கட்சித் தலைமை கொடுத்த வாக்குறுதியை யாரும் கேள்விக்குட்படுத்த முடியாது -

நிந்தவூருக்கு இன்னுமொரு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வேண்டுமென்று கட்சியின் ஒருசாராரும் அட்டாளைச்சேனைக்கும் வேண்டுமென்று இன்னுமொரு சாராரும் கட்சியிடம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இந்த இரண்டு கோரிக்கைளும் கட்டாயம் நிறைவேற்றப்படும். கட்சி தலைமை கொடுத்த வாக்குறுதியை யாரும் கேள்விக்குட்படுத்த முடியாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

தொற்றா நோய்க்கான முதலாவது ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்ட பின்னர், முஸ்லிம் காங்கிரஸின் பொதுக்கூட்டம் பிரதி அமைச்சர் பைசால் காசீம் தலைமையில் நிந்தவூர் அரசயடி தோட்டத்தில் சனிக்கிழமை இரவு (28) நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

கட்சித் தலைமை கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுமாரு கோரி பலர் தூதுக்குழுக்களை அனுப்புகின்றனர். கடந்த காலங்களில் நாங்கள் சொன்ன சில விடயங்கள் ஆட்சிமாற்றம் காரணமாக செய்யமுடியாமல் போனது. கட்சிக்குள் பிளவுகள் ஏற்படாத உத்தரவாதத்துடன் இந்த விடயங்களை அணுகுவதற்காகவே நாங்கள் நிதானப் போக்கை கடைப்பிடித்து, பக்குவமாக இந்த விடயங்களை கையாள்கின்றோம். ஆகவே, யாரும் இதற்காக தூதுக்குழு அனுப்பவேண்டிய தேவையில்லை. 

கட்சிக்குள் இருப்பவர்கள் முடிந்த கதைகளை புத்தகமாக அச்சிட்டு, பங்கிட்டுக்கொண்டிருக்கின்றனர். உயர்பீட உறுப்பினர்களுக்கு பதிலளிக்க முடியாமல் தினறியவர்கள் இன்று அனாமதோய புத்தகத்தை வெளியிட்டு கட்சிக் தலைமையை குழப்புவதாக நினைத்துக்கொண்டு திரிகின்றனர். இந்த புத்தகங்களை வெளியிடுவதிலும், பங்கிடுவதிலும் எனது அமைச்சு மூலம் தொழில் பெற்ற சிலரும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால், அவர்களை பலிவாங்கும் நோக்கம் எனக்கில்லை. இவ்வாறான முனாபிக்களின் வேலைகளை கண்டுகொள்ளாமல் இருப்பதே மேல்.

தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சல்மான் மீது சிலருக்கு சந்தேகம் வலுத்து வருகின்றது. அதனால்தான், முதலமைச்சருடன் சேர்த்து சல்மானுக்கும் அந்தப் புத்தகத்தில் முடிச்சு போட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் கூறுவதுபோல அங்கு ஒரு களவும் நடைபெறவில்லை. இவ்வாறானவர்கள் கட்சியுடன் முரண்பட வேண்டுமானால் தங்களது பெயரைக் அடையாளம் காட்டிக்கொண்டு செயற்படவேண்டும். ஆனால், அவர்கள் அபாண்டத்தை நேரடியாக கூறுவதற்கு பயப்படுகிறார்கள்.

அந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள சில விடயங்கள் உண்மையானவை. அதை யாரும் மறுக்கவில்லை. அது எல்லோருக்கும் தெரிந்த வெளிப்படையான விடயங்கள். இதைவைத்து கட்சித் தலைமையுடன் முடிச்சுப்போட்டு மிகப்பெரிய சந்தேகத்தை உருவாக்கும் நோக்கில் புத்தகம் வெளியிடுகின்றனர். உண்மையான கட்சிப் போராளிகள் அதை வாசிப்பதற்குகூட விரும்பமாட்டார்கள். 

இந்தப் புத்தகத்தை வெளியிட்டவர்கள் யாரென்பது பரம இரகசியமல்ல. இவ்வாறானவர்கள் கட்சியை வளர்ப்பதற்கு ஒருகாலத்தில் பெரும் பாடுபட்டவர்கள். அவர்களுக்கு சில பிரச்சினைகள் இருக்கலாம். அதுகுறித்து தலைமையுடன் பேசுவதற்கு என்ன தடையிருக்கிறது. தலைமை தவறுசெய்தால் போராளிகள் அதை தண்டிப்பதற்கு தயங்கமாட்டார்கள். அப்படியானதொரு கட்சியைத்தான் நாம் வளர்த்திருக்கிறோம்.

யாரும் வாரிசுரிமை சொத்தாக இந்த அரசியல் பதவிகளை பெறவில்லை. எந்தவொரு அரசியல் அடையாளமும் இல்லாமல் வந்தவர்கள்தான் நாங்கள் எல்லோரும். எங்களுடைய பதவிகள் நிரந்தரமாக இருக்கவேண்டுமென்று யாரும் விரும்பவில்லை. அதற்கான தேவையும் இல்லை. அவை நேர்மையாக, சட்டரீதியாக நடைபெறவேண்டும். 

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஒரு நெகிழ்ச்சிப் போக்கை கடைப்பிடிப்பவர் என்று பலருடைய அனுமானம் இருக்கலாம். ஆனால், சாது மிரண்டால்... என்றொரு விடயமும் இருக்கிறது. இவ்வாறான நெகிழ்ச்சிப் போக்கு எமது பயணத்துக்கு சாத்தியமில்லை என்றால் எனது போக்கை மாற்றித்தான் ஆகவேண்டும்.

கட்சியுடன் முரண்டுபிடிக்கும் இவரின் போக்கை எதிர்வரும் பேராளர் மாநாட்டிலும் கட்சியின் பேராளர்கள் சகித்துக்கொள்வார்களா என்பதை நாம் பார்க்கப்போகிறோம். முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளால் மட்டும் வளர்ந்த கட்சியல்ல. எதிரிகளாலும் வளர்ந்த கட்சி. எதிர்ப்பு கூடக்கூட இந்த கட்சியின் மவுசும் கூடும். 

சொந்த அரசியல் அபிலாஷைகள் நிறைவேறாதபோது நடக்கின்ற கோப, தாபங்களின் வெளிப்பாட்டால் எல்லா கட்சிக்குள்ளும் பிரச்சினைகள் வரத்தான் செய்கின்றது. ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கம் தனிநபர்களை விட பிரதானமானது. கட்சியிலிருப்பவர்கள் சுயாதீனமாக செயற்பட முற்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டியேற்படும் என்றார்.

இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.ஏல்.நஸீர், மாகாணசபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுதீன், ஏ.எல்.தவம், அப்துல் றஸாக் (ஜவாத்), ஐ.எல்.எம்.மாஹிர், சிப்லி பாறுக், மு.கா. மூத்த துணைத் தலைவர் முழக்கம் அப்துல் மஜீட், இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர், மு.கா. உயர்பீட உறுப்பினர்களான பளீல் பி.ஏ.எஸ்.எம்.ஏ.கபூர், ஹனீபா மதனி, அன்சில், ஏ.சி.யஹியாகான் உள்ளிட்ட மு.கா.அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -