பழுலுல்லாஹ் பர்ஹான்-
மட்டக்களப்பு களுதாவளையிலுள்ள தனது வீட்டில் ,னம் தெரியாத நபர்களினால் நேற்று 22 புதன்கிழமை இரவு துப்பாக்கிச் சுட்டுக்குள்ளாகி காயங்களுக்குள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு கொண்டு செல்லப்பட்டுள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மற்றும் திருகோணாமலை மாவட்ட பணிப்பாளரும், யாழ்ப்பாண மாவட்ட பதில் பணிப்பாளருமான நேசகுமார் விமல்ராஜ்; (சுமார் வயது 32) மீதான துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று 23 இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கண்டன ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன்,மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா உட்பட உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள்,மாவட்ட செயலகத்திலுள்ள திணைக்களங்களின் தலைவர்கள்;,அரச அதிகாரிகள்,ஆண்,பெண் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் அரச அலுவலர்கள் மீதான தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கின்றோம்,அரச உத்தியோகத்தர் பாதுகாப்பை உறுதி செய்,குற்றவாளிகளை உடன் கைது செய், அலுவலர்கள் மீதான தாக்குதல்களை கண்டிக்கின்றோம்,அரச உத்தியோகத்தரை பாதுகாக்கவும்,அரச அலுவலர் மீதான தாக்குதல்கள் மேலும் தொடருமா? போன்ற பல்வேறு தமிழ் வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி தங்களது எதிர்பையும்,கண்டனத்தையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்க்கது.



