“நாடா” புயல்காற்று எனக் கூறப்படும் புயல் காற்று ஒன்று இன்று வடக்கை அச்சுறுத்திக் கொண்டுள்ள நிலையில் இன்று காலை கிளிநொச்சியில் பலமாக வீசிய காற்றினால் காலை எட்டு முப்பது மணியளவில் கிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்தா கல்லூரியில் உள்ள தற்காலிக வகுப்பறை தொகுதி ஒன்று முற்றாக பாறி வீழ்ந்துள்ளது.
இந்த சம்பவம் நடந்தவேளை பாடசாலையில் மாணவர்கள் இருந்த போதிலும் எவருக்கும் எந்தவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை.என அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
தரம் ஆறுதொடக்கம் உயர்தரம் கலை வர்த்தகம் கணிதம் விஞ்ஞானம் ஆகிய பிரிவுகளைக் கொண்டு இயங்கி வருகின்ற இப்பாடசாலையில் கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவிற்கு உட்ப்பட்ட பிரதேச மாணவர்களை அதிகமாகக் கல்விகற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வங்காள விரிகுடாவில் குடிக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ் அமுக்கம் தற்போது புயலாக மாற்றமடைந்துள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த புயலிற்கு 'நாடா' என பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த புயல் முல்லைத்தீவில் இருந்து சுமார் 400 கிலோமீற்றர் தொலைவில் மையங்கொண்டுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
மன்னாரில் இருந்து காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரை கடற்கரைக்கு அப்பால் கடற்பிரதேசங்கள் கொந்தளிப்புடன் காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், கடற்கரைக்கு அருகில் சுமார் 3 மீற்றர் உயரம் வரை அலைகள் எழும்பி கரையை தாக்கக்கூடும் என்பதால் கடலோர மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு பொது மக்களிடம் வானிலை அவதான நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.



