கம்பஹா: 2,192 பேருக்கு டெங்கு தாக்கம் ; மாக்கொல வடக்கிலும் பரவும் அபாயம்

மினுவாங்கொடை நிருபர்-
ம்பஹா மாவட்ட பியகம தொகுதியில், மாக்கொல தெற்குப் பிரதேசத்தில் டெங்கு நோய் அதி தீவிரமாகப் பரவியுள்ள நிலையில், இந் நோய் மாக்கொல வடக்குப் பகுதிக்கும் பரவாமல் இருப்பதற்கான துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் டாக்டர் முஹம்மத் தெளபீக் தெரிவித்துள்ளார். 

மாக்கொல முஹியித்தீன் ஜும் ஆப் பள்ளிவாசலில், கடந்த வெள்ளிக்கிழமை ஜும் ஆத் தொழுகையின் பின்னர், டெங்கு நோய் ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வுக் கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட டாக்டர் தெளபீக், மக்களுக்கு இது தொடர்பில் விரிவான விளக்கமளித்தார்.

டாக்டர் இங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கும்போது; சுகாதார அமைச்சினாலும், டெங்கு நோய் ஒழிப்புப் பிரிவினாலும் மாத்திரம், இந்த நோயை முற்றிலும் ஒழிக்க முடியாது. எனினும், தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவினர், இந் நாட்களில் பியகம தொகுதியில் டெங்கு ஒழிப்பு விழிப்பூட்டல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு இப்பிரதேச மக்கள், தமது பூரண ஒத்துழைப்பை வழங்க முன் வரவேண்டும். மக்கள் பூரண பங்களிப்பை வழங்காமல் இருப்பதும், டெங்கு ஒழிப்பில் கவனயீனமாக இருப்பதுமே, டெங்கு நுளம்புக் குடம்பிகளின் பெருக்கத்திற்குப் பிரதான காரணமாக அமைகின்றது. 

வீடுகள் மிகவும் அழகாக இருக்கலாம். ஆனால், சுற்றாடல் டெங்குக் கிடங்குகளாக இருப்பது, மிகப் பயங்கரமான ஆபத்துக்களையும், விளைவுகளையும் உண்டாக்கும். எனவே, மக்கள் டெங்கு ஒழிப்பினால் ஏற்படும் நன்மைகளைக் கருத்தில் கொண்டு, வீட்டின் சுற்றுச் சூழலையும் எப்பொழுதும் எந்நேரமும் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பது மிக மிக அவசியம். இப் பிரதேச மக்கள் பெரும் அச்சம் கொண்டுள்ள நிலையில், இங்கு டெங்கு நோய் பரவுவதைத் தடுப்பதற்கு, சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால், மக்களை விழிப்பூட்டும் பாரிய வேலைத் திட்டங்கள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

இவ் வருடத்தின் இதுவரை காலப் பகுதிக்குள், கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் 2,192 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இந் நிலையில், சுகாதார அமைச்சினால் கம்பஹா மாவட்டம் உள்ளிட்ட நாடளாவிய ரீதியில், மீண்டும் டெங்கு நோய் தொடர்பில் மக்களைத் தெளிவூட்டுவதற்கு, மார்ச் மாதம் 29 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி வரை, டெங்கு ஒழிப்பு வாரமாகப் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இவ் வார காலத்திற்குள்ளும் பியகம தொகுதி வாழ் சகல இன மக்களின் பூரண ஒத்துழைப்பை அவசியமாக நாம் எதிர்பார்க்கிறோம் என்றார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -