வட மாகாணசபை அவைத்தலைவருடன், "சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியம்" சந்திப்பு


டமாகாண சபையின் அவைத் தலைவரும், இலங்கை தமிழரசு கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான திரு. சி.வி.கே சிவஞானம் அவர்களை சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத் தலைவர் திரு. சொக்கலிங்கம் ரஞ்சன், பொருளாளர் திரு. அருணாசலம் கைலாசநாதன் (குழந்தை), ஆலோசனை சபை உறுப்பினர்களுள் ஒருவராகிய திரு. கிருஸ்ணகுமார் (குமார்) மற்றும் ஒன்றிய உறுப்பினர் திரு. ராஜகோபால் ஆகியோர் இன்றையதினம் நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

குறுகியகால தனிப்பட்ட விஜயமொன்றினை மேற்கொண்டு சுவிஸ்லாந்திற்கு வருகை தந்திருந்த வட மாகாண சபை அவைத்தலைவர் திரு. சி.வி.கே சிவஞானம் அவர்களுடன் சுவிஸ் ஒன்றியத்தினர் நேரில் சந்தித்து உரையாடிய போது, வட மாகாணசபையின் நிர்வாக செயற்பாடுகள், தற்போதைய அரசியல் சூழ்நிலைகள், மீள்குடியேற்றம், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார நிலைமைகள் மற்றும் தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வு குறித்த நகர்வுகள் என்பன உள்ளிட்ட பல்வேறு விடயங்களை திரு.சி.வி.கே. சிவஞானம் அவர்கள் விலாவாரியாக விளக்கிக் கூறினார்.


இதனைத் தொடர்ந்து சி.வி.கே சிவஞானம் அவர்களிடம் சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் சார்பில் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.


புங்குடுதீவு திருநாவுக்கரசு வித்தியாசாலையின் புனரமைப்பு நிதிக்காக வட மாகாணசபை உறுப்பினர் திரு. கே.என். விந்தன் கனகரத்தினம் அவர்கள் மேற்கொண்ட முழுநேர முயற்சியினால், சுமார் நாற்பது இலட்சம் (40லட்சம்) ரூபா வட மாகாண கல்வியமைச்சினால் ஒதுக்கப்பட்டு இவ்வருட இறுதிக்குள் வித்தியாசாலையின் புனரமைப்பு வேலைகள் முடிக்கப்படவுள்ளது பற்றியும், இந்த நடவடிக்கைக்கு எதிராக சிலர் மேற்கொண்டிருக்கும் அநாமதேய செயற்பாடுகள் மற்றும் விசமத்தனமான பிரச்சாரங்கள் குறித்தும் புங்குடுதீவு ஒன்றியத்தினரால் திரு. சி.வி.கே சிவஞானம் அவர்களிடம் விளக்கிக் கூறப்பட்டது.


அதன்போது "யார் எதைச் செய்தாலும், எதைச் சொன்னாலும், கல்வியமைச்சினால் இந்த வித்தியாலைக்கென நிதி ஒதுக்கப்பட்டு விட்ட நிலையில், திரு. விந்தன் கனகரத்தினம் அவர்களது முயற்சியினால் இது நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்றும், இதற்கு வட மாகாணசபை சார்பில் தன்னால் முடிந்த உதவிகளை மேற்கொள்வதாகவும்" திரு. சி.வி.கே சிவஞானம் அவர்கள் குறிப்பிட்டார்.


அதேபோன்று வட மாகாணசபை உறுப்பினர் திரு. விந்தன் கனகரத்தினம் அவர்களிடம் புங்குடுதீவு சுற்றுலாத்தளமான பெருக்கு மரத்துக்குரிய, புளியடித்தீவு வீதியைப் புனரமைத்துத் தரும்படி நாம் முன்வைத்துள்ள மற்றுமொரு கோரிக்கையும் வட மாகாணசபையில் அது முன்வைக்கப்படும்போது அதனையும் நிறைவேற்றித் தருவதற்கு தன்னாலான உதவிகளையும் ஒத்தாசையினையும் வழங்குவதாக திரு. சி.வி.கே சிவஞானம் அவர்கள் குறிப்பிட்டார்.


மேலும், இலங்கையில் நின்ற போது, கனடாவில் இருந்து திரு. பொன் சுந்தரலிங்கம் மற்றும் பேராசிரியர் திரு. குகபாலன் ஆகியோர் தன்னிடம் உரையாடியதாகவும், "இதன்போது புங்குடுதீவில் அம்பலவாணர் அரங்கு கட்டப்பட்டு வருவதையும், அது ஏப்ரல் மாத நடுப்பகுதியில் திறக்கப்படவுள்ளதையும் தான் அறிந்து கொண்டதாகவும்" அவர் தெரிவித்தார்.


அத்துடன், இவ்வாரம் வட மாகாணசபையின் ஆளுநரின் ஆலோசகர் திரு. இளங்கோவன், முன்னாள் அதிபர் எஸ்.கே. சண்முகலிங்கம் மற்றும் திரு. பொன் சுந்தரலிங்கம் ஆகியோர் இங்கு வருகை தரவிருப்பதையும் ஒன்றியத்தின் "வேரும்விழுதும் விழா" நடைபெறவுள்ளதையும் தான் அறிந்து கொண்டதாகவும் கூறிய திரு. சி.வி.கே சிவஞானம் அவர்கள், தன்னால் இந்த விழாவில் கலந்து கொள்ள முடியாமைக்கு வருந்துவதாகவும், ஏனெனில் தான் நாட்டிற்கு திரும்பிச் செல்ல வேண்டியுள்ளது எனவும் கூறியதோடு, வேரும்விழுதும் விழா வெகு சிறப்பாக நடைபெற தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.


அத்துடன், மேலும் பல்வேறு விடயங்கள் குறித்து எமக்கு கருத்துக்களையும், ஆலோசனைகளையும் அவர் வழங்கியதோடு புங்குடுதீவு அபிவிருத்திக்கு உதவுவதாகவும் குறிப்பிட்டார்.


இதனைத் தொடர்ந்து திரு. சி.வி.கே. சிவஞானம் அவர்களுக்கு சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டதோடு, சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத் தலைவர் திரு. சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களினால் பொன்னாடை போர்த்தியும் அவர் கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


இவ்வண்ணம்,


திரு.செல்லத்துரை சதானந்தன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்,
சுவிஸ்லாந்து.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -