கிழக்கு சுகாதார அமைச்சர் நசீர் எம்.பியாகின்றாரா?

எம்.எம்.நிலாம்டீன் - ஆய்வாளர்- 
ம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் (நியமன எம்பி ,தேசிய பட்டியல்) ஆசனம் வழங்கும் விடயமானது கடந்த 17 ஆண்டுகளாக ஹக்கீம் இன்று நாளை நாளை மறுதினம் என்று அம்புலிமாமா கதையாகவும் அலிபாபா கதையாகவும் இருந்து வரும் நிலையில் இனிமேலும் இந்த கதை எடுபடாது கொடுத்தே ஆக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்.

அந்த வகையில் தற்போது இருக்கும் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நசீர் அவர்களுக்கு தேசிய பட்டியல் எம்பியை வழங்கும் முடிவுக்கு வந்துள்ளதாக அறிய வருகின்றது..இது பொய் வதந்தி கற்பனை கவிதை என்றால் மறுப்பு செய்தி ஒன்றை ஹக்கீம் வெளியிடட்டும்.

தேசிய பட்டியல் ஆசனம் -2 

முஸ்லிம் காங்கிரசில் 2 தேசிய பட்டியல் ஆசனம் உள்ளது.ஒன்று கிண்ணியா தௌபீக் மற்றையது காலி சல்மான் சட்டத்தரணி.இந்த இரண்டு எம்பிக்களில் ஒன்று அடுத்தவருக்கு அடிக்கடி மாற்றம் செய்யப்படும் எம்பியாகும் என்ற எழுதப் படாத சட்டம் ஒன்று உள்ளது. அதிலும் குறிப்பாக கிண்ணியா எம்பி என்பது அட்டாளைச்சேனை.வாளைச்சேனை மற்றும் வன்னி என்று சுழற்சி முறையில் சுற்ற வேண்டிய எம்பியாம்.

ஹக்கீமுக்கு ஒரு பாரிய பொறுப்புள்ளது .சல்மான் சட்டத்தரணி மற்றும் மன்னார் பாயிஸ் (ஜனாதிபதி சட்டத்தரணி) ஆகிய இருவரையும் எம்பியாக்கி அழகு பார்க்க வேண்டிய கடமையில் உள்ளார் .காரணம் ஹக்கீமின் தலைமை பதவிக்கு ஆபத்து வந்த நேரங்களில் மற்றும் ஹக்கீம் தனது இஷ்டப்படி உயர் பீட உறுப்பினர்களை மாற்றுவது மற்றும் ஹசன் அலியின் செயலர் பதவி சம்மந்தமான சட்ட நுணுக்கங்கள் சட்ட சிக்கல்களை தீர்த்து வைப்பது போன்ற பணிகளில் இந்த இருவரின் பொறுப்பு இருந்து வருகின்றது .அதனால் நியமன எம்பி என்ற செஞ்சோத்துக் கடனை ஹக்கீம் செய்ய வேண்டிய பாரிய பொறுப்பில் உள்ளார். அடுத்த வரும் பொது தேர்தலில் கிடைக்கும் போனஸ் ஆசனத்தில் பாயிஸ் சுக்கான செஞ்சோத்துக் கடனை கொடுக்கும் வாய்ப்பு ஒன்று அமையலாம்.

அட்டாளைச்சேனைக்கு எம்.பிக்கான அழுத்தம் 

அட்டாளைச்சேனைக்கு எம்பி கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஹக்கீம் வந்தாலும் எனக்கு வேண்டும் என்று வரிந்து கட்டிக் கொண்டு ஒரு புறம் ஒருவர் மறுபுறம் மற்றவர் இப்போது புதிதாக இரண்டு நபர்கள் இந்த இரண்டு நபர்களால் எந்த நன்மைகளும் அட்டாளைச்சேனைக்கு வந்தது கிடையாது..

ஆனால் புதிதாக எம்பி வேண்டும் என்று ஹக்கீமிடம் படையெடுத்து வருகின்றார்கள்..ஆக இப்போது அமைச்சர் நசீர் தவிர்ந்து அட்டாளைச்சேனையில் இருந்து இப்போது 2 அரசியல்வாதிகளுடன் முக்கிய பொறுப்பில் உள்ள 2 அரச உயர் அதிகாரிகளும் இரகசியமாக இணைந்துள்ளார்கள்.

அட்டாளைச்சேனைக்கு எப்போது எம்பி வேண்டும் என்ற அழுத்தம் அதிகரிக்கின்றதோ அப்போதெல்லாம் வைக்கோல் பட்டறைகள் இப்படி காவடி எடுப்பது என்பது கடந்த 17 ஆண்டுகளாக நன்றாக நடைபெற்று வருகின்றது. .இந்த காவடி ஆர்ப்பாடத்தை பயன்படுத்தி ஹக்கீம் விடும் காமடி உங்களுக்குள் ஒன்றுமை இல்லையே என்ற வார்த்தையை பயன்படுத்தி எம்பி கொடுக்காமல் தப்பித்து வருவது வாடிக்கை. அட்டாளைச்சேனைக்கு எம்பி கொடுக்க வேண்டும் என்ற நெருக்கடி ஒன்று அதிகரித்து உச்ச கட்டத்தை அடைந்த போது நசீருக்கு மாகாண அமைச்சை கொடுத்து ஹக்கீம் தப்பித்துக் கொண்டார்..இப்போது அட்டாளைச்சேனைக்கு எம்பி வழங்க வேண்டிய பாரிய பொறுபுக்குள் ஹக்கீம் தள்ளப்பட்டு விட்டார்.காரணம். 

ஹசன் அலி அன்சீல் போர்க்கொடி

ஹக்கீமுக்கு எதிராக முன்னாள் செயலர் ஹசன் அலி மற்றும் அட்டாளைச்சேனை முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி அன்சீல் மற்றும் பலர் ஒரு பரப்புரை களத்தை ஆரம்பித்து விட்டார்கள்.ஹக்கீம் மீது பலவகையான குற்றச்சாட்டுகள் பொது மேடைகளில் சொல்லப்பட்டு வருகின்றது.

இதில் ஹசன் அலி என்பவர் ஹக்கீம் மீது பழி சொல்ல குற்றம் சொல்ல எந்தவொரு அருகதையும் இல்லை என்பது வேறு கதை .காரணம் ஹக்கீமின் அத்தனை பாவங்களுக்கும் முழுப் பங்காளி ஹசன் அலி இல்லையா ? இத்தனை காலங்கள் ஒன்றாக இருந்து விட்டு இப்போது ஹக்கீம் அதிகாரம் கொண்ட செயலர் மற்றும் எம்பி பதவி எந்தவொரு நிலையிலும் தரமாட்டார் என்ற உண்மையை இப்போது உணர்ந்து கோமாவில் இருந்து குணமாகி கூக்குரல் விடுவது சீ இந்தப் பழம் புளிக்கும் கதை இல்லையா ? .ஹசன் அலி குறித்து ஆதாரபூர்வமான பல விடயங்களுடன் நீண்ட தொடர் கட்டுரை பின்னர் எழுதவோம்.

காரணம் கடந்த 5 வருடங்களாக ஹக்கீம் பற்றி பல நீண்ட கட்டுரைகள் எழுதியவன் என்ற வகையில் ஏராளமான தகவல்கள் எம்மிடம் உள்ளது.அவைகளை பின்னர் பார்ப்போம்.

அன்சீல் சொல்லும் குற்றச்சாட்டுகள் பலமாகவுள்ளது 

ஆனால் சட்டத்தரணி அன்சீல் சொல்லும் பல விடங்களில் சில உடன்பாடுகள் உள்ளது. அவர் சொல்லும் குற்றச்சாட்டுகளில் அட்டாளைச்சேனைக்கு எம்பி வழங்க வேண்டும் என்ற ஒரு உறுதியான நிலைப்பாட்டில் அன்று தொட்டு இன்று வரையும் ஹக்கீமுக்கு ஒரு அழுத்தம் கொடுத்துள்ளார் என்பதை பகிரங்கமாக சொல்லுகின்றார். 

முஸ்லிம் காங்கிரஸ்சில் உள்ளவர்களில் அன்சீல் என்பவர் கொஞ்சம் இறைபக்தி அதிகம் கொண்டவர். அன்சீல் எடுத்துள்ள இந்த போராட்டம் கொஞ்சம் நியாயம் உள்ளது போல் உள்ளது.அன்சீல் நினைத்தால் ஹக்கீமிடம் நல்ல பெயர் பெற்று ஒரு இருப்பை காப்பாற்றி இருக்கலாம்..ஆனால் ஹக்கீமை எதிர்க்க துணிந்து விட்டார் ..பார்க்கலாம் .

அன்சீல் எதிர்ப்பை சமாளிக்க அட்டாளைச்சேனைக்கு எம்பி 

அன்சீல் செய்யும் பரப்புரை என்பது பாலமுனை மட்டுமல்லாது அட்டாளைச்சேனையிலும் எதிர்காலத்தில் தாக்கம் செலுத்தலாம்.விரைவில் கிழக்கு மாகாணத் தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில் அன்சீல் செய்யும் பரப்புரை பாலமுனையில் ஒரு தாக்கத்தை செலுத்தும் நிலை அமைந்துள்ளது. 

அதாவது ஹக்கீம் அட்டாளைச்சேனைக்கு எம்பி கொடுக்கவில்லை அதற்கான அழுத்தம் ஒன்றை ஹக்கீமுக்கு கொடுத்தேன் அதை அவர் தட்டிக்க கழித்து வந்தார் என்று பரப்புரை செய்யும் போது அது வாக்குச் சரிவை கொண்டு வரும்.எனவே அன்சீல் கம்பனியின் பரப்புரையை முறியடிக்க வேண்டிய தேவை ஹக்கீமுக்கு உள்ளது.

ஹக்கீம் ஹசன் அலியை வேண்டுமானால் குறைத்து மதிப்பு செய்திருக்கலாம்.காரணம் ஹசன் அலிக்கென்று ஒரு தளம் களம் கிடையாது .இருந்தால்.ஹசன் அலியின் ஊரில் அவர் உடன் பிறந்த சகோதரர் ஒருவரின் தலைமையில் ஹசன் அலி கம்பெனிக்கு எதிராக ஒரு பொதுக் கூட்டம் நடக்குமா? ஆனால் பாலமுனையில் அன்சீல் ஒரு களத்தை தளத்தை அமைத்துள்ளார் .அந்த தளம் களம் கொஞ்சம் வாக்குச் சரிவை கொடுக்கும்.

பாலமுனையின் தாக்கம் சற்று அடுத்த ஊர்களில் வைரஸ் போன்று பரவலாம் .இதன்மூலமாக ஹக்கீம் அம்பாறையில் ஒரு வாக்குச் சரிவை சந்திக்க வேண்டும்.குறிப்பாக எதிர்வரும் கிழக்கு மாகாண தேர்தலில் குறைந்தது 1 மாகாண சபை உறுப்பினரை இழக்கும் சரிவை கொடுக்கும்..அதே போன்று எதிர் வரும் பொது தேர்தலில் 3 எம்பி பெறுவதில் சரிவு வரலாம். 

இவைகளை கருத்தில் கொண்டு அன்சீல் எடுத்துச் செல்லும் பரப்புரையை முறியடிக்க வேண்டிய தேவை ஹக்கீமுக்கு வந்துள்ளது. அன்சீலை பாலமுனைக்குள் முடக்க வேண்டுமானால் அட்டாளைச்சேனையை திருப்திபடுத்த வேண்டும்.அதற்கு ஒரே வழி அட்டாளைச்சேனைக்கு எம்பி வழங்குதல்.

அதனால் அட்டாளைச்சேனைக்கு எம்பி வழங்கும் முடிவுக்கு ஹக்கீம் வந்திருக்கலாம்.

யாரின் எம்பியை நசீருக்கு வழங்குவது ?

சல்மானின் எம்பியை இப்போது எடுக்கும் நிலையில் ஹக்கீம் இல்லை .அதனால் கிண்ணியா எம்பியை மீளப்பெறும் நோக்கம் ஹக்கீமுக்கு வந்துள்ளது .தற்போது ஹக்கீம் சவுதி அரேபியா சென்றுள்ளார் .கூடவே சல்மான் மற்றும் தௌபீக் ஆகியோரையும் அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு 3 பேரும் பேசி ஒரு முடிவுக்கு வரவுள்ளார்கள்.சல்மானை பொறுத்த மட்டில் ஹக்கீம் கேட்டால் கொடுத்து விடுவார். நாளை மறுதினம் நாடு திரும்பும் ஹக்கீம் இந்த அட்டாளைச்சேனை எம்பி யார் ? யாரின் எம்பியை கொடுப்பது என்ற ஒரு தீர்வுக்கு வந்திருப்பார்.

தௌபீக்கை பொறுத்த மட்டில் ஒரு காரணம் இல்லாது ஒரு அதிகாரம் இல்லாது தற்போதய எம்பியை கொடுப்பது என்பது தௌபீக்கின் எதிர்கால அரசியல் இருப்புக்கு பிழையான முடிவாக அமையலாம்.

அதனால் தௌபீக்கை கிழக்கு மாகாண தேர்தலில் களமிறக்கும் நோக்கில் கிழக்கு தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதும் தௌபீக் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

எப்போது கிழக்கு மாகாணம் கலையும்

கிழக்கு மாகாணத்தின் ஆயுட்காலம் என்பது எதிர்வரும் செப்டெம்பர் 24 ஆம் திகதியுடன் முடிவடைகின்றது.ஆனால் இலங்கையில் தொடர்ச்சியாக தேர்தல்கள் பின்போடப்படுவது ஜனநாயகம் அல்ல அதனால் இந்த அரசு தேர்தல்களை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா இலங்கை மீது கவலையை தெரிவித்துள்ளது.

அதனால் இலங்கை அரசு கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கான தேர்தல் இன்னும் மூன்று மாதங்களில் நடத்தப்படும் என்று ஒரு தகவல்கள் வெளியாகியுள்ளன.

அப்படியானால் கிழக்கு மாகாணம் கலைக்கப்பட்ட பின்னர்தான் அட்டாளைச்சேனைக்கு எம்பி வழங்கப்படுமா? என்பது ஒரு கேள்விக்குறி! அல்லது தற்போது அம்பாறை மாவட்டத்தில் தோன்றியுள்ள ஹசன் அலி கம்பனியின் பரப்புரை நெருக்கடிக்கு அவசரமாக அவசியமாக சல்மானின் எம்பியை கொடுக்கவும் வாய்ப்புள்ளது.ஆக அட்டாளைச்சேனைக்கு எம்பி கொடுத்து ஹசன் அலி அன்சீல் எடுத்து செல்லும் பரப்புரைக்கு ஒரு தடை போடும் நிலை வந்துள்ளது.

வன்னிக்கு எம்பி 

முஸ்லிம் இன அரசியல் என்றாலே குத்து வெட்டு குழிபறிப்பு படையடுப்பு சூதுவாது யாரை வெட்டியாவது பதவியை அடைய வேண்டும் என்ற முடிவில்தான் நிற்கும். வன்னியில் அமைச்சர் ரிசாத் அணியில் வெற்றியடைந்த முன்னாள் எம்பி ஹுனைஸ் பாரூக் ஹக்கீம் அணியில் இணைந்து விட்டார் .

இக்கரைக்கு அக்கரை பச்சை. எதிர்வரும் பொது தேர்தலில் அமைச்சர் ரிசாத்தின் வெற்றிக்கு குறுக்கே இந்த ஹுனைஸ் பாரூக்கை முற்று முழுதாக பயன்படுத்தும் திட்டம் ஹக்கீமுக்கு உள்ளது.அதாவது எதிர் வரும் பொது தேர்தலில் ரிசாத்தின் வாக்கு வங்கியை உடைக்க முடிந்த வரை இந்த ஹுனைஸ் எம்பியை ஒரு பகடைக்காயாக பாவிக்கும் திட்டம் ஹக்கீமுக்கு உள்ளது. கிடைத்தால் ஹுனைசை எம்பியாக்கி ஒரு பாதி அமைச்சு கொடுத்து ரிசாத்தின் அரசியல் முன்னடுப்புக்கு ஒரு முட்டுக் கட்டை போடுவது என்பதுதான் ஹக்கீமின் மெகா பிளான் .

அதற்காக ஹுனைஸ் பாரூக்கை எம்பியாக நியமனம் செய்ய வேண்டும் பொது தேர்தலுக்கு முன்னர் ஒரு வருடமாவது ஹுனைஸ் பாரூக் ஹக்கீமிடமிருந்து எம்பி பெறும் நிலை உள்ளது. அப்போது சிலவேளை சல்மான் எம்பி பதவி போகலாம் .ஆனால் அதுவல்ல நோக்கம் சல்மான் எம்பி ஓய்வூதியம் பெறும் காலமான 5 வருடங்கள் கடக்க வேண்டும்.ஆக 5 வருடங்கள் கடந்துதான் சல்மான் எம்பி பதவி கைமாறும்.அதனால் தௌபீக் எம்பியின் பதவிதான் நசீருக்கு மாறுவதற்கான அதிக வாய்ப்புள்ளது.

அல்லது சல்மான் எம்பியை வன்னிக்கும் தௌபீக் எம்பியை அட்டாளைச்சேனைக்கும் வழங்கும் வாய்ப்பும் உள்ளது .அதாவது இரண்டு எம்பிக்களையும் பகிர்ந்தளிக்கவும் வாய்ப்புள்ளது ..

அதனால் நசீருக்கு வழங்கும் எம்பியை ஒரு வருடம் கடந்து வன்னிக்கு மாறலாம் அல்லது நசீரை மாகாண சபை தேர்தலில் குதித்து வெற்றி பெற்ற பின்னர் எம்பி தருவேன் என்று மீண்டும் அம்புலிமாமா கதையை ஹக்கீம் சொல்லவும் வாய்ப்பு உள்ளது .

ஆனால் பொத்துவில் தொகுதி தேர்தல் வலயத்தில் நசீரின் தேவை ஹக்கீமுக்கு மிக அவசியமாக தேவைப்படும்.பொத்துவில் தொகுதி தேர்தல் வலயத்தில் ஒரு பலமான எதையும் எதிர்கொள்ளும் ஆட்பலம் கொண்ட நசீரின் தேவை என்பது மிக முக்கியமானது .இந்த சக்தி இல்லை என்றால் இப்பகுதியில் ஹக்கீம் நுழைவது சிரமம் என்ற நிலை உருவாகும்.

கிண்ணியாவில் மகிந்தவின் கிரீஸ் பூதம் கூத்துக்கள் காட்டிய போது கிண்ணியாவுக்கு வருகை தந்த ஹக்கீமை மாற்றுக் குழுவினர் ஒன்று ஹக்கீமுக்கு தொல்லை கொடுத்து புஹாரி பள்ளிக்குள் கைதி போன்று வைத்த கதையாக பொத்துவில் தொகுதி தேர்தல் வலயத்தில் நடக்கலாம்.அப்படிப்பட்ட நிலைமைகளில் ஒரு துணைப்படை போன்று ஹக்கீமை பாதுக்காக்கும் கேடயமாக நசீரை ஹக்கீம் பயன்படுத்தக்கூடிய திட்டமும் ஹக்கீமுக்கு இருக்கலாம் இவைகளை எல்லாம் கருத்தில் கொண்டு ஹக்கீம் நசீருக்கு எம்பி பதவி வழங்கலாம். பார்ப்போம் ..

இதேநேரம் நசீர் விட்டுச் செல்லும் சுகாதார அமைச்சை அடைவர்தற்கு அம்பாறையில் பழைய உறுப்பினர் ஒருவரும் புதிய உறுப்பினர் ஒருவரும் காய் நகர்த்துவதாக தகவல் .இதேநேரம் இந்த சுகாதார அமைச்சை ஹக்கீம் திருமலைக்கு வழங்கும் ஒரு நிலையும் உள்ளதாம்.

எமக்கு கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் தந்துள்ள ஆய்வுஇது..அதனால் யாருக்கும் ஆதரவு தெரிவித்து இந்த ஆய்வை எழுதவில்லை என்பதுடன் நான் எழுதி நான் சொல்லி யாருக்கும் எம்பி வழங்குவதில்லை என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -