எம்.ரீ.ஹைதர் அலி-
பள்ளிவாயல்கள் தமது நிருவாக செலவுகளுக்காக நிதி வசதி இல்லாத பள்ளிவாயல்கலாகவே காணப்படுகின்றது. ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கும் நிகழ்வில் ஷிப்லி பாறுக்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் 2016ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து காத்தான்குடி மர்யம் பள்ளிவாயலுக்கான ஒலி பெருக்கி சாதனங்கள் வழங்கும் நிகழ்வு 2016.12.05ஆந்திகதி - திஙகட்கிழமை) நடைபெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் கலந்துகொண்டு ஒலி பெருக்கி சாதனங்களை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் மர்யம் பள்ளிவாயலின் நிருவாக சபை உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள் மற்றும் பிரதேச மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது உரையாற்றிய பொறியியலாளர் ஷிப்லி பாறூக்...
எமதூரினைப் பொறுத்தமட்டில் அதிகமான பள்ளிவாயல்கள் தம்முடைய நிருவாக செலவுகளுக்காக போதியளவான நிதி வசதி இல்லாத பள்ளிவாயல்கலாகவே காணப்படுகின்றது. அத்தகைய பள்ளிவாயல்களில் கடமை புரியும் இமாம்கள் மற்றும் முஅத்தின்மார்களுக்கான ஊதியங்களும் குறைவாகவே வழங்கப்படுவதோடு பள்ளிவாயல்களின் பௌதீக வளங்களும் மிகவும் பற்றாக்குறையாகவே காணப்படுகின்றது.
இருப்பினும் ஒரு சில பள்ளிவாயல்களின் வருமானங்கள் அதிகமானதாக இருப்பதனை அவதானிக்க முடிகின்றது. அத்தகைய அதிக வருமானங்களின் மூலம் அத்தியாவசியமற்ற பல்வேறு தேவைகளுக்காக அப்பள்ளிவாயல்களுடைய நிதிகள் பயன்படுத்தப்படுகின்றது.
பள்ளிவாயல்கள் அனைத்தும் அல்லாஹ்வினுடைய இறை இல்லங்களே, எனவே இத்தகைய அதிக வருமானமுள்ள பள்ளிவாயல்களின் நிதிகளை ஏனைய பள்ளிவாயல்களுக்கு பகிர்ந்தளிக்கக் கூடிய ஒரு பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். அதற்கென பள்ளிவாயல்களை மாத்திரம் உள்ளடக்கியதான நிருவாக முறைமை ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அதே போன்று பள்ளிவாயல்கள் தமது நிருவாக கட்டுப்பாட்டு பகுதியிலுள்ள மக்களினுடைய அனைத்து விடயங்களையும் தலைமைதாங்கி நிருவகிக்கக்கூடிய ஒரு நிறுவனமாக மாற வேண்டும்.
அந்தவகையில் நாம் இம்முறை எமது நிதி ஒதுக்கீடுகளில் அதிகமானவற்றை இத்தகைய பள்ளிவாயல்கள் மற்றும் சமூக நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்திருக்கின்றோம். எதிர்வரும் காலங்களிலும் இத்தகைய மேலும் பல உதவித்திட்டங்களை மாகாண சபை மற்றும் கலாச்சார அமைச்சுகளின் ஊடாக பெற்றுக்கொடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.



