காரைதீவு நிருபர் சகா-
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற க.பொ.த. உயர்தர முதலாம்தவணைப்பரீட்சையின் சங்கீதபாடத்திற்கான வினாப்பத்திரம் தொடர்பில்குழறுபடி இடம்பெற்றுள்ளது.
அதாவது கடந்தாண்டு 2016இல் நடைபெற்ற பரீட்சையின்போது விநியோகிக்கப்பட்ட அதே வினாப்பத்திரம் 2017இல் இம்முறையும் ஆண்டைமாற்றிவிட்டு பரீட்சார்த்திகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பில் அங்கிருந்து இலங்கைத்தமிழர் ஆசிரியர் சங்கத்தலைவர் வி.ரி.சகாதேவராஜாவிடம் பல முறைப்பாடுகள் கிடைக்கப்
பெற்றன.
அதனையடுத்து அவர் மட்டக்களப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் கணபதிப்பிள்ளை பாஸ்கரனிடம் தொடர்புகொண்டு இவ்வினாப்பத்திர குழறுபடி தொடர்பில் ஆட்சேபம் தெரிவித்து கலந்துரையாடினார்.
அவர் நடைபெற்ற தரம் 12 தரம்13ற்கான சங்கீதபாட பரீட்சையை ரத்துச்செய்தார்.அத்துடன் இதற்கான பதில்பரீட்சை பிறிதொரு தினத்தில் நடைபெறுமெனவும் தெரிவித்தார்.
மட்டுவலயம் தயாரித்த வினாப்பத்திரங்கள் மட்டு.வலயம் மற்றும் மட்டு.மேற்குவலயம் பட்டிருப்புவலயம் ஆகிய வலயங்களுக்கு விநியோகிக்கப்பட்டு முதலாந்தவணைப்பரிட்சை நடைபெற்றுவருகின்றது.
அந்த அடிப்படையில் சங்கீதப்பரீட்சையும் மேற்படி வலயங்களில் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது கடந்தாண்டு வினாப்பத்திரம் விநியோகிக்கப்பட்டமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. அதனைத்தொடர்ந்து இப்பரீட்சை ரத்துச்செய்யப்பட்டன.
தமிழர்ஆசிரியர்சங்கத்தலைவர் வி.ரி.சகாதேவராஜா மேலும் இது தொடர்பில் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் என்ன நடந்தது என்பது பற்றி தெரியப்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதற்கு பதிலளித்த பணிப்பாளர் பாஸ்கரன்;
நடந்தது பிழைதான். இது தொடர்பாக நான் பூரணமாக விசாரித்தேன்.
சங்கீத ஆசிரியை இவ்வாண்டுக்கான வினாப்பத்திரத்தை தயாரித்து அச்சகத்திடம் கொடுத்துள்ளார். ஆனால் அவர் அதைப்பொருட்படுத்தாமல் கடந்தாண்டு பத்திரத்தை எடுத்து ஆண்டையும் மாதத்தையும் மாற்றிவிட்டு அச்சடித்து பக்கட் பண்ணியிருக்கிறார்.அதுவே விநியோகிக்கப்பட்டுள்ளது.
உண்மையில் இது அச்சகத்தாரின்பிழை. எனவே இப்பரீட்சையை ரத்துச்செய்துவிட்டு பிறிதொரு தினத்தில் இவ்வாண்டுக்கான புதிய வினாப்பத்திரத்தை நடாத்த நடவடிக்கைஎடுத்துள்ளேன். என்றார்.
தலைவர் சகா கூறுகையில் இப்படியான பொறுப்பற்ற முறையில் அச்சிடும் அச்சகத்தாருக்கு இனிமேல் அச்சிடும் பணியை வழங்கவேண்டாம்.என்றார்.