தோப்பூர்; இராணுவத்தினரை உடனடியாக அகற்றித்தருவேன் - ஹக்கீம் வாக்குறுதி

தோப்பூர் மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள 10 வீட்டுத்திட்டத்தை ஆக்கிரமித்துள்ள இராணுவத்தினரை உடனடியாக அங்கிருந்து அகற்றும் முயற்சியை, தான் கொழும்பு சென்றதும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் ஊடாக நிறைவேற்றித் தருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நேற்று வியாழக்கிழமை (12) மாலை நடைபெற்ற தோப்பூர், மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் விளையாட்டரங்கு திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

1இலட்சம் வீட்டுத்திட்டத்தின்கீழ் அமைத்துக்கொடுக்கப்பட்ட 10 வீட்டுத்திட்டத்தில், யுத்த காலத்தில் தற்காலிக பாதுகாப்பு அரண்களை அமைத்த படையினர், தற்போது அவற்றை முற்றாக ஆக்கிரமித்துள்ளனர். அங்குள்ள அப்பாவி மக்கள் குறித்த வீடுகளில் குடியேறுவதற்கு தயாராக இருந்தும், படையினர் அவற்றை பலவந்தமாக கையகப்படுத்தியுள்ளனர்.

குறித்த வீடுகளின் உரிமையாளர்களும் பள்ளிவாசல் நிர்வாகிகளும் இதுகுறித்து என்னிடம் முறையிட்டுள்ளனர். உடனே இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் பேசினேன். தௌபீக் எம்.பி. கொழும்பு வந்ததும், அவர் மூலம் இந்த 10 வீட்டுத்திட்டத்திலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றி, அதனை உரிய மக்களிடம் ஒப்படைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்.

அதேபோன்று செல்வநகர் பிரதேசத்திலுள்ள மக்கள், வனபரிபாலன சபை திணைக்களம் மற்றும் தொல்பொருளியல் திணைக்களம் மூலம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளனர். காலக்கிரமத்தில் இவ்விடயங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி அதற்கான தீர்வுகளையும் பெற்றுக்கொடுப்போம்.

அத்துடன், தோப்பூர் பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்காக நகர திட்டமிடல் அமைச்சு மூலம் இந்த வருடம் 50 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்யவுள்ளேன். அத்துடன் தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அஷ்ரப் மைதானத்தை 3 கட்டங்கள் மூலம் அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது. முதலாவது சமச்சீர் செய்யப்பட்ட வடிகாலமைப்பு மற்றும் புள்வெளிகள் உருவாக்கப்பட்டு மின்விளக்குகள் பொருத்தப்பட வேண்டும். பின்னர் டேர்ஸ் விக்கெட் அமைக்கப்பட்டு இந்த மைதானம் ஒரு சர்வதேச மைதானமாக தரமுயர்த்தப்படவேண்டும்.

எதிர்வரும் காலங்களில் இந்த மைதானத்தில் உதைபந்தாட்டம் மற்றும் மெய்வல்லுனர் போட்டிகளை நடாத்தவதற்குரிய ஆயத்தங்களையும் செய்யவேண்டும். அதற்காக இந்த விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்வதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் கிழக்கு மாகாண அமைச்சு மூலம் இயலுமான முயற்சிகளை நாங்கள் மேற்கொள்வோம் என்று தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக்கின் வேண்டுகோளுக்கிணங்க கிழக்கு முதலமைச்சர் நஸீர் அஹமட் மூலம் 95 இலட்சம் ரூபாவும், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் மூலம் 35 இலட்சம் ரூபாவும் நிதியொதுக்கீடு செய்யப்பட்டு 6 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் விளையாட்டரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

இத்திறப்பு விழாவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், மாகாண அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர், மாகாணசபை உறுப்பினர்களான ஆர்.எம். அன்வர், ஜே. லாஹிர், மூதூர் பிரதேசசபை முன்னாள் தவிசாளர் ஏ.எம். ஹரீஸ் மற்றும் முன்னாள் செயலாளர் ஜே. நஜாத் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -