ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-
1957ம் ஆண்டு தமக்கு அரசினால் சட்டப்படி வழங்கப்பட்ட காணிகளைத் தற்போது வனஇலாகா அதிகாரிகள் தடுத்து வைத்திருப்பதாகவும், அதனை மீண்டும் தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரியும் நிந்தவூர்ப் பிரதேச விவசாயிகள் நிந்தவூர் பிரதேச சபை, நிந்தவூர் ஜ}ம்ஆப்பள்ளிவாசல், கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதி ஆகிய இடங்களில் கவனயீர்ப்பு அமைதிப் பேரணியொன்றை இன்று நடாத்தினர்.
கிரான் கோமாரி விவசாயிகள் அமைப்பு இந்த கவனயீர்ப்பு அமைதிப் பேரணிக்கான ஏற்பாடுகளை முன்னின்று நடாத்தியது.
சுலோகங்களை ஏந்திய விவசாயிகள் பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு அமைதிப் பேரணியில் ஈடுபட்டனர்.
' விவசாயிகளின் தோழன் ஜனாதிபதி அவர்களே, இந்த ஏழை விவசாயிகளின் துயர் துடைக்கமாட்டீரொ?, ஏழைகளின் நீண்ட கால காணிபெறும் தடையை நீக்கு, நல்லாட்சி நாயகர்களே எமது காணிப் பிரச்சினையைத் தீர்த்து வையுங்கள், சென்ற அரசுக் காலத்தில் ஏமாற்றப்பட்ட நாம், இந்த நல்லாட்சியிலுமா...?, வன இலாகா அதிகாரிகளே எங்கள் விவசாயக் காணிகளை ஆக்கிரமிப்புச் செய்யாதே!, எங்கள் பிரதேச அரசியல்வாதிகளே ஏன் இந்த விடயத்தில் நீங்கள் மௌனிகளாக இருப்பது?, எங்கள் பிரச்சினையைத் தீர்த்து வைக்க முடியாத, நாங்கள் வாக்களித்த அரசியல்வாதிகளே..உங்களுக்கு அமைச்சுப் பதவி மட்டும் போதுமா?, ஏமாற்றாதே..ஏமாற்றாதே ஏழைவிவசாயிகளை ஏமாற்றாதே' போன்ற சுலோகங்களைத் தாங்கியிருந்தனர்.
அமைதிப் பேரணியின் இறுதியில் இவ்விவசாயிகள் நிந்தவூரிலிருந்து பொத்துவில் நோக்கி தமது அமைதிப்பேரணியை முன்னெடுத்துச் சென்றனர் என்று எமது பிராந்திய செய்தியாளர் ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் தெரிவிக்கிறார்.
இது பற்றி விவசாயிகள் கருத்துத் தெரிவிக்கையில்:- ' முன்னாள் அமைச்சர் எம்.எம்.முஸ்தபா அவர்களின் அயராத முயற்சினால் கடந்த 1957ம் ஆண்டு பொத்துவில் கிரான், கோமாரி ஆகிய காட்டுப் பிரதேசத்தில் நிந்தவூர் பிரதேச ஏழை விவசாயிகளுக்கு ஒருவருக்கு 5 ஏக்கர் வீதம் சட்டப்படி காணி வழங்கப்பட்டது. இதனைக் காடு வெட்டி, களனியாக்கி, விவசாயம் செய்து வந்தோம். கடந்த 3 தசாப்த காலப் பயங்கரவாதத்தால் இப்பிரதேசத்தில் விவசாயம் செய்யமுடியவில்லை. பயங்கரவாதம் ஒழிந்த பின்னர் எமது காணிகளுக்குள் நாம் மீண்டும் விவசாயம் செய்ய வந்தோம். இராணுவத்தினரும், வனஇலாகா அதிகாரிகளும் தடுக்கின்றனர். இதனை இந்த நல்லாட்சி அரசாங்கம் பெற்றுத் தரவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம்' எனத் தெரிவித்தனர்.



