தேசிய ரீதியில் முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் - சவால்களை எதிர்கொள்ள முஸ்லிம் கூட்டமைப்பு ஒன்றினை உருவாக்க வேண்டும் என வலியுறுத்திய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், அதனை முஸ்லிம் காங்கிரஸ் முன்னின்று செய்யுமாயின், முஸ்லிம் கூட்டமைப்பு உருவாக்கத்துக்கு தேவையான சகல ஒத்துழைப்புக்களையும் தான் செய்வதாக உறுதியளித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அதிர்வு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது;
சமகாலத்தில் முஸ்லிம்கள் தேசிய ரீதியில் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் மற்றும் சவால்களை எதிர்கொள்ள முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும். இது காலத்தின் தேவையாகவும் உள்ளது.
இதற்கு முஸ்லிம் கூட்டமைப்பு ஒன்று தோற்றுவிக்கப்பட வேண்டும். இதனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவமே முன்னின்று செய்ய வேண்டும். அது அதற்குத் தயார் எனில் ஏனைய தரப்புக்களை ஒன்றிணைக்கும் பொறுப்பினை நான் ஏற்பேன்.
அது மட்டுமல்லாது, முஸ்லிம் கூட்டமைப்பு உருவாக்கப்படுமாயின் அதற்குத் தேவையான செயலகத்தை உருவாக்குவதற்கு தான் முழு ஒத்துழைப்பையும் செய்வேன் எனவும் இதன்போது இராஜாங்க அமைச்சர் உறுதியளித்தார்.