பாறுக் ஷிஹான்-
வட பகுதிக்கு விஜயம் செய்யும் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் பூரணமாக அனைத்து தரப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடுவது அவசியமாகும் என யாழ் முஸ்லீம் சமூக சேவகர் முஹமட் நஸீர் தெரிவித்தார்.
எதிர்வரும் நாட்களில் வடபகுதிக்கு அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த 25 ஊடகவியலாளர்கள் விஜயம் செய்யவுள்ள நிலையில் மேற்கண்டவாறு தனது கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தனது கருத்தில்;
கடந்த சில தினங்களிற்கு முன்னர் காத்தான்குடி மீடியா போரம் என்ற அமைப்பில் இருந்து சில ஊடகவியலாளர்கள் யாழ் மாவட்டத்திற்கு வந்தார்கள்.அவர்கள் இங்குள்ள அரசியல் வாதிகளை சந்தித்ததுடன் யாழ் முஸ்லீம் மக்கள் பிரதிநிதிகளை முழுமையாக சந்திக்கவில்லை.அது மாத்திரமன்றி யாழ் முஸ்லீம் மக்களின் பிரச்சினைகளை அடையாளம் காண்பது என்றால் ஒற்றுமையற்று கிடக்கும் தலைமைகள் என்று சொல்லப்படும் அனைவரையும் சந்திக்க வேண்டும் அவ்வாறு இல்லாவிடின் ஒருவரையும் சந்திக்க கூடாது.
வெறும் கண் துடைப்பிற்காக வந்து புகைப்படங்களை எடுத்து யாழ் முஸ்லீம் மக்களின் போலி முகவர்களுடன் கலந்துரையாடாமல் பொதுவாக அனைத்து தரப்பினர்களையும் உள்வாங்க வேண்டும்.
யாழ் முஸ்லீம்கள் மத்தியில் தலைமைத்துவ போட்டிஇகட்சி வேறு பாடு காரணமாக பல குழுக்கள் அடிப்படையில் ஒவ்வொரு சங்கங்களை அமைத்து இயங்கி வருகின்றனர். இதனால் அடிப்படை பிரச்சினைக்கு கூட தீர்வு பெற்று தர முடியாமல் உள்ளதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். எனவே யாழ் முஸ்லீம் மக்களை சந்திப்பதற்காக பகிரங்க அறிவிப்பு செய்து எல்லோரையும் அழைத்து கலந்துரையாடல் மேற்கொள்ள வேண்டும் என வட பகுதிக்கு விஜயம் செய்யும் ஊடகவியலாளர்களை கேட்டுக் கொள்கின்றேன்.