ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் அனுசரணையில் இலவச உம்ரா பயணத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள இமாம்கள் மற்றும் கதீப்மார்களுக்கான விமான பயணசீட்டுகள் மற்றும் ஆவணங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் கையளிக்கப்பட்டது.
நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 55 வயதுக்கு மேற்பட்ட, ஹஜ் , உம்ரா கடமைகளை நிறைவேற்றாத இமாம்கள் மற்றும் கதீப்மார்கள் 500 பேருக்கு இலவசமாக உம்ரா செய்வதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் செய்துள்ளது.
ஏற்கனவே, இத்திட்டத்தின் கீழ் 300 இமாம்கள் மற்றும் கதீப்மார்கள் மக்கா நகருக்கு அனுப்பி வைக்கப்பட்;டனர். மீதமுள்ள 200 பேரும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி மற்றும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி என இரண்டு கட்டமாக அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இவர்களுக்கான விமான பயணச்சீட்டு மற்றும் இதர ஆவணங்கள் கையளிக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை காத்தான்குடி அல்மனார் அர்ராஷீத் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், ஹிரா பௌண்டேஷன் தலைவர், இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், ஹிரா பௌண்டேஷன் செயலாளர் நாயகம் ஏ.எல்.எம்.மும்தாஸ் மதனி, காழி நீதிபதி மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி, பத்வா குழுத்தலைவர் ஏ.ஜி.எம்.அமீன் பலாஹி, காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் பொறியியலாளர் ஏ.எம்.எம்.தௌபீக், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் ஜே.பி, முன்னாள் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் ஜே.பி. உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.