முஸ்லிம் காங்கிரஸ் எனும் மக்கள் பேரியக்கம் பாதுகாக்கப்பட வேண்டும்-Ex தவிசாளர் சேகு இஸ்ஸதீன்

இனாமுள்ளா மசிஹுதீன் -

நேற்றுமாலை (01) அவசரமாக என்னை சந்திக்கவென முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் ஸ்தாபகத் தவிசாளர் சேகு இஸ்ஸதீன் அவர்கள் கொழும்பிற்கு வந்து ஒரு வேண்டுகோள் விடுத்தார் : 

“இனாம், இந்த தீர்க்கமான காலகட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் எனும் மக்கள் பேரியக்கம் பாதுகாக்கப்பட வேண்டும், முஸ்லிம் தலைமைகளை ஒருங்கிணைக்கின்ற பணி செய்யப்படல் வேண்டும் என நீங்கள் விடுக்கும் அழைப்புக்களை அவதானித்தேன் அவற்றைச் சாத்தியப் படுத்த நீங்கள் “முஸ்லிம் காங்கிரஸ்” அதிஉயர் பீடத்தில் பழையபடி சேர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஒரே வேண்டுகோளை முன்வைக்கவே தான் கொழும்பு வந்தேன்.” 

எனது பதில்: “ முதலாவதாக என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி, என்றாலும், நேரடி தீவிர அரசியலில் எனக்கு ஆர்வம் அறவே இல்லை என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும், ஏற்கனவே முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் பிரதானிகள் என்னிடம் கேட்டுள்ளார்கள், மிகவும் மட்டரகமான போட்டிக் குழுக்களின் செயற்பாடு கவலை தருகின்றது, புதிய தலைமுறை இளம் தலைவர்கள் கட்சியின் புனர்நிர்மானப் பணிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும், அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியையே நான் செய்து கொண்டிருக்கின்றேன்.” 

“இந்த மக்கள் இயக்கத்தையும் உரிமைப் போராட்டத்தையும் மீட்டெடுப்பதென்பது புதிய தலைமுறை இளம் தலைவர்களது கரங்களிலேயே தங்கியுள்ளது, எதிர்காலத்தில் அவ்வாறான காட்டிக் கொடுப்புக்களும் கூட்டிக் கொடுப்புக்களும் இடம் பெறா வண்ணம் கூட்டுப் பொறுப்பும், வெளிப்படைத் தன்மையும், பொறுப்புக் கூறலும் உள்ள தலைமைத்துவக் கட்டமைப்பையும் யாப்பையும் தயாரித்து கட்சியை தீவிரமான புனரமைப்புக்குள் கொண்டு வருதல் காலத்தின் கட்டாயமாகும்.” என்றேன்.

ஏதோ, எனக்குத் தோன்றியதை உங்களிடம் ஒப்புவித்துவிட்டேன் நீங்கள் அல்லாஹ்விடம் பதில் சொல்லிக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டுச் சென்று விட்டார்.

இதே வேண்டுகோளை தற்போதைய முஸ்லிம்கங்கிராஸ் முக்கியஸ்தர்கள் பலரும் என்னிடம் முன்வைத்துள்ளார்கள், அரசியல் என்றாலே இப்பொழுது தொற்றிக் கொள்ளக் கூடாத அசிங்கமாகவே எனக்குத் தெரிகின்றது, குறிப்பாக மிகவும் கௌரவமாக வெளிநாட்டு இராஜதந்திர பணிகளில் ஈடுபட்டுள்ள எனக்கு எனது சுய கௌரவமும் நற்பெயரும் எனது ஆன்மீக பண்பாட்டு விழுமியங்களும் முக்கியமானவை.

இருந்த போதும், மேற்படி நிபந்தனைகளுக்கு முஸ்லிம் காங்கிராஸ் தலைமை இணங்கும் பட்சத்தில் குறுகிய காலத்திற்கு கட்சிப் புனரமைப்பு பணிகளுக்கு நேரடி தீவிர அரசியலுக்கு அப்பால் இருந்து உதவலாம் என எண்ணுகின்றேன், என்றாலும் எனக்கு எதிராக கடந்த காலத்தில் விடுக்கப்பட்ட தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டு நானாகவே இராஜினாமா செய்து கொள்ளும் சந்தர்ப்பம் வழங்கப் படல் வேண்டும்.
இடம் பெறவுள்ள “முஸ்லிம் காங்கிராஸ்” பேராளர் மாநாட்டில் 2004 ஆம் ஆண்டு எனக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு மீளப் பெறப்பட்டு அதி உயர்பீடத்தில் நான் வகித்த பதவிகள் மீளவும் ஒப்படைக்கப்படின் “முஸ்லிம் காங்கிரஸை” புனரமைக்கும் நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்க தயாராக உள்ளேன்.

அன்று என்னை இடை நிறுத்துவதற்கு நியமிக்கப்பட்ட ஒழுக்காற்றுக் குழுவின் தலைவர் மற்றும் அதன் செயலாளர் இருவரும் மிகக் குறுகிய காலத்திற்குள் எனது நிலைப்பாடு சரியெனக் கருதி கட்சியில் இருந்து வெளியேறியது மாத்திரமல்லாமல் முஸ்லிம் காங்கிரஸுக்கு போட்டியாக (நான் இன்றுவரை இணக்கப் படாத) பிறிதொரு கட்சியிற்கு தலைவராகவும் செயலாளராகவும் மாறியமை அல்லாஹ்வின் தீர்ப்பாக இருந்தது.
"எழுத்துகளோடு மட்டும் இருந்தால் போதாது நீங்கள் களத்தில் குதிக்க வேண்டும்" என கேட்கும் ஆயிரக்கணக்கான எனது நண்பர் அபிமானிகளுக்கு இறுதியாக அழுத்தம் திருத்தமாக ஒருவிடயத்தை கூறிக் கொள்ள விரும்புகின்றேன் :

“முஸ்லிம் காங்கிராஸ்” தலைமை நிச்சயமாக இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பது தெரியும், ஏன் என்பது உங்களுக்குத் தெரியும், என்றாலும் வரலாற்றில் என்னால் இயன்ற பணியை ஏன் செய்ய முடியவில்லை என்று மட்டும் நீங்களோ என்னை குறை கூறுபவர்களோ அறிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -