எம் .ஜே.எம்.சஜீத்-
இலங்கையில் 32 முஸ்லிம்கள் ISIS அமைப்பில் இணைந்துள்ளதாக அண்மையில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்தை தான் வன்மையாகக் கன்டிப்பதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் நிதியொதுக்கீட்டின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட ஒருதொகுதி தளபாடங்களை மட்/றூகம் சுபைர் ஹாஜியார் வித்தியாலயத்திற்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று (24) பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உறையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொறுப்புள்ள அமைச்சர் ஒருவர் அதுவும் நீதித்துறைக்கு பொறுப்பான அமைச்சர் நாட்டின் உயரிய சபையான பாராளுமன்றத்தில் முஸ்லிம் சமூகத்தின் மனங்கள் புன்படும் வகையில் கருத்துக்களை தெரிவித்துவிட்டு அதனை மக்களை விழிப்புணர்வு செய்யவே தெரிவித்ததாக சொல்வது கவலையான விடயமாகும்.
இந்த தேசத்தை முஸ்லிம்கள் காட்டிக் கொடுத்ததாக வரலாறுகள் கிடையாது. ஆனால் நாம் இனவாத தாக்குதல்களுக்கு காலத்திற்கு காலம் முகம் கொடுத்து வருகின்றோம். இனவாத குழுக்கள் நிலைத்து நின்றதாக உலக வரலாற்றில் எங்குமே எழுதப்படவில்லை. இந்த நாட்டில் வாழும் சிங்கள மக்களும் இனவாத குழுக்களை ஒருபோதும் ஆதரிக்கவில்லை. அதனை கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அவதானிக்க முடிந்தது.
இந்த நாட்டின் ஜனாதிபதி மற்றும் புலனாய்வு துறையினர் ஏனைய சிங்கள அரசியல் தலைவர்களும் நீதி அமைச்சரின் மேற்படி கருத்தினை மறுத்துறைத்துள்ளனர். இச்சந்தர்ப்பத்தில் நான் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இலங்கை முஸ்லிம்கள் இந்நாட்டின் பாதுகாப்புக்கு ஆதரவாகவும், பக்கபலமாகவும் செயற்பட்டவர்கள். அவர்கள் இந்த நாட்டில் வாழும் ஏனைய சமூகங்களுடனும் ஒற்றுமையாகவே வாழ்ந்தும் காட்டியுள்ளனர். தற்போது இந்நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகம் அச்சமான சூழ்நிலையிலே வாழ்ந்து வருகின்றனர்.
இவ்வாறான சூழ்நிலையில் நாம் பிரிந்து நின்று இப்பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வுகான முடியாது. அதற்காக எல்லோரும் சூரா சபையின் வழிகாட்டலில் வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
