பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை விவகாரத்துடன் தொடர்புடையோர் அலரி மாளிகை, ஜனாதிபதி செயலகம் போன்றவற்றில் உள்ளோராக இருந்தாலும் அவர்களைக் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்து விசாரிக்கவோ அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவோ எவ்விதமான தடைகளும் இல்லை என கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸ் நேற்று அறிவித்தார்.
வஸீம் தாஜுதீன் படுகொலை விவகார விசாரணைகள் நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் நிசாந்த பீரிஸ் முன்னிலையில் இடம்பெற்ற போதே நீதிவான் குற்றப்புலனாய்வுப் பிரிவின் மனிதப்படுகொலைகள் தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியை நோக்கி இதனைத் தெரிவித்தார்.
ஏற்கெனவே இவ்விவகாரத்துடன் இணைத்துப் பேசப்படும் முன்னாள் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர மேல்நீதிமன்றில் திருத்தல் மனு, உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஆகியவற்றைத் தாக்கல் செய்திருந்தாலும் கைதுக்கு எதிரான இடைக்கால தடை உத்தரவொன்று அந்த மன்றங்கள் ஊடாக பிறப்பிக்கப்படாத நிலையில், குற்றவியல் சட்டம் மற்றும் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகளை எடுக்க புலனாய்வுப் பிரிவினருக்கு முடியும் எனவும் நீதிவான் சுட்டிக்காட்டினார்.
பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மிஸ்பாஹ் சத்தாரின் முக்கிய வாதம் மற்றும் சந்தேக நபர்களான அனுர சேனநாயக்க மற்றும் சுமித் சம்பிக்க பெரேரா ஆகியோரின் சட்டத்தரணிகள் முன்வைத்த கோரிக்கைகளை ஆராய்ந்த போதே நீதிவான் மேற்படி உத்தரவைப் பிறப்பித்தார்.
நேற்றைய தினம் இந்த விவகாரம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பமான போது, அரசின் பிரதி சொலிசிஸ்ரர் ஜெனரல் டிலான் ரத்நாயக்க, குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் விமலசிரி ரவீந்ர மன்றில் ஆஜராகியிருந்தார்.
இதன் போது மேலதிக விசாரணை அறிக்கை ஒன்று மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அதில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,
வஸீம் படுகொலை விவகாரம் தொடர்பில் பல்கோண விசாரணை இடம்பெறுகின்றது. பிரேத பரிசோதனையின் போது பின்பற்ற வேண்டிய முறைமைகளை சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர பின்பற்றியுள்ளாரா என்பதை ஆராய சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளரிடம் நாம் வாக்கு மூலம் ஒன்றினைப் பெற்றுள்ளோம்.
அத்துடன் வஸீமின் கொலை இடம்பெற சில நிமிடங்களுக்கு முன்னர் அவரது நண்பர் ஒருவருக்கு வந்த தொலைபேசி அழைப்பு தொடர்பிலான விசாரணையில் இதுவரை 6 சாட்சியாளர்களிடம் வாக்கு மூலம் பதிவு செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம்.
இதனைவிட ஜனாதிபதி செயலக தொலைபேசி அழைப்பு விவகாரம் தொடர்பில் கொலை இடம்பெற்ற தினத்தில் ஜனாதிபதி செயலக அழைப்புப் பிரிவில் கடமையாற்றிய இரு பொலிஸ் அதிகாரிகளான உப பொலிஸ் பரிசோதகர் மதுரசிங்க ஆரச்சிகே ஜயலத், கான்ஸ்டபிள் நாலக ஆகியோரிடம் நாம் விசாரணை நடத்தியுள்ளோம். மேலதிக விசாரணைகள் தொடர்கிறது. என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து வாதிட்ட சந்தேக நபர்களின் சட்டத்தரணிகள் தமது சேவை பெறுநர்களான அனுர சேனநாயக்க, சுமித் சம்பிக்க பெரேரா ஆகிய இருவரும் நீண்ட காலம் சிறையில் உள்ள நிலையில், இனப்படுகொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை என கேள்வி எழுப்பினர்.
தமது சேவை பெறுநர்கள் சதி செய்ததாக இருப்பின் அச்சதியுடன் இணைந்து செயற்பட்டவர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை என அவர்கள் கேள்வி எழுப்பினர்.
ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகையின் தொலைபேசி இலக்கங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்களுக்கு அமைவாக அவற்றுடன் தொடர்புபட்டவர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை என அவர்கள் கேள்வி எழுப்பினர்.
இந் நிலையிலேயே பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை விவகாரத்துடன் தொடர்புடையோர் அலரி மாளிகை, ஜனாதிபதி செயலகம் போன்றவற்றில் உள்ளோராக இருந்தாலும் அவர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்து விசாரிக்கவோ அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவோ எவ்விதமான தடைகளும் இல்லை என கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸ் அறிவித்த நிலையில் சந்தேக நபர்களை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
