யாழ் முஸ்லீம்கள் வாழும் பகுதிகளில் கறுப்புக்கொடிகளை வீடுகளிலும் மற்றும் வர்த்தக நிலையங்களிலும் பறக்கவிடவுள்ளதாக முஸ்லிம் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் பிரதிநிதியும் முன்னாள் மாநகர சபை உறுப்பினருமான மௌலவி பி.ஏ.எஸ்.சுபியான் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (28) யாழ்.பெரிய முஹீயதீன் ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தனது கருத்தில்:-
1990 ஆம் ஆண்டு வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டு இருபத்தாறு வருடங்கள்(26) நிறைவடைந்துள்ளன.
தங்களுடைய இடங்கள் வீடுகள் காணிகள் சொத்துக்கள் பள்ளிவாசல்கள் எல்லாம் மீள புனரமைக்கப்படும் சந்தோசமான வாழ்க்கை தங்களுக்கு ஏற்படும் எனவும் தங்களுக்கும் தமிழ் மக்களுக்குமிடையியே நல்ல அன்னியோன்னியமான சூழல் ஏற்படும் எனவும் நம்பிய போதும் எவையும் நிறைவேற்றப்படவில்லை என்றே கூறலாம்.
இதனால் முஸ்லிம் மக்கள் எதிர்பார்த்த மீள்குடியேற்ற வேலைதிட்டங்கள் வடமாகாணத்தில் இடம்பெறவில்லை .வடக்கில் மீள்குடியமர்த்தபட்ட முஸ்லிம் மக்ளுக்கு எந்தவொரு அடிப்படை வசதிகளையும் எந்த தரப்பினராலும்மேற்கொள்ளவில்லை.
எனவே தான் எதிர்வரும் 30 ஆம் திகதி (நாளை) எமது எதிர்பார்ப்புக்கள் எவையும் நிறைவேற்றப்படவில்லை என்பதை வெளிப்படுத்தும் விதமாக கறுப்புக்கொடிகளை வீடுகளிலும் மற்றும் வர்த்தக நிலையங்களிலும் பறக்கவிட முடிவு செய்துள்ளதாக பி.ஏ.எஸ்.சுபியான் தெரிவித்தார்.