ஏ.எச்.ஏ.ஹுஸைன்-
இலங்கையின் குளறுபடி அரசியல் கலாசாரத்தினை மாற்றும் நாடு தழுவிய பேரணி வெள்ளிக்கிழமை 24.03.2017 மட்டக்களப்பை வந்தடைந்து பின்னர் அங்கிருந்து அம்பாறை நோக்கிச் செல்லவுள்ளதாக அதன் ஏற்பாட்டுக் குழு சார்பாக இலங்கை அபிவிருத்திக்கான உதவு ஊக்க மையத்தின் இணைப்பாளர் ஏ.சொர்ணலிங்கம் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்,
இலங்கை அரசியலில் வேட்பாளர்களுக்கு வேட்புமனுக்களை வழங்கும்போது தகுதியற்றவர்கள், மோசடிக்காரர்கள், துர்நடத்தையில் ஈடுபடுவோர் மற்றும் ஈடுபடுத்துவோர், தரகுப் பணமும் கையூட்டும் பெறுவோர் தேர்தல்களில் களமிறங்கும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்திருந்த ஒரு சூழ்நிலையில் மார்ச்சு 12 பேரணி இயக்கம் நாடு தழுவிய அதன் பேரணியை ஆரம்பித்து வைத்தது.
மேற்கூறிய நிலைமைகளால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள தாக்கம் காரணமாக வாக்காளர்கள் தேர்தல்களிலிருந்து அந்நியப்பட்டிருத்தலும் ஊழல் பேர்வழிகளுக்கு நாட்டை ஆளும் வாய்ப்புக் கிடைத்தலும் ஒரே சமயத்தில் நிகழ்வதால் நாட்டுக்கும் நாட்டின் எதிர்காலத்திற்கும் ஏற்படும் பாதகமான நிலைமைகளைத் தவிர்த்தல் அல்லது குறைத்தல் என்பதே மார்ச் 12 இயக்கத்தின் நோக்கமாகும்.
அதன்படி மார்ச் 12 இயக்கத்தின் தேசிய பேரணி, நாட்டின் 25 மாவட்டங்களுக்கும் சென்று விழிப்புணர்வு மேற்கொண்டுள்ளது. இப்பேரணி, வெள்ளிக்கிழமை (24.03.2017) மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வருகை தரவுள்ளது.
பொலொன்னறுவை மாவட்டத்திலிருந்து வரும் பேரணி, மட்டக்களப்பு - நாவலடி பிரதேசத்தில் வரவேற்கப்பட்டு, திருகோணமலை வீதியால் அழைத்துவரப்பட்டு, மட்டக்களப்பு நகரில் கூட்டம் நடத்தப்பட்டு, மீண்டும் பெரியகல்லாறு ஊடாக அம்பாறை மாவட்டத்துக்குச் செல்லவுள்ளது.
நாம் தற்போது உள்ளுராட்சித் சபைத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கின்றோம். இதில் ஒழுக்கமற்றவர்கள், மக்களுக்குப் பணம் அல்லது பொருள் கொடுத்து வாக்குகளைப் பெறுபவர்கள். கடந்த காலத்தில் லஞ்சம், ஊழல், அரச சொத்துக்களைக் கையாடல் மற்றும் குற்றமிழைத்தவர்களை, எதிர்வரும் உள்ளுராட்சித்த தேர்தலில், அரசியல் கட்சிகள் வாக்குக் கேட்பதற்கு நியமித்தால் அதனைப் பொது மக்கள் எதிர்க்;க வேண்டும்.
சிறந்த சிந்தனையாளர்கள், மக்களுக்காக மக்களோடு சேர்ந்து சேவை செய்யும் பிரநிதிகளையே தெரிவு செய்ய வேண்டும். இந்த நிலை மாகாண சபை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிலும் முன்னெடுக்க வேண்டும். இவ்வாறான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதே, எமது அமைப்பாகும்.
அத்தோடு, அசிங்கமான களவான தமது வாக்குக்காகக் கூடிய தொகைகளை செலவழித்து விளம்பரம் பொருள் உதவி வழங்கும் அரசியல்வாதிகளையும் நிராகரிக்க வேண்டும்' 'மார்ச் 12' என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட போது, நாட்டிலுள்ள சகல கட்சிகளின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள், அவ் இயக்கத்தின் பிரேரணைகளில் ஒப்பமிட்டுள்ளனர்.
ஓர் அரசியல் கட்சி நல்ல வேட்பாளர்களை நிறுத்தும்போது அது நமக்கு நன்மையாகவும் கூடாத வேட்பாளர்களை நிறுத்தும்போது அது நமக்குத் தீமையாகவும் அமைந்துவிடும். இது எமக்கும் எமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்கும் அத்துடன், நாட்டின் எதிர்காலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே நாம், உள்ளுராட்சி சபைத் தேர்தலின்போது அரசியல் கட்சிகள் தகுதியானவர்களுக்கு மாத்திரம் வேட்புமனு வழங்க வேண்டுமெனவும் வேட்புமனு வழங்கும்போது மார்ச்சு 12 இயக்கத்தின் நியதிகளுக்கமைய வழங்க வேண்டுமெனவும் அழுத்தம் கொடுத்தல் வேண்டும்.
நாட்டுப் பிரஜைகளின் வகிபங்கை வலுவாக்கி, சாதுரியமான வாக்காளரை உருவாக்குவதற்குத் தன்னை அர்ப்பணித்துத் தகுதியானவர்களுக்கு மட்டும் வேட்பு மனுக்கள் வழங்கவுமென, அரசியல் கட்சிகளை வலியுறுத்தி, நாடளாரீதியில் இந்நிகழ்ச்சித் திட்டம் நடைமுறைப் படுத்தப்படவுள்ளது' என்றார்.