எதிர்கால சந்ததியின் கையில் விலங்கிடும் முஸ்லிம் அரசியல்வாதிகள்

ஜெம்சித் ஏ றகுமான்-

லங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் மாற்றத்தினை எதிர்பார்த்திருந்த ஆத்மாக்களின் ஆசையை பூர்த்தி செய்யும் வகையில் மறைந்த தலைவர் அஷ்ரப்பினால் ஸ்தாபிக்கப்பட்ட கட்சியே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் ஆகும்.இலங்கையில் சிறுபான்மை சமூகமாக விளங்கும் முஸ்லிம்களின் உரிமைகள் புறக்கணிக்கப்பட்ட போது உரிமைகளை வென்றெடுக்க பெருபான்மை சமூகம் வியக்கும் வகையில் உருவாகிய கட்சி இன்று சிதறடிக்கப்பட்டிருக்கிறது.நாட்டில் பல பாகங்களிலும் பரவியும்,சிதறியும் இருந்த முஸ்லிம்களின் உணர்வுகளை மறைந்த மாமனிதர் அஷ்ரப் முஸ்லிம் காங்ரஸ் எனும் கட்சியின் கீழ் ஒன்று திரட்டி சாதித்து காட்டி இருந்தார் என்பது முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் எப்போதும் நினைவுபடுத்தப்பட்டு பேசப்படுகிறது.

அரசியல் மெளனிகள்
+++++++++++++++++

பெரும்பான்மை கட்சிகள் ஆட்சி அமைக்கும் எமது நாட்டில் முஸ்லிம் மக்களினால் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படுவர்கள் முஸ்லிம்களின் உரிமைக் குரலாக பாராளுமன்ற அமர்வுகளின் போது ஒலிப்பதில்லை.இவர்கள் பாராளுமன்ற ஆசனங்களில் இருக்கின்ற போதே முஸ்லிம்களின் உரிமைகளில் பேரினவாதிகள் இடையூறுகளை ஏற்படுத்துகின்றனர்.பேரினவாதிகள் உரிமை அடக்கு முறைகளையும்,இனவாதக் கருத்துக்களையும் எதிர்த்து கேள்வி கேட்கும் நிலையில் முஸ்லிம் அரசியல்வாதிகள் இல்லை என்பதை நாம் கண்டுகொண்டிருக்கிறோம்.அவர்களின் மெளனங்கள் கலையமாட்டாத என்ற எதிர்பார்ப்புகளுடன் நாம் இருக்கின்ற போதிலும் அவர்களது மெளனம் இதுவரை கலைந்ததாக தெரியவில்லை.

முஸ்லிம் அரசியல்வாதிகளும்,முஸ்லிம்
சமூகமும்
++++++++++++++++++++++++++++++++

முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அதிகமான அரசியல்வாதிகளும்,கட்சிகளும் இருக்கின்ற போதிலும் அவற்றின் மீது முஸ்லிம்கள் நம்பிக்கை இழந்தவர்களாகவே இருக்கின்றனர்.சிறுபான்மை முஸ்லிம் கட்சிகளுக்குள் ஏற்பட்டிருக்கும் உள் வீட்டுப்பிரச்சினைகளை நாடறிய வைத்து அவர்களுக்குள்ளேயே சண்டையிட்டு கொள்ளும் நிகழ்வுகள் அண்மைக்காலமாக நடைபெற்று வருகிறது.உள் வீட்டு பிரச்சினைகளுக்கு தங்களுக்குள்ளேயே தீர்வினை அல்லது சமரசத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியாதவர்களால் எமது முஸ்லிம் சமூகத்தின் உரிமைப் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வினை பெற்றுத் தர முடியும்?எனும் கேள்வி முஸ்லீம்களிடையே எழுந்துள்ளது.

இளைய தலைமுறையின் நிலைப்பாடு
++++++++++++++++++++++++++++++

முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்களது அரசியல் இருப்பை நிலைப்படுத்த வேண்டும் என்பதற்காக நாட்களை கடத்தி,தங்களது நாடகங்களை அரங்கேற்றி கொண்டிருக்கிறார்கள்.இவர்கள் நமது முஸ்லிம் சமூகத்திற்கான உரிமை குரலை எழுப்புவார்கள் என்ற நம்பிக்கையை இளைய தலைமுறை இழந்துள்ளது.

பேரினவாதிகளிடம் நற் பெயர்களை சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும்,தங்களது பதவிகளை தக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும் இருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் எமது முஸ்லிம் சந்ததியினரின் எதிர்காலத்தை ஒப்படைக்கப் போகின்றோமா?என சிந்திக்க கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம்.அவ்வாறு நாம் சிந்திக்கவில்லை எனின் எமது எதிர்கால சந்ததியினரின் மீது அரசியல் விலங்கினை மாட்ட ஆசைப்படுகிறோம் என்பது பொருளாகும்.

பேரினவாதிகளுக்கு கொண்டாட்டம்
+++++++++++++++++++++++++++

முஸ்லிம் சமூகத்தின் அரசியல் வளர்ச்சியை கண்டு அஞ்சி நின்ற பெரும்பான்மை அரசியல் கட்சிகளும்,அரசியல்வாதிகளும் தற்போது எமது சமூகத்தை ஏளனமாக பார்த்து சிரிக்கின்றனர்.முஸ்லிம் அரசியல் கட்சிகளிடையே ஏற்பட்டிருக்கும் உட்கட்சி பூசல்கள் பேரினவாத அரசியல் அரங்கில் பேசு பொருளாகவும்,தீனியாகவும் அமைந்திருக்கிறது.ஒற்றுமையை வலியுறுத்தும் புனிதமான மார்கத்தில் இருந்து கொண்டு இவ்வாறான அநாகரிகமான செயற்பாடுகளில் ஈடுபடுகிறோம் என்றால் நாம் ஒவ்வொருவரும் வெட்கித்து தலை குனிய வேண்டும்.ஒற்றுமையை வலியுறுத்த வேண்டிய நிலையிலிருந்து எம் சமூகம் எல்லை மீறி பயணம் செய்கிறது.எமது சமூகத்தின் மீது உண்மையான பற்றினை கொண்டிருந்தால் முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் ஒன்றினைவதன் மூலமே முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்க முடியும்.

முஸ்லிம்களின் பலம்
++++++++++++++++

தற்போது பூதாரமாக்கபட்டிருக்கும் சிறுபான்மை முஸ்லிம் கட்சிகளின் உள்ளக பிரச்சினைகள் அனைத்தும் சமரசமாக்கப்பட வேண்டும்.இனியும் வீதிகளுக்கு அந்த பிரச்சினைகளை கொண்டு வருவதை ஒவ்வொரு முஸ்லீமும் பகிரங்கமாக எதிர்க்க வேண்டும்.எமது சமூகத்துக்குள்ளே பிரச்சினை ஏற்படுவது தொடர்கதையாக மாறிவிட்டால் எம் சமூகத்தை பந்தாடக் காத்திருப்வர்களுக்கு நாமே வழி சமைத்து கொடுத்தவர்களாக மாறிவிடுவோம்.

முஸ்லிம் சமூகத்தை ஒன்றினைக்க வேண்டிய அரசியல்வாதிகளே பிரிந்து நிற்கின்ற போது பெருபான்மை சமூகத்தின் கொள்கை,கோட்பாடுகள் ஒன்றினைந்து எதிர்கால சந்ததியினரை இலகுவாக தாக்கும் என்பதே உண்மையாகும்.

எதிர்கால சந்ததியின் கோரிக்கை
++++++++++++++++++++++++++

நாம் அல்லாஹ்வின் சட்டதிட்டங்களை வாழ்க்கையின் நெறியாக கொண்டு வாழ்பவர்கள்.எம் சமூகத்தில் இருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் மனமாற்றம் ஏற்பட்டு அனைவரும் ஒன்றினைந்து முஸ்லிம் சமூகத்திற்கு குரல் கொடுக்கின்ற போதுதான் எதிர்கால முஸ்லிம் சந்ததியினருக்கு நிம்மதியான வாழ்வை ஏற்படுத்தி விட்டு செல்ல முடியும்.

எதிர்கால சந்ததியினர் ஒற்றுமையான அரசியலை நோக்கி நகர்வதற்கு நீங்கள் சரியான எச்சங்களை விட்டுச் செல்ல வேண்டும் என்பதே எதிர்கால சந்ததியின் கோரிக்கையாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -