முஹம்மட் றின்சாத்-
அம்பாறைக்கு மாற்றப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கிழக்கு மாகாணக் காரியாலயத்தை மீண்டும் கல்முனையில் அமைப்பதற்கான இடத்தினை கல்முனைத் தொகுதிற்குட்பட்ட சாய்ந்தமருது வொலிவேரியன் பிரதேசத்தில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் இன்று (27) திங்கட்கிழமை பார்வையிட்டார்.
கல்முனையில் இயங்கிவந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகக் காரியாலயத்தினை அமைச்சர் தயாகமகேவின் இனவாத செயற்பாட்டினால் திட்டமிடப்பட்டு அம்பாறைக்கு மாற்றப்பட்ட விடயத்தை பிரதி அமைச்சர் ஹரீஸ் கடந்த வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போதும் நேரடியாகவும் அமைச்சர் தலதா அத்துக்கோரளவின் கவனத்திற்கு கொண்டு வந்ததையிட்டும் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் வேண்டுகோளுக்கினங்கவும் மீண்டும் கல்முனையில் மேற்படி காரியாலயத்தினை அமைப்பதற்கு அமைச்சர் தலதா அத்துக்கோரள உறுதியளித்திருந்தார்.
அமைச்சர் தலதா அத்துக்கோரளவின் பணிப்புரைக்கமைவாக மேற்படி காரியாலயத்தினை கல்முனையில் அமைப்பதற்கான இடத்தை ஒதுக்கித்தருமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் உத்தியோகபூர்வ கடிதத்தினை சாய்ந்தமருது பிரதேச செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கிழக்கு மாகாணக் காரியாலயத்தை சகல வசதிகளுடன் கூடியவாறு புதிதாக நிர்மாணிப்பதற்கு சாய்ந்தமருது வொலிவேரியன் பிரதேசத்தில் நிரப்பப்பட்ட காணியினை பிரதி அமைச்சர் ஹரீஸ் பார்வையிட்டதுடன் இக்காரியாலய நிர்மாணத்திற்கு 100 பேச் காணி ஒதுக்குவது என இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
இவ்விஜயத்தில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, உதவி பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ், கணக்காளர் ஏ.எல்.எம்.நஜிமுதீன், காணி உத்தியோகத்தர் எம்.ஹஸ்மி உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகக் காரியாலயம் அம்பாறைக்கு இடமாற்றப்பட்டதைத் தொடர்ந்து இக்காரியாலயத்தினை மீண்டும் கல்முனைக்கு கொண்டுவரும் முகமாக பிரதி அமைச்சர் ஹரீஸ் தொடர்ச்சியான பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளதுடன் இவ்விடயம் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நிறைவேற்று பணிப்பாளருடன் பிரதி அமைச்சர் முரண்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
