முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்-
முசலிப்பிரதேசம் யுத்தத்தால் சின்னாபின்னமாக்கப்பட்ட பாரம்பரியப்பிரதேசங்களில் முஸ்லிம்களைப்பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு பிரதேசம் .1990 பலவந்த இனச்சுத்தீகரிப்பின் மூலம் இங்கிருந்த மக்கள் யாவரும் வெளியேற்றப்பட்டனர்.அதன்பின் அவர்களின் அசையும், அசையா சொத்துக்கள் யாவும் ஒரு திட்டமிட்ட குழுவால் அபகரிக்கப்பட்டது.வீடுகளின் கற்கள், நிலைகள், கதவுகள், யன்னல்கள், ஓடுகள்,கைமரங்கள் யாவும் ஒரு ஆயுதக்குழுவால் டென்டர் மூலம் சிலருக்கு வழங்கப்பட்டு அவர்களால் அகற்றப்பட்டு விற்கப்பட்டுள்ளன.இதை யார் செய்தது.யார் செய்வித்தது என்பது அங்கு வாழ்ந்த தர்மத்தை நேசிக்கும் தமிழ் மக்களுக்குத் தெரியும்.
வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீளத்திரும்ப முடியாது என்ற அடிப்படையிலேயே யாவும் நடைபெற்றன.2002 இல் முஸ்லிம்கள் மீளக்குடியேறலாம் என்ற அனுமதி புலிகளால் வழங்கப்பட்டது.இதனை நம்பி மிகச்சிறிய குழுக்கள் முசலிப்பிரதேசத்தில் குடியேறின.உ-ம் முசலி,கூளாங்குளம்,மணக்குளம்,சிறுக்குளம் இன்று கணிசமான அளவான குடும்பங்கள் முசலிப்பிரதேச அனைத்துக் கிராமங்களிலும் மீளக்குடியேறியுள்ளன.
முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விருப்பை அறியும் பரிசோதனையாகவும் இது அமைந்திருக்கலாம்.
மீள்குடியேற்றத்தில் உறைவிடம், காணி,குடிநீர், விவசாயம், தொழில்,போக்குவரத்து வசதி,சுகாதாரம்,கல்வி,பாதுகாப்பு,என்பன பெரிதும் செல்வாக்குச் செலுத்துகின்றன.இவற்றில் பின்னடைவு காணப்பட்டால் அது நிச்சயமாக மீள்குடியேற்றத்தைத் தடுக்கும்.இது முஸ்லிம் மீள்வருகையை விரும்பாத சக்திகளுக்கு பெரு வெற்றியாக இருக்கும்.
குடிநீர்ப்பிரச்சினை,காணி இன்மை,வீடுகளின்மை,கல்வி அடைவுமட்டம் திருப்தி இன்மை.தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகள்,க.பொ.த.உயர் தரம்.க.பொ.த.சாதாரண தரம்.முசலிப்பிரதேச வைத்தியத்துறை மிகவும் பின்தங்கிக் காணப்படுகின்றமை,வைத்தியர்கள் இன்மை,வருமானம் பெறும் தொழில் இன்மை.போன்ற காரணங்களை மீளக்குடியேறப் பின்னிற்கும் மக்கள் அடுக்கிக்கொண்டு போகின்றனர்.
இவற்றை இலகுவில் தீர்க்கும் பலம் வடமாகாண சபைக்கு இருந்தும் ,மாற்றாந்தாய் மனப்பாங்குடன் ஏன் செயற்படுகிறது.
மீளக்குடியேறிய முஸ்லிம் மக்களுக்கு போதிய சுகாதார வசதிகள் இன்றி முசலிப்பிரதேசத்தில் வாழச்செய்வது ஒரு வரலாற்றுத் தவறாகும்.சிலாவத்துறை வைத்தியசாலையில் வைத்தியர் எவருமில்லாதிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.பைசல்காசிம் என்று ஒரு பிரதி சுகாதார அமைச்சரும் உள்ளாராம்.இவரால் ஏதாவது செய்யமுடியுமா ? அல்லது எம்மிடம் பலமில்லை எல்லாம் வடமாகாண சபை வசமே என்பாரா ?
முசலிமண்ணை தாயகமாகக் கொண்ட வைத்தியர்களுக்கு அங்கு கடமை புரியும் எண்ணம் இதுவரை தோன்றாதிருப்பது பரிதாபகரமானது.இவர்களை கட்டாய சேவையில் அங்கு அனுப்ப வேண்டும்.தாய்மண்ணில் கடமைபுரிய மறுத்துவிட்டு புத்திஜீவிகள்,வெண் உடுக்கள் என்றும் மேடைகளில் உலாவுவதில் என்ன பயனுண்டு.
வடமாகான சபை தன்னால் முடியால் விட்டால் சிலாவத்துறை வைத்தியசாலையையும்
முசலிக்கல்வி வலயத்தையும் நேரடியாக மத்திய அரசிடம் ஒப்படைத்துவிட்டால் சிறப்பாக இருக்கும் . அதன்பின்பு சிலாவத்துறை வைத்திய சாலையும்,முசலிக்கல்வி வலயமும் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும்.