற சொல்கிறோம்; என்று சொல்லாமல் சொல்வதை அவர்கள் புரிந்துகொள்ளாமல்; ஏனெனில் இன்று smart phone எல்லோருடைய கைகளிலும் தான் இருக்கின்றது. இன்று அதையும்தாண்டி உம்றாவையே கேலி செய்கின்ற நிலை.
இந்த சமுதாய சீரழிவை எங்கே போய்ச் சொல்வது. தங்கள் இயக்கச் சண்டைகளுக்காக இரவு பகலாக பேசும் உலமாக்கள் இந்த சமூக சீர்கேடுகளுக்காக வாய்திறக்க ஆயத்தமில்லை. தலைவர்களின் குறைகளை சுட்டிக்காட்ட இமாம்கள் அனுமதியளித்திருக்கின்றார்கள் என்று கூறிக்கொண்டு அங்குல அங்குலமாக ஒரு தனிமனித தவறுகளை, செயல்களை தொடர்கட்டுரை வரைகிறார்கள். தனது அத்துமீறல்களுக்காக மார்க்கத்தையே விற்கின்ற இவர்களின் இந்த செயல்களைப்பற்றி மார்க்கத்தைப் பாதுகாக்க வேண்டிய உலமாக்களே மௌனிகளாக இருக்கிறார்கள் .
தலைவர்களின் குறைகள் சுட்டிக்காட்டப் படவேண்டும். தலைவர்கள் ஒழுக்கமானவர்களாகவும் இருக்க வேண்டும் . இஸ்லாம் தலைவர்களுக்கு மட்டும் ஒழுக்கத்தை வலியுறுத்தவில்லை. தலைவர்கள் ஒழுக்கம் தவறுகின்றபோது அதனைச் சுட்டிக்காட்டுவதிலும் தவறில்லை. ஆனால் அந்த சுட்டிக்காட்டுதலின் வரம்பு என்ன? அது தொடர்பாக இஸ்லாம் என்ன கூறுகின்றது. உண்மையோ, பொய்யோ, அவற்றை அங்குல அங்குலமாக பகிரங்க சந்தையில் பறையடிப்பதை இஸ்லாம் அனுமதிக்கின்றதா? இது தொடர்பாக உலமாக்களின் கருத்து என்ன? அனுமதிக்கின்றது என்றால் அது அரசியல் தலைவர்களுக்கு மட்டும் பொருந்துமா? அல்லது பள்ளித் தலைவர்கள், பாடசாலைத் தலைவர்கள் உட்பட சமூகத்தின் பலதரப்பட்ட தலைமைத்துவங்களுக்கும் பொருந்துமா? ஏன் உலமாக்கள் மௌனமாக இருக்கின்றார்கள்.
இலங்கை/ மற்றும் சர்வதேச சட்டப்படி, ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கையை ஊடுருவி அதனை அங்குல அங்குலமாக பகிரங்க சந்தையில் ஏலம் விடுவது குற்றமாகும். It's an intrusion into the privacy of a person. Privacy is a human right.
இவை எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். இன்று இவர்கள் எழுதுகின்ற பேசுகின்ற குற்றச்சாட்டுக்கள் இன்று நேற்று எழுந்தவைகள் அல்லவே. இவை சுமார் பத்து வருடங்களுக்கு முன் தொலைக்காட்சிகளிலும் ஏனைய ஊடகங்களிலும் சிலாகிக்கப்பட்டவைதானே. அப்பொழுது மௌனமாக இருந்தவர்கள் , ஆதரவு கொடுத்தவர்கள்தான் இன்று எழுதுபவர்களும் CD பார்க்க துடிப்பவர்களும். ஒரு சிலர் விதிவிலக்காக இருக்கலாம் . எனவே இன்று இவை மீண்டும் சந்தைக்கு வருவதற்கு காரணம் சிலரின் தரங்கெட்ட அரசியலும் சுயநலமும்.
இதனைப் புரிந்துகொள்ளாமல் சமூகம் சீரழிகின்றதே. தலைவர்கள் பொருத்தமில்லை என்றால் அவர்கள் கட்டாயம் மாற்றப்பட வேண்டும். அதே நேரம் அந்தந்த சமூகத்திற்கு ஏற்ற தலைவர்களைத்தான் அல்லாஹ் கொடுப்பான். இன்று ஒரு தலைவரை அழித்துவிட்டு இன்னொருவர் தானே ஏகதலைவனாக முயற்சிக்கின்ற போட்டிதான் பெரும் பண செலவில் நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால் அந்தத் தலைவர்களின் தரமென்ன?
இவற்றையெல்லாம் புரிந்துகொள்ளமால் சமுதாயம் இருட்டில் தடவி தனதும் தனது எதிர்கால சந்ததியினதும் எதிர்காலத்தை சீரழித்துக் கொண்டிருக்கின்றது. இறுதியில் உம்றாவே கேலிப் பொருளாகிவிட்து.
சமூகமே முதலில் நீ திருந்து. உனக்கு சிறந்த தலைமைத்துவத்தை அல்லாஹ் தருவான் .
வை எல் எஸ் ஹமீட்