சத்தார் எம் ஜாவித்-
மனித சமுகம் அமைதியாகவும், சமாதானமுமாகவும், ஒற்றுமையாகவும் வாழ வேண்டும் என்ற நற்பண்புகளையும், சிறந்த கொள்கைகளையும் போதிக்கும் ஒரு சிறந்த மார்க்கமாகும். இந்த மார்க்கைத்தினை வழி நடத்தும் வகையில் அல்லாஹ்வினால் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட ஒரு மாபெரும் அருட்கொடைதான் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள்.
இஸ்லாமிய வரலாற்றில் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட ஒரு சிறப்பு மிக்க மனிதர் என்றால் நபியவர்களைத் தவிர யாரும் இருக்க முடியாது என்பதனை புனித அல்குர்ஆன் திட்டவட்டமாகவே குறிப்பிடுகின்றது. இவ்வாறு முழு மனித சமுகத்திற்கும் வழி காட்டக்கூடிய ஒருவர் பிறந்ததும் அவர் இவ்வுலகை விட்டுப் பிரிந்ததும் ஒரேதினமாகும். இவ்வாறான ஒரு தினத்தை சிறப்பிக்கும் வகையில் முழு முஸ்லிம் சமுகமும் மீலாத் தினம் என்று கொண்டாடி வருகின்றது என்றால் அது அவரின் தியாகத்தினையும், இறை நம்பிக்கையையும் முதன்மைப் படுத்தியதற்காகவே எனலாம்.
இவ்வுலக மனித வாழ்வியலில் பல்வேறுபட்ட மதங்கள், நாகரிகங்கள், கொள்கைகள் காணப்படுவதுடன் இவர்களுக்கிடையில் தத்தமது கொள்கைகளை முன்னிலைப்படுத்த பல்வேறுபட்ட போராட்டங்களும், குழப்ப நிலைமைகளும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இவ்வாறான போராட்டங்கள் சமய, சமுக கட்டமைப்புக்களை களங்கப்படுத்தும் வகையில் இடம் பெறுவதனால் அதன் விளைவாக அநியாயங்களும், பேரழிவுகளும் ஏற்படுவதுடன் மனித உயிர்களைக்கூட இழக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைகளுக்கு மனிதன் ஆளாக்கப்படுகின்றான் என்ற கவலைக்குரிய விடயத்தினையும் இங்கு நாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
இவ்வாறு மனித வால்வியலில் சமனிலையற்ற தன்மைகளால் ஒவ்வொரு மதங்களும் தத்தமது மதங்களை முதன்மைப்படுத்தவும், அவைதான் உண்மையான மதங்கள் என்றும் அவற்றறை முதன்மைப்படுத்த முனையும் போது மதத்ததலைவர்கள் மற்றய மதங்கள் மீது துவேஷ குணங்களுடன் மதவெறியை ஏற்படுத்துகின்றனர் எனலாம்.
இவ்வாறான தீய குணங்களிலும் செயற்பாடுகளிலும் இருந்து வேறுபட்ட ஒரு மனிதராகவும், சமாதானத்தையும், சமுக ஒற்றுமையையும் விரும்பிய ஒருவராகவும் இன நல்லிணக்கத்தினை ஏற்படுத்தி அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற கொள்கைகளை உறுதிப்படுத்தி சமுகங்களை நிம்மதியாக வாழ வைத்ததன் காரணமாகவே அவரை முழு மனித சமுகமும் இன்று வரை சிறந்த ஒருவர் என்று போற்றும் கௌரவம் உள்ளவராக இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் திகழ்கின்றார்கள்.
நபியவர்கள் வெறுத்த முக்கிய அம்சங்களில் ஒன்றாக மதவெறியாகும். சமுகத்தில் மதவெறி ஏற்பட்டால் அது என்னன்ன விளைவுகளைத் தரும் என்பதனை அவரின் காலத்திலேயே இடம் பெற்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து மக்களுக்கு எடுத்தியம்பிய நபியவர்கள் இஸ்லாம் இந்த விடயத்தில் வன்மையாக கண்டித்து வெறுக்கின்றது எனக் குறிப்பிட்டு ஒரு முன்னுதாரண பரசராகவும், தூதராகவும் திகழ்ந்தார்கள் என்பதனை வரலாறுகள் இன்று வரை பறைசாட்டுகின்றன எனலாம்.
புனித இஸ்லாம் சிலை வணக்கமற்ற ஒரே இறைவனை நம்பிக்கையாகக் கொண்ட மார்க்கமாகும். மனிதன் இறைவனின் அந்தஸ்த்துக்கு சமனாகவோ அல்லது இறைவனாகவோ ஆக முடியாதென்கின்றதுடன் அவ்வாறான செயற்பாடுகள் இஸ்லாத்தில் இல்லை என்ற விடயத்தினை தெளிவபடுத்துகின்றது. ஆனால் இவ்யுகத்தில் ஒருசில மனிதர்கள் தம்மை கடவுளின் நேசர்கள். கடவுளின் மைந்தர்கள் என்று கூறி மக்களை திசைதிருப்பும் விடயங்களின் வெளிப்பாடாகவே மத துவேஷக் குணங்கள்தான் மத வெறியை ஏற்படுகின்றன.
இஸ்லாம் மனித குலத்தினை மதத்தால், இனத்தால், மொழியால், நிறத்தால் வேறுபடுத்துவதில்லை அவர் கறுப்பனாகவோ அல்லது வெள்ளையனாகவோ இருந்தாலும் அனைவரும் ஒரே தரத்தில் உள்ளவர்களாகவே போதிக்கின்றது. அனைத்து மனிதர்களும் ஒரே இறைவனால் படைக்கப்பட்டவர்கள் என்பதால் யாரும் இறைவனை மிஞ்சிவிட முடியாது என்பதே இஸ்லாத்தின் வரையறையாகும்.
இறைவன் எந்தவொரு மதத்திற்கும், சமுகத்திற்கும் சொந்தமானவனல்ல மாறாக அவன் முழு மனித சமுகத்தினையும் போசித்து பாதுகாக்கும் வள்ளமை கொண்டவனாகும். அந்த வகையில் இந்த வையகத்தில் முழு மனித சமுகத்திற்கும் உண்மையைப் போதித்து மக்களை நல்வழிப்படுத்த அல்லாஹ்வினால் அனுப்பப்பபட்ட ஒரு புனிதராக நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் விளங்குகின்றார்கள்.
இவ்வாறு அனுப்பப்பட்ட நபியவர்கள் மற்றவர்களுக்கு மரியாதை கொடுத்தல், சிறியோர், பெரியோரை மதித்தல், குற்றமிழமைத்தவர்களை மண்ணித்தல், மற்றவர்களுக்கு உதவி செய்தல், மாற்று மதங்களுக்கு மரியாதை கொடுத்து அவற்றின் மத நடவடிக்கைகளுக்கு உரிய மதிப்பைக் கொடுத்தல், ஏழை எளியவர்களுக்கு உதவும் உயரி பண்புகளையும், நோயாளிகளை சென்று சுகநலம் விசாரித்தல், தீய குணங்களையும், தீய பழக்கவழக்கங்களையும் இல்லாதொழித்தல் போன்ற நல்ல பண்புகளை கொண்டவராகவும் அந்த நல்ல விடயங்களை மக்களுக்கு எடுத்தியம்பி மக்களை தீய வழிகளில் செல்லாது நல்வழிப்படுத்திய ஒரு மாமனிதர் என்றால் அது முஹம்மது நபியவர்களையே சாரும்.
இஸ்லாம் சத்தியத்திற்காகவும், நீதி, நியாயங்களுக்காகவும், அத்துமீறல்கள். கொடுமைப்படுத்துவது தனிமனிதனையும், சமுகத்தினையும் பாதுகாக்கும் ஒரு உன்னத மார்க்கமாகும். இந்த மார்க்கத்தின் வழி முறைகளை நடைமுறைப்படுத்தவும், சகல சமுகங்களையும் அழிவுகளில் இருந்தும், ஆபத்துக்களில் இருந்தும் மானிடத்தைக் காப்பாற்றிய ஒரு தூதுவராக நபியவர்கள் செயற்பட்டவர் என்றால் அது மிகையாகாது.
முழு மனித குலத்தையும் மதத்தால், இனத்தால், நிறத்தால், மொழியால், பிரதேசத்தால் வேறுபடுத்தி பார்க்காத ஒரு மார்க்கம் என்றால் அது புனித இஸ்லாமாகும். முற்றிலுமே மதத் துவேசத்தினை விரும்பாத அதனை முற்றிலுமே அதனை வெறுத்த ஒரு மனிதராக ஏனைய சமயங்களுக்கும், சமுகங்களுக்கும் முன்மாதிரியாக இஸ்லாம் மார்க்கத்தின் புனிதத்துவம், கௌரவம் போன்ற அனைத்தையும் பாதுகாத்து நிலைபெற வைத்து முழு உலகிற்கும் இஸ்லாம் பரவுவதற்கும், வளர்வதற்கும் காரணமான இருந்த நபியின் சிறப்பான தினங்களை ஞாபகப்படுத்தி கௌரவப்படுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் முழு முஸ்லிம்களுக்கும் உண்டென்ற வகையில் இன்று அவரின் பிறந்த தினத்தினை சமய நடவடிக்கைகள் மூலம் கொண்டாடுகின்றனர்.
எனவே அந்த கருணை நபியவர்கள் காட்டிச் சென்ற பழக்க வழக்கங்கள், வாழ்வு முறைகள், போதனைகளை இஸ்லாமிய வரையறைகளுக்கு உட்பட்ட வகையில் கடைப்பிடிப்பதோ ஏனைய மதங்களைக் கொச்சைப்படுத்தி, கேவலப்படுத்தும் தீய செயற்பாடுகளில் இருந்து விலகி தற்போது நாட்டில் தாண்டவமாடும் இனவாத மற்றும் மதவாத செயற்பாடுகளில் இறங்காது ஒவ்வொருவரும் வாழும்போதே உண்மையான முஸ்லிமாக திகழ முடியும் என்பதுடன் இறைவனின் ஈடேற்றத்திற்கும் வழிவகுக்கும் எனலாம்.
