எம்.வை.அமீர், எஸ்.எம்.கலீல் -
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகர் தினமும் 21வது ஆண்டு நிறைவு நிகழ்வும் 2016-10-24 ஆம் திகதி சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்தில் மரநடுகையுடன் ஆரம்பித்து பின்னர் ஒலுவில் வளாகத்திலும் தொடர் நிகழ்வுகள் இடம்பெற்றன.
பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
கடந்த 1995, ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவரும் அமைச்சருமான மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரபின் முயற்சியினால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின்; ஆட்சிக்காலத்தில் இப் பல்கலைக்கழகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கிழக்கிலங்கையினை தளமாக கொண்டு அம்மக்களின் கல்வித் தாகத்தினை மட்டுமல்லாது முழு இலங்கை முஸ்லிம் சமூகத்தினதும் கல்வித் தேவையினை முழுமையாக பூர்த்தியாக்குவதற்கு இடப்பட்ட அடித்தளமே தென்கிழக்கு பல்கலையாகும்.
இம்மகத்தான பணி முஸ்லிம் சமூகத்தின் விடிவுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம் எச் எம் அஷ்ரபின் சிந்தனை விருட்சமாக நீண்டாகால இலக்குடன் அவரது பிறந்த தினத்தில் இது உருவாக்கப்பட்டது. பல்லைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட இத்தினத்தை ஞாபகப்படுத்துமுகமாக ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் 23ஆம் இத்தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இப்பபல்கலையானது முழு முஸ்லிம் சமூகத்தின் விடுதலைக்கும் வித்திடும் தளமாகவே அதன் உருவாக்கம் திட்டமிடப்பட்டிருந்தது எனலாம். முஸ்லிம் சமூகம் ஒருபோதும் கல்வியில் இரண்டாம் தர நிலையில் இருந்து விட கூடாது என்கிற அடிப்படை நோக்கில் உருவாக்கபட்ட இப்பல்கலையானது இன்று அதனது அடைவுமட்டங்களை பல்வேறு விதத்தில் தடம்பதிக்கும் காலத்திற்குள் இரு தசாப்தங்களை கடந்திருக்கிறது.
உண்மையில் அன்று யுத்த சூழ்நிலை காரணமாக கிழக்குப் பல்கலைக் கழகத்தை சேர்ந்த முஸ்லிம் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாக மாறியபோது எமது முஸ்லிம் பகுதியில் பல்கலைக் கழகம் ஒன்றின் அவசியத் தேவையை உணர்ந்தது மட்டுமல்லாது இனத்துவ பிரச்சினையின் பால் எழுந்த 30 வருட கால கொடியயுத்தத்தினால் எதுவித பிரதான மற்றும் துணைக்காரணமும் இன்றி பல தரப்பினராலும் பல இனவாத குழுக்களாலும் பாதிப்புற்ற சமூகம் முஸ்லிம் சமூகமாகும். இதற்கு அறிவு ரீதியாகவே ஒரு தீர்வினை நமது சமூகத்துக்கு பெற்றுகொடுக்கும் அடிப்படையை மர்ஹூம் அஷ்ரப் எமது சமூகத்துக்கு உருவாக்கி கொடுத்தார்.
இதன் உருவாக்கத்தின் பின்னணியில் பல பெருந்தகைகள் உந்துசக்தியாக இருந்தனர் என்பதுடன் அன்றைய அரசின் அத்தனை வளங்களையும் சமூகத்துக்காக முழுமையாக பயன்படுத்தினார். சந்திரிக்கா அரசின் இயக்குனராக இருந்த ஒருவர் என்றால் அது அஷ்ரப் என்கிற தனி மரம் என்றே சொல்லலாம். அந்தளவு அரசின்அத்தனை ஆதிக்கத்தினையும் கட்சியின் தலைவனாக- ஒரு அரசியல் ஞானியாக- சமூகத்தின் ஒரு தொண்டனாக இருந்து மக்களுக்காக செய்த சமூகப்பணியின் வாரிசுகளை தென்கிழக்கு பல்கலைகழகம் இன்று தனது வெளியீடுகளாக உருவாக்கி கொண்டிருக்கிறது.
அத்துடன் அன்று ஒலுவிலில் பற்றைக்காடு நிறைந்த பகுதியில் கைவிடப்பட்டிருந்த அரிசி ஆலை கட்டிடமொன்றில் மறைந்த தலைவர் அமைச்சர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தை ஸ்தாபித்தபோது இருந்த நிலைமையும் அது தற்போது எழில் கொஞ்சும் பசுமை புரட்சியின் அழகு மிக்க தோற்றமும் அதன் நிர்வாகிகளாக இருப்பவர்களின் எண்ண அலைகளில் உருவானது என சொல்வதும் இங்கு பொருத்தமானது. அஷ்ரப் கொண்டிருந்த கலை நயத்தை பிரதிபலிக்கத்தக்க வகையில் தற்போதுள்ள அதிகாரிகளின் அர்ப்பணிப்பு மிக்க செயல்பாடுகள் பறைசாற்றுகின்றன.
மர்ஹூம் அஸ்ரபின் ஒவ்வொரு செயலும் பின் வந்த அரசியல் தலைவர்களுக்கு மாத்திரமல்லாமல் சமூகத்தின் அத்தனை பிரதிநிதிகளுக்கும் சாதனை வீரனாய் திகழ்வதற்கு முன்னுதாரணம் என்றே வரலாறுகள் சொல்கின்றன.
அந்த அடிப்படையில் உருவான தென்கிழக்கு பல்கலைக்கழகமானது இன்று அது பல அடைவு மட்டங்களை அடைந்து வெற்றி நடை போட்டுக்கொண்டிருப்பது குறித்து அதன் விரிவான பார்வை மீட்கப்படும் போதெல்லாம் மர்ஹூம் அஷ்ரப் எனும் விருட்சம் பற்றி நினைவு கூறுவது அவசியமானது என்றே கொள்ளலாம்.
அறிவொளி பரப்பும் தென்கிழக்கு பல்கலையானாது அது வாழும் காலமெல்லாம் மர்ஹூம் அஷ்ரபை நினைவு கூர்ந்தாக வேண்டும் என்பதனை எவரும் மறுபதற்கில்லை. அந்த வகையில் எமது தென்கிழக்கு பல்கலையானது அன்னாரை எப்போதும் மறந்து விடவில்லை என்பதை பறைசாற்றும் முகமாக இன்றைய தினத்தில் மற்றுமொரு அறிவு உலகை திறந்து வைக்கும் நிகழ்வு சம்மாந்துறையில் உள்ள தென் கிழக்கு பல்கலையின் பிரயோக விஞ்ஞான பீடத்தில் புதுப்பொலிவுடன் நவீன வசதிகளுடன் கூடிய நூலகமொன்று திறந்து வைக்கடுகிறது.
இந்த சந்தர்பத்தில் குறிப்பிட்டு சொல்லக் கூடிய மற்றுமொரு விடயம் என்னவெனில் மர்ஹூம் அஷ்ரப் தனது இறுதிக்காலத்தினை தென்கிழக்கு பல்கலையின் நூலகத்திலே கழிக்க விரும்பினார். அங்கிருந்து தனது ஆய்வினை தொடர இருந்த அவரது எண்ணம் அவரது மறைவால் முழு இலங்கையும் அவரது ஆய்வின் வெளிப்பாடுகளைஇழந்து நிற்கிறது.
இறுதியாக இது ஒரு தேசிய பல்கலைக்கழகம் என்ற ரீதியில் பல்லின மாணவர்களையும் பல்லின விரிவுரையாளர்களையும் பல்லின ஊழியர்களையும் கொண்டுள்ள நிலையில் அது உருவாக்கப்பட்டதன் நோக்கம் திசை தப்பாமல் பயணிக்க வேண்டியது காலத்தின் அவசிய தேவையாகும்.
கல்வி காலச்சார ரீதியாக தனது அடைவுகளை சமூகம் சார்ந்து தடம் பதிக்க வேண்டிய அவசியம் இருப்பது மட்டுமல்லாமல் சமூகத்தின் எதிர்கால தேவைகளையும் அடைவுகளையும் திட்டமிட்டு பயணிக்கவும் எதிர்காலத்தில் தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டியதொன்றுதான் அதன் உருவாக்கத்துக்கு கால்கோளாகியநம் தலைவனுக்கு நாம் அனைவரும் செய்யும் காணிக்கையாகும்.
அந்த வகையில் இன்று பதில் பதிவாளர் தலைமையில் நடைபெற்ற விசேட நிகழ்வுகளில் மர நடுகை, சிறப்பு சொற்பொழிவு என்பன இடம்பெற்றது குறிப்படத்தக்கது.