கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் முறைகேடான அனுகுமுறை - பரீட்சாத்திகள் பாதிப்பு

பி.எம்.எம்.ஏ.காதர்-
கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் முறைகேடான அனுகுமுறைகளால் பட்டதாரிப் பரீட்சாத்திகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து மருதமுனை கல்வி அபிவிருத்தி மன்றத்தின் தலைவர் ஏ.எம்.றியாஸ் அறிக்கை ஒன்றை வெயளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;

கிழக்கு மாகாணத்திலே காணப்படுகின்ற நூற்றுக்கணக்கான பாட ரீதியான ஆசிரிய வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமிக்கின்ற போட்டிப் பரீட்சை 2016.10.22ம் திகதி சனிக்கிழமை மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் அரச வர்த்தமானியிலும் தேசியப் பத்திரிகைகளிலும் ஆட்சேர்ப்பு தொடர்பான அறிவுறுத்தல்களும் போட்டிப் பரீட்சை தொடர்பான தகவல்களும் வெளியாகியிருந்தன. இரண்டு பரீட்சை வினாத்தாள்கள் பரீட்சாத்திகளுக்கு வழங்கப்படும். உளச்சார்பு, பொது அறிவு என்ற இரு தகவல்கள் உள்ளடக்கப்பட்டிருந்தது. குறிப்பாக பொது அறிவு என்ற வர்த்தமானி அறிவித்தலில் பின்வருமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.


'ஆசிரியத் துறைக்கு இயைபுடைய அந்தத் துறை தொடர்பான பொது அறிவு மற்றும் தேசிய ரீதியில் இடம்பெறுகின்ற கல்வியின் போக்கு சம்பந்தமான பொது அறிவு மற்றும் கல்வியினை நவீனமயமாக்கல் சம்பந்தமான பொது அறிவு போன்றவற்றில் பரீட்சார்த்திகளுக்கு பல்தேர்வு வினாக்கள் மற்றும் சுருக்க விடை எழுதும் வினாக்களைக் கொண்ட வினாத்தாள் வழங்கப்படும்' என வர்த்தமானியில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

மேற்படி பொது அறிவு வினாத்தாள் தொடர்பான இவ்வறிவுறுத்தல் கல்வி தொடர்பான பொது அறிவினையே கற்கத் தூண்டுவதோடு பரீட்சார்த்திகளும் இலங்கையில் இடம்பெறுகின்ற நவீன கல்வியியற் போக்குகள், தேசிய ரீதியில் இடம்பெறுகின்ற கல்வியின் போக்குகள், ஆசிரியத்துவம் தொடர்பான கல்வியியல் விடயங்களை தேடிக் கற்றதோடு கருத்தரங்குகளிலும் வழிகாட்டிகளிடமிருந்தும் தகவல்களைப் பெற்றுக் கொண்டனர். 

ஆனால் நடந்தது என்ன....? பொது அறிவு வினாப்பத்திரம் சர்வதேச, தேசிய ரீதியாக இடம்பெற்ற சமகால மற்றும் பொது அறிவு விடயங்களை உள்ளடக்கியதாக இருந்தது. கல்வி தொடர்பான வினாக்கள் மிக அரிதாகக் காணப்பட்டது. பரீட்சார்த்திகள் மனக்கிலேசம் அடைந்து வேதனையான கருத்துக்களை கல்வியலாளர்களிடமும் ஊடகத்துறை சார்ந்தோரிடமும் பகிர்ந்து கொண்டனர். 

உண்மையிலேயே கல்வி என்ற விடயத்தை மையப்படுத்தி வினாத்தாள் தயாரிக்கப்படும் என்ற மாயையை வர்த்தமானியில் பிரசுரித்துவிட்டு சர்வதேச ரீதியாக, தேசிய ரீதியாக இம்பெற்ற விளையாட்டு, பண்பாடு, கலாச்சாரம், வரலாறு, விஞ்ஞானம், சமகால நிகழ்வுகள், சர்வதேச போக்குகள் போன்றவற்றை வினாத்தாளாக பரீட்சார்த்திகளுக்கு வழங்கிவிட்டனர். முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைத்து விட்டனர். 

பரீட்சார்த்திகளிடம் எழும் கேள்வி தேசிய ரீதியான கல்வியின் போக்குகள் தொடர்பான வினாக்கள் இடம்பெறவில்லை, ஆசிரியத்துவம் தொடர்பான, ஆசிரிய சேவை தொடர்பான எந்த வினாக்களும் இடம்பெறவில்லை அத்தோடு கல்வியின் நவீனமயமாக்கல் தொடர்பான எந்த வினாக்கள் தொடர்பிலும் பரீட்சார்த்திகள் பரீட்சிக்கப்படவில்லை.

வழங்கப்பட்ட வினாத்தாளுக்கும் வர்த்தமானி அறிவித்தலுக்கும் எந்தத் தொடர்புகளுமில்லை. பரீட்சை இடம்பெறுகின்ற இறுதி வாரம் வரைக்கும் கிழக்கு மாகாண சபை வினாத்தாளை அச்சடிக்கக் காத்திருந்திருக்கிறது. ஏனெனில், சர்வதேச ரீதியாக மிக அண்மையிலுள்ள சமகால பொது அறிவு நிகழ்வும் வினாக்களாக வந்திருந்தன. இதற்கு சிறந்த உதாரணம் தாய்லாந்து மன்னர் பூமிபோல் அத்துள் யாடேச் அவருடைய ஆட்சிக்காலம் தொடர்பாக கேட்கப்பட்ட வினாவினைக் குறிப்பிடலாம்.

உண்மையிலே இது கிழக்கு மாகாண கல்விச் சமூகத்திடம் சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும் குறிப்பாக கல்வி தொடர்பான நிறைந்த அறிவுடைய கௌரவ முன்னாள் மாகாணக் கல்விப் பணிப்பாளர், தற்போதைய கல்வி அமைச்சருமான தண்டாயுதபாணி, தற்போதைய மாகாணக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் எம்.ரி.ஏ.நிஸாம் ஆகியோரிடம் இப்பரீட்சை வினாத்தாள் தொடர்பான ஆலோசனைகளை கிழக்கு மாகாணப் பரீட்சைப்பிரிவு பெற்றிருந்ததா? என்பதும் பரீட்சார்த்திகளுக்கு சந்தேகத்தை தோற்றுவித்திருக்கிறது.

பரீட்;சார்த்திகளின் கருத்துப்படி கல்வி தொடர்பாக இரு வினாக்களே வினவப்பட்டதாக கண்ணீரோடு எம்மிடம் தகவல்களைப் பரிமாறிக் கொண்டனர். பொதுவாக பொது அறிவு வினாத்தாள் என்று பொதுவான ஒரு விடயத்தை வர்த்தமானியில் பிரசுரித்திருந்தால் நாங்கள் சர்வதேச தேசிய ரீதியான சகலவற்றையும் கற்று பரீட்சைக்குத் தயாராகி இருப்போம் என பரீட்சார்த்திகள் கூறுகின்றனர்.

இது தொடர்பில் கிழக்கு மாகாண சபையின் அரசியல் தலமைகள், கல்வியலாளர்கள் சற்று கரிசனை கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம். மேலும் இந்தப் போட்டிப் பரீட்சையிலே வர்த்தகப் பட்டதாரிகள் எவரும் பாட ரீதியாக உள்வாங்கப்படவில்லை. குறிப்பாக கணக்கியல், பொருளியல், வர்த்தகம் போன்ற பாடங்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கான எந்த வர்த்தமானி அறிவித்தலும் விடுக்கப்படவில்லை.

இது தொடர்பாக வர்த்தகப் பட்டதாரிகள் பரீட்சைக்கு விண்ணப்பிக்கின்ற தகுதியை இழந்து மனவேதனை அடைந்திருக்கின்றனர். எனவே பட்டப்படிப்பை முடித்துவிட்டு அல்லல்படுகின்ற பட்டதாரிகளுக்கு பரீட்சைகள் விமோசனமாகவும் அருமருந்தாகவும் அமைய வேண்டுமே தவிர அவர்களை பரிதவிக்க விடுகின்ற நிலமைக்கு இனிவரும் காலங்களில் கொண்டு வந்து விடக்கூடாது அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -