தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் மரணமடைந்த இந்த நேரத்தில் எமது நாட்டிலுள்ள சில அரசியல்வாதிகள் சில விடயங்களை சிந்திப்பது தவிர்க்க முடியாதது. பல்லாயிரம் கோடி ரூபாய்களின் அசையும், மற்றும் அசையா சொத்துக்களுக்கு உரிமையாளரான ஜெயலலிதா அவர்கள், இப்போது எதனை கொண்டு செள்ளப்போகின்றார்? இவர் சேர்த்துவைத்த சொத்துக்கள் எல்லாம் எங்கே?
மாலைகளும், மரியாதைகளும், முன்கதிரைகளும், காலில் விழுந்து கும்பிட்டவர்களும் எங்கே? பம்மாத்துக்களும், வெட்டுக்குத்துக்களும், இவரிடம் மற்றவர்களை போட்டுக்கொடுத்தவர்களும் எங்கே? இவரிடம் பணத்தினை பெற்றுக்கொண்டு எழுதியவர்கள் எங்கே? கூலிக்காக எழுதிய முகநூல் எழுத்தாளர்கள் எங்கே? பணத்துக்காக பொய்களை மக்களுக்கு எத்திவைத்த ஊடகவியலாளர்கள் எங்கே? எவராவது தன்னுடன் வருவார்களா?
தமிழக முதல்வர்களுள் அதிகம் ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்ட ஜெயலலிதா அவர்கள், இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதனால் முதல்வராக அதிகாரத்தில் இருக்கும்போதே ஊழல் குற்றச்சாட்டுக்காக சிறையில் அடைக்கப்பட்டார்.
எமது நாட்டில் நீதித்துறை ஆட்சியாளர்களின் காலடியில் மண்டியிடுவதனால், வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கப்பட வேண்டிய அரசியல் கொள்ளையர்கள், பல்லாயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தினை கொள்ளையடித்து ஏப்பம் விட்டுக்கொண்டு உத்தமர்கள் போன்று மக்கள் முன் வலம் வருகின்றார்கள்.
ஒரு தனி நபரின் பணத்துக்கு ஒருவர்தான் சொந்தக்காரர். ஆனால் அரசாங்க பணத்துக்கு மக்கள் அனைவரும் சொந்தக்காரர்கள். எனவே அரசாங்கம் என்கின்ற மக்கள் பணத்தினை கொள்ளையடித்து சுகபோகம் அனுபவிப்பவர்கள், அனைத்து மக்களுக்கும் பதில் கூறியே ஆகவேண்டும்.
ஹராமான முறையில் பல கோடி ரூபாய்களை கொள்ளையடித்து தன்னை ஒரு கோடீஸ்வரனாக காட்டிக்கொண்டாலும், இறுதியில் அல்லாஹ்வின் அழைப்பு வரும்போது தான் கொள்ளையடித்து தேடிவைத்த அனைத்து அசையும், அசையா சொத்துக்களையும் விட்டு விட்டு தனிமையாகவே செல்லவேண்டும். இங்கு நாங்கள் அனுபவிக்கின்ற எதுவும் எங்களுக்கு சொந்தமானதல்ல. இந்த உலகில் நாங்கள் வாழுகின்றபோது நாங்கள் செய்த நன்மைகள், தீமைகள் மட்டுமே இறுதிவரைக்கும் எங்களுடன் வரும். வேறு எதுவும் எங்களுடன் வராது என்ற உண்மையை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்.
முகம்மத் இக்பால்,
சாய்ந்தமருது.
