அட்டப்பள்ளம் மின் நிலையம்; யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை - என்கிறார் அதன் தலைவர்



அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் தனி நபர்களாலும் குழுக்களாலும் மிகவும் காரசாரமான விமர்சனங்களை பெற்றுவரும் நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தில் அமைந்துள்ள BIO Energy மின் உட்பத்தி நிலையத்தினால் சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது என்கிற பலமான குற்றச்சாட்டு தொடர்பில் ஹைரு பயோ எனர்ஜி சொலுஷன் நிறுவனத்தின் தலைவர் செய்னுலாபிதீன் முஹம்மத் ஹைரு அவர்கள் அவ்விவகாரம் தொடர்பில் நவமணிக்கு வழங்கிய சிறப்பு பேட்டியை இங்கு தருகின்றோம்.

நேர்காணல் : கலீல் எஸ் முஹம்மத்-

கேள்வி : முதலில் உங்களை பற்றிய சிறு அறிமுகத்தை சொல்லுங்கள்

ஹைரு : என்னை பற்றி பெரிதாக சொல்வதற்கு எதுவும் இல்லை, சதாரண ஒரு குடும்பத்தில் பிறந்த நான் பேராதனை பல்கலைக்கழத்தில் சிவில் என்ஜினியராக 1987 இல் வெளியாகி அரச மற்றும் பல தனியார் துறை நிறுவனங்களில் வேலை செய்து 1994 எனக்கென சொந்தமான தனியார் கம்பெனி ஒன்றினை உருவாக்கி இலங்கையில் மாத்திரமல்லாது வெளிநாடுகளிலும் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் தென்ஆபிரிக்கா நாடுகளில் தனது நிறுவனத்தினை விஸ்தரித்து இன்று பொருளாதார ரீதியிலும் தனிப்பட்ட ரீதியிலும் முன்னேறி பல உயிர்த்துடிப்புள்ள வளம்மிக்க கம்பெனிகளை சொந்தமாக நாடுகள் பல கடந்து செயல்படுத்திகொண்டு வருகிறேன்.

கேள்வி : தற்போது மிகவும் சர்ச்சைக்கும் பாரிய விமர்சனத்துக்குள்ளாகியுள்ள நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தில் இருக்கும் உங்களது சொந்த நிறுவனமான ஹைரு பயோ எனர்ஜி சொலுஷன் பற்றி கூறுங்கள், குறிப்பாக அதன் உருவாக்கம் அதன் பின்னணி சமூகத்துக்கு இதன் பலா பலன்கள் பற்றி சொல்லுங்கள்

ஹைரு : உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் பொறியியல் துறையில் பல்வேறு அனுபவங்களை பெற்ற நான் எனது சொந்த கிராமமான நிந்தவூரில் முழு கிழக்கு மாகாண மக்களும் குறிப்பாக அம்பாறை மாவட்ட மக்களின் பொருளாதாரத்தை வலுவூட்டும் எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அம்பாறை மாவட்ட மக்கள் இரண்டு பிரதான துறைகளில் தங்கியுள்ளனர்

ஒன்று விவசாயத்துறை மற்றொன்று மீன்பிடித்துறை இந்த இரண்டு துறைகளிலும் பாரிய வளம் எமது பிராந்தியத்தில் இருக்கிறது ஆனால் அவை சரிவர பயன்படுத்தபடுகிறதா என்று கேட்டால் இல்லை என்றே பதில் வரும். அது தொடர்பில் சிந்தித்தேன். எமது பிராந்தியத்தில் இருக்கும் மூலப்பொருளை கொண்டு எவ்வாறு கைத்தொழில் மயமான வர்த்தக ரீதியிலான முன்னேற்றத்தினை எமது சமூங்கத்துக்கு பெற்றுக்கொடுக்கலாம் என்று சிந்தித்தேன். பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலத்தை கொண்டிருக்கும் நாம் அரிசி உற்பத்தியில் இன்னும் ஏனையவர்களை நம்பி இருக்க வேண்டியுள்ளது

அந்த சந்தர்ப்பத்தில் தான் அரசுக்கு ஒரு திட்டம் இருந்தது உயிர் சக்தி மின் உற்பத்தி நிலையம் உருவாக்குவது தொடர்பில் அக்கறை கொண்டது. எதிர்காலத்தில் நாட்டிற்கு தேவையான மின் உற்பத்தியினை எவ்வாறு பெறுவது என்பதில் பாரிய சவாலை எதிர்நோக்கியுள்ளது. அதற்கு ஒரு தீர்வாக என்ன திட்டத்தினை நாம் முன்வைக்கலாம் என்கிற எனது முயற்சி அரசினால் அங்கீகரிக்கப்பட்டது.

அதாவது அன்றாடம் எமது பிராந்தியத்தில் அரிசி ஆலைகளில் இருந்து வெளியாகும் உமி கழிவுகளை கொண்டு செயல்படுத்தும் திட்டமாகும். பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர்களை கொண்டு இந்த திட்டம் 320 மில்லியன் செலவில் வடிவமைக்கப்பட்டது. 2009 யுத்தம் முடிவுற்ற பின் பாரிய அபிவிருத்தி திட்டம்களை உருவாக்க வேண்டும் என்றஎண்ணம் அரசுக்கு இருந்தது. அந்த வகையில் அரசு நிலக்கரி (COAL POWER PLANT) மூலம் செய்யும் திட்டமே இருத்தது. நிலக்கரி திட்டம் இந்த நாட்டிற்கு உகந்தது அல்ல என்பதை நான் அறிவேன். எனவே எனது பிராந்தியத்தில் இருக்கும் மூலப்பொருளை கொண்டு எவ்வாறு செயல் படுத்தலாம் என்பதே, அந்த வகையில் எமது திட்டம் உயிர் மின் உற்பத்தி திட்டமாகும்.

இங்கு பிரதானமாக நாம் சிந்தித்த விடயம் நெல் உற்பத்தியாளர்களுக்கு அவற்றை விற்பதற்கு உரிய விலை கிடைப்பதில்லை. அவர்கள் போடும் முதலுக்கு வருமானம் கிடைப்பதில்லை. இவற்றுக்கு காரணம் என்ன? நாங்கள் இன்னும் இன்னும் பாரம்பரிய எண்ணங்களில் சிந்தனைகளில் இருக்கிறோம் பாரியளவில் நெல் கொள்வனவு எந்த தனியாரும் செய்வதில்லை அரசும் இதனை முழுமையக செய்யும் என நாம் எதிர்பார்க்க முடியாது.

எனவே இவற்றை விஸ்தரிக்க வேண்டும். பாரிய அரிசி ஆலைகள் இந்த பிராந்தியத்தில் வரும்போது சமாந்தரமாக எல்லா தரப்பும் பொருளாதார ரீதியில்முன்னேற வாய்ப்பு இருக்கும். சாதாரண விவசாயிகளுக்கு பாரிய நன்மை இருக்கிறது என உணர்ந்தேன்.

தற்போதும் அரிசி ஆலைகள் இருக்கின்றன அவற்றில் இருந்து வரும் கழிவான உமியினை ஆங்கங்கே கண்ட இடத்தில் போட்டு எரியூட்டி எதற்கும் பிரயோசனம் இல்லாத ஒன்றாக ஆக்கிவிடுகின்றனர். இதனை மூலப்பொருளாக்கவே நாம் சிந்தித்தோம். சாதாரணமாக ஒரு நாளைக்கு 360 தொன் உமி கழிவாக தற்போது இருக்கும் அரிசி ஆலைகளினால் வெளியேறுகிறது. அந்தளவு வளமிக்க விவசாய கழிவை பயன்படுத்த நாம் முனைந்தோம். 

வெளிநாட்டில் இருந்து பல துறை சார் நிபுணர்களை வரவழைத்தோம். எனது பொறியியல் கம்பெனியினை அடிப்படையாக கொண்டும் இந்தியா சீனா பெல்ஜியம் தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து வரவழைத்து எமது பிராந்தியத்தில் உள்ளவர்களையும் உள்ளடக்கி எமது திட்டத்தினை 320 மில்லியனுக்கு வடிவமைத்து தற்போது மிகவும் சிறப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது

ஒரு நாளைக்கு 2 மெகா வாற் உற்பத்தியினை செய்யக்கூடியதாக இருக்கிறது. இது முழு நாட்டிட்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கும் நன்மை பயக்கும் திட்டமாகும்.

கேள்வி : இந்த மின் உட்பத்தி நிலையம் மூலம் சூழல் மாசுபடுகிறது, தோல் நோய் உட்பட பல நோய்களுக்கு மூல காரணமாக அமைகிறது என்கிற பாரிய குற்றச்சாட்டு அந்த பிராந்திய மக்களாலும் சமூங்க வலைத்தளங்களிலும் முன்வைக்கப்படுகிறது இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

ஹைரு : இது தொடர்பில் நீண்ட விளக்கத்தினை தரலாம் என நினைக்கிறேன். பிரதான குற்றச்சாட்டு இட அமைவிடமாகும், அட்டப்பள்ளம் பிரதேசம் ஏற்கனவே கைத்தொழில் பிரதேசமாகும் இப்பிரதேசத்தில் கடந்த பல வருடங்களாக 53 இற்கு மேட்பட்ட அரிசி ஆலைகள் இருக்கிறது. இது எமது பொருளாதாரத்தில் நேரடியாக செல்வாக்கு செலுத்தும் பிரதான மூலமாகும். இந்த அரிசி ஆலைகளை வேறு இடத்திற்கு மாற்ற முடியாது. அவ்வாறு மாற்ற முயற்சித்தால் எமது முழு மாவட்டத்தின் பொருளாதாரமும் அடிபடும். இது சாதாரண மக்களுக்கு விளங்காது. இதனை இன்னும் விஸ்தரிப்பு செய்ய வேண்டும். இன்னும் 100 அல்லது 15o அரிசி ஆலைகள் உருக்கப்பட வேண்டும். அதன் மூலம்தன் விவசாயிகளின் விளைவுகளை கொள்வனவு செய்யலாம் எமது எல்லா நெல் உற்பத்திகளினையும் அரசாங்கம் வாங்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

அந்த அடிப்படையில் இந்த இடம் மிகவும் பொருத்தமான இடமாக அரசு அடையாளம் கண்டது. இந்த அமைவிடத்தின் இரு பக்கமும் ஆறுகள் பாய்கின்ற நீர் வளம் நிறைந்த இடமாகும் அத்துடன் ஒரு POWER PLANT அமைவதற்கு தேவையான எல்லா வகையான பொருத்தங்களும் இவ் இடத்தில் காணப்படுகிறது. ஏறக்குறைய 300 மீட்டர் சுற்றுவட்டாரத்தில் எந்தவிதமான குடியிருப்புகளும் இல்லை.கடந்த பல தசாப்தங்களாக இயங்கிவந்த அரிசி ஆலைகளே இப்போதும் உள்ளன.

அடுத்தது இங்கு உற்பத்தி செய்யப்படும் மின் இலங்கை மின்சார சபைக்கே வழங்கப்படுகிறது அதற்கான வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் அதன் கம்பி இணைப்புகள் அப்பாதை வழியாக செல்வது, இது எமது திட்டம் ஆரம்பிக்கும் போதே இதற்கன அடிப்படை ஆய்வுகள் (FEASIBILITY STUDIES) மேட்கொள்ளப்பட்டது இதற்குரிய எல்லாவகையான அனுமதிகளும் உரிய உரிய அதிகார சபைகளிடம் இருந்து பெறப்பட்டுள்ளன BOI approval , sustainability Authority approval , environmental Authority இந் அனுமதி உட்பட சகல அனுமதிகளும் பெறப்பட்டுள்ளன.

அரசாங்கம் எமக்கு முழு அனுமதியும் தந்துள்ளது. யார் இந்த அனுமதியினை தர வேண்டுமோ அவர்கள் அனுமதி தந்துள்ளனர். மக்களுக்கும் சமூகத்துக்கு எந்த பாதிப்பு எற்பட்டால் அதனை அரசு தலையிட்டு தடைகளை ஏற்படுத்தும். இதற்கான முதலீடு 320 இற்கு திட்டமிட்டாலும் 720 மில்லியன் செலவாகியுள்ளது. இந்தளவு பாரிய நிதியினை ஈடுபடுத்தி வருமானம் மாத்திரம் உழைக்கும் எண்ணம் எனக்கு இல்லை. எனது திட்டம் சமூக நோக்கமானதும் தூர நோக்கானதும் மக்களின் பொருளாதார அபிவிருத்தியினை மையப்படுத்தியதுமாகும். அல்ஹம்துலில்லாஹ் நான் நிறைவாக உள்ளேன் இதன் மூலம் சமூகத்துக்கு பாதிப்பினை உண்டுபண்ணி பிழைப்பு நடத்தும் எண்ணம் எனக்கு கிஞ்சித்தும் இல்லை.

இந்த திட்டம் அரசியல்வாதிகளின் திட்டமல்ல, அரசாங்கத்தின் திட்டமாகும். தனியார் துறை ஈடுபாட்டுடன் அரசின் ஆலோசனை வழிகாட்டலுக்கும் அமைய நடைபெறுகிறது 2010 தொடக்கம் 2014 வரை அடிப்படை ஆய்வுகள் மேற்கோள்ளப்பட்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வந்த திட்டமாகும்

சுற்றாடல் அதிகார சபை எமக்கு அனுமதி தந்துள்ளது. இது ஒவ்வொரு வருடத்துக்கும் புதுப்பிக்கப்படுகிறது. அது மாத்திரமில்லாமல் ஒரு வருடத்துக்கு அனுமதியினை தந்துவிட்டு ஒவ்வொரு மூன்று மாதத்துக்கு ஒருமுறை அவர்கள் நேரடியாக வந்து பரிசீலனை செய்கிறார்கள்.

அடுத்தது இந்த குற்றசாட்டு செய்பவர்கள் அறிய வேண்டும் இது நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்யும் அனல் மின் திட்டம் அல்ல, சாம்பூர் அனல் மின் நிலையத்தினை இதனோடு ஒப்பிடுகிறார்கள். இது முற்றிலும் தவறானது. அங்கு உருவாக்க முனைந்தது நிலக்கரி மின் உற்பத்தி நிலையமாகும். இந்த நிலக்கரி மின் உற்பத்தி முறை உலகின் எல்லா இடங்களிலும் தடை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இது உயிர் மின் நிலையமாகும் (BIO ENERGY) என்பதை விளங்க வேண்டும்.

கழிவை எரித்து மின் உற்பத்தி செய்யும் நவீன முறையாகும். அந்த காலப்பகுதியில் எமது வீட்டின் அடுப்புகளில் நாம் பாவித்தது இந்த உமி. அதன் மூலம் வரும் கழிவான சாம்பலை எமது வீட்டுத்தோட்டங்களுக்கு நாம் பாவித்திருக்கிறோம். தென்னம் பாத்திகளுக்கு நாம் பாவித்திருக்கிறோம். அதன் புகையை மண் முட்டிக்குள் நிரப்பி புகை தண்ணீர் குடித்த காலம் இருந்தது மட்டுமல்ல எமது பற்களை அந்த சாம்பலால் துலக்கிய பொன்னான பழமையை மறந்துவிட்டார்கள். இதை ஏன் சொல்கிறேன் என்றால் இது ஒரு வளமிக்க மூலப்பொருளாகும் இது மக்களுக்கு பாதிப்பு என கூறுவது எந்தளவு பொருத்தமானது என்பதுதான் கேள்விக்குறி.

சூழலையும் சமூகத்தையும் எந்தவிதத்திலும் பாதிக்காமல் இருக்கும் வகையில் இந்த திட்டத்துக்கு நவீன தொழிநுட்பமுறையை உட்புகுத்தி இருக்கிறோம். இலங்கையில் இந்தநவீன முறை எங்கும் இல்லை. இது எல்லோருக்குமே ஆச்சரியமான ஒன்றாகும். குறிப்பாக நுரைச்சோலை அனல் மின்நிலையாத்தில் இல்லாத விசேட வடிவமைப்புகள் கொண்ட திட்டம் இங்கு செயல்படுத்தப்படுகிறது. இந்த நவீன முறைக்காகவே 400 மில்லியன் மேலதிகமாக செலவிடப்பட்டுள்ளது.

அடுத்தது தோல்நோய், இது எமது மின்நிலையத்தில் வெளியாகும் புகையினால் வருகிறது என்று சொல்லப்படுகிறது. இது ஓர் ஆதாரமற்ற பொய்யான பரப்புரையாகும். அவ்வாறு தோல் நோய் ஏற்பட எந்த வாய்ப்புமில்லை. இருந்தபோதிலும் இது குறித்து ஆராய்ந்து வருகிறோம். உண்மையில் அவ்வாறு பாதிப்பு இருக்குமானால் எமது CSR திட்டத்தினூடாக அதற்கான முழு நடவடிக்கையும் எடுக்க முயற்சிப்போம்.

கேள்வி : இங்கு நீங்கள் குறிப்பிடுகின்ற சூழலை பாதிக்காத நவீன தொழிநுட்பம் என்ன என்பதை குறிப்பிட்டு சொல்ல முடியுமா?

ஹைரு : இங்கு என்ன மூலப்பொருள் பாவிக்கபடுகிறது என்றால் வெறும் விவசாய கழிவான உமி, இந்த உமியை எரிப்பதன்மூலம் பெறப்படுவது 82% சிலிக்கா, சிலிக்கா என்பது எல்லோருக்கும் தெரியும் அது ஒரு மண்வகை இதனை நிலத்தினை நிரப்புவதற்கு பாவிக்கப்படுகிறது. அல்லது சிமெந்து கல்லு அல்லது, அல்லது சிமெந்து உற்பத்திக்கு பயன்படுத்துகிறார்கள். அத்துடன் 8% காபன் உள்ளது மீதமாக உள்ளவை அரிசி உற்பத்தியின் போது என்னவகையான கனியுப்புக்கள் உள்ளதோ அதுதான் இதிலும் இருக்கிறது. இது உண்மையிலே சூழலுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்ப்படாத விதமாகவே உள்ளது.

2030 இல் முழு நாட்டுக்குமான மின் உட்பத்தியினை SUSTAINABILITY PRODUCTION திட்டத்தினுள் உள்வாங்குவதற்கு இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. அதன் அடிப்படை வேலைத்திட்டத்தின் முதற்கட்டமான பணியினை நாம் செய்துள்ளோம்.

மக்களுக்கு விளங்கும் வகையில் நான் சொல்லப்போனால் எமது அடுப்பங்கரையில் இருந்த உமி, வீதியோரங்களில் நாம் எரித்த உமி, இன்று அதனை முறைப்படி எரித்து மின் உற்பத்திக்கு பயன்படுத்துகிறோம், அவளவுதான்.

கேள்வி : இந்த உற்பத்தி நிலையத்தில் வெளியிடப்படும் புகை மற்றும் சாம்பல்கள் அயலில் உள்ள வீடுகளில் பரவுவதாகவும் மரம் செடி கொடிகளில் பரவுவதாகவும் குற்றம் சுமத்தப்படுகிறதே?

ஹைரு : 100 அடி உயரமான புகை போக்கி அமைக்கப்பட்டுள்ளது அதில் சாம்பல் வருவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. 2 தட்டுகள் வடிவமைக்கப்பட்ட வடிகட்டிகள் (FILTERS) உள்ளே அமைக்கப்பட்டுள்ளது. ஒன்று MECHANICAL FILTER மற்றது BAG Filter இதிலிருந்து சாம்பல் வெளியாக்குவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை, புகை மாத்திரம் வெளியாகிறது. அதுவும் 100 அடிக்கு மேலால் செல்கிறது. இது BOI இனால் மற்றும் சுற்றுச்சூழல் அதிகார சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மக்களுக்கு எதுவித பாதிப்பையும் உண்டுபண்ணாத காபனீரொடசைட் வெளியாகிறது.

கடந்த பல தசாப்தங்களாக இதே அளவு வேளாண்மைதான் செய்கை பண்ணப்பட்டது. இதே அரிசி ஆலைகள் இருந்தன. இதே அளவு நெல் உற்பத்திதான் இடம்பெற்றது. இதே அளவு உமிதான் வெளியானது, நாளொன்றும்க்கு 70 தொடக்கம் 80 தொன் உமி எரிக்கப்படுகிறது, இவைதான் எமது வீதியோரங்களில் வீடுகளில், திறந்தவெளியில் எரிக்கப்பட்டு காற்றோடு கலந்தவைகள். இன்று அது ஒரு கட்டுக்கோப்பாக யாருக்கும் பாதிப்பு இல்லாமல் எமது மின் நிலையத்தில் நடைபெறுகிறது. மூடப்பட்டுள்ள இயந்திரம் கொண்டு எரிக்கப்படுகிறது. எந்தவிதத்திலும் காற்றில் கலந்து சுற்றுச்சூழலில் பறக்க வாய்ப்பில்லை.

கேள்வி: நிலத்தடி நீர் குறைவாதாகவும் அதிலும் சாம்பல் தூசி படிவதாகவும் அத்துடன் இரசாயண பதார்தம் கலந்த நீரை வடிகாலில் விடுவதாகவும் சொல்லப்படுகிறதே!

ஹைரு : எமது மின் உட்பத்தி செயல்பாடு பற்றி சற்று தெளிவுபடுத்தவேண்டும் அதாவது உமியை எரித்து தண்ணீ ரை சூடாக்கி பெறப்படும் நீராவி மூலம் TURBINE இயக்கப்படுகிறது. இந்த turbine இயங்குவதன் மூலமே மின் உற்பத்தி இடம்பெறுகிறது. இங்கு பாவிக்கப்படும் நீர் நீராவியாக்கமுதல் சுத்திகரிக்கப்படுகிறது. சுத்தமான நீர்தான் நீராவியாக்க பயன்படுகிறது. இங்கு நீர் சுத்திகரிப்பு என்பது சாதாரணமாக இடம்பெறும் செயல்பாடாகும். (அதாவது PH CORRECTION) அதன்பிறகு நீராவியானது TURBINE இயக்கத்தின் பின் COOLING TOWER மூலம் குளிர்விக்கப்பட்டு நீராக வெளியேறி மீண்டும் நிலத்தில் கலக்கிறது. இது ஒரு சுற்றுவட்டம் இதனால் நிலத்தில் நீர் குறையவோ அது அசுத்தமாகவோ இல்லை.

அத்துடன் இரசாயன பதார்த்தமும் இதில் கலக்கவில்லை. எந்த மின் உட்பத்தி நிலையத்துக்கு எதிராக கருத்துக்களை தெரிவிக்கிறார்களோ அவர்களாலேயே தற்போது முகநூலில் ஒரு வீடியோ பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவை பாருங்கள் அதில் நீர் வழிந்தோடும் வாடிகனில் புல் பூண்டுகள் முளைத்து இருப்பதை அவதானிக்கலாம். அத்துடன் இரசாயனம் கலந்திருந்தால் ஒருவகையான நுரை வரும், ஆனால் அவ்வாறு இல்லை. இரண்டு வருடமாக அந்த வாடிகனில் தண்ணீர் ஓடுகிறது. இரசாயனம் கலந்திருந்தால் புல்பூண்டுகள் முளைக்குமா இதிலிருந்தே விளங்குகிறதல்லவா இது அனைத்தும் போலியான குற்றச்சாட்டுகள் என்று.

இங்கு வெளியிடப்படும் நீர் சுற்றாடல் திணைக்களத்தினால் ஒவ்வொரு தடவையும் பரிசோதனைக்கு உட்படுகிறது. எமது ஆய்வுகூடத்தில் பரிசீலிக்கப்படுகிறது இதுவரை எந்தவிதமான இரசாயன மாசுபடுத்தல்கள் இடம்பெற்றதாக இல்லை

நாங்கள் பாவித்திருக்கும் தொழிநுட்பம் எல்லோருக்கும் விளங்காது. இது சில்லறை அரசியல் ரீதியான குற்றசாட்டு அதுவும் பெரும் பெரும் அரசியல் தலைமைகளால் அல்ல, சிறு பிள்ளைத்தனமான குற்றச்சாட்டு, நான் ஒரு கட்டத்தில் அரசியலுக்கு வந்துவிடுவேன் என்கிற அச்சம் கொண்டுள்ளனர். ஆனால் எனக்கும் அரசியலுக்கும் வெகு தூரமாகும், அந்த நாட்டமே எனக்கு இல்லை

கேள்வி : அப்படியானால் இந்த தாவரங்களில் படிந்திருக்கும் தூசு எங்கிருந்து வருகிறது?

ஹைரு : காலாகாலமாக அட்டப்பள்ளம் பிரதேசத்தில் கல் வாடிகள் இருக்கிறது. அங்கு கல் சுடுவதற்றுக்கு உமி எரிக்கப்படுகிறது இது திறந்தவெளியில் இடம்பெறுகிறது அவை காற்றில் கலக்கலாம். அத்துடன் எமது இடத்தில் இருந்து காணிகளை மூடுவதற்காக சாம்பல்களை மெஷின்களில் ஏற்றி செல்கின்றனர். அந்த சந்தர்ப்பத்திலும் சாம்பல் துகள்கள் காற்றோடு கலக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

கேள்வி : இதிலிருந்து வெளியாகும் வெப்பம் அருகில் உள்ள மரங்களுக்கும் ஏனைய மரங்களுக்கும் பாதிப்பை உண்டுபான்ணாதா?

ஹைரு : எமது நிலையத்துக்கு சென்று பார்த்தால் தெரியும் அங்கு நிறைய மரங்கள் உள்ளன. உமியினை எரிக்கும் இடத்துக்கு அருகிலே மரம் உள்ளது. எந்த பாதிப்பும் இல்லை, இங்கு HEAT RESISTANT TECHNOLOGY பாவிக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் அறிந்துகொள்ளாமல்தான் முகநூலில் எழுதுகிறார்கள். இது அறியாமையின் விளைவுதான். இவற்றை பரிசீலித்து அனுமதி தருவதற்க்கு அதிகார சபை இருக்கிறது. அவர்கள் வந்து பரிசீலித்ததன் பின்தான் எமக்கு அதனை இயக்க அனுமதி தருகிறார்கள். 

கேள்வி : இது தொடர்ப்பாக ஒரு சில பொறியியலாளர்கள் கூட இந்த குற்றசாட்டை முன்வைக்கிறார்களே?

ஹைரு : அநேகமாக எல்லா பொறியியலாளர்களும் ஒத்துழைப்பு வழங்குகிறார்கள், கட்டிடம் கட்டுவது ரோடு போடுவது மாத்திரம் அல்ல நமது துறை, இதனை எல்லோரும் செய்யலாம், ஆனால் சுகாதாரத்தில், விவசாயத்தில், மீன்பிடியில் எமது பொருளாதாரத்தை முன்னேற்றும் துறைகளில் நாம் கற்ற கல்வியை ஈடுபடுத்த வேண்டும். அப்போதுதான் சமூகமும் நாடும் முன்னேறும்.

இக்குற்றச்சாட்டு தொடர்பில் அதன் தொழிநுட்பம் சார்ந்த விடயத்தில் ஏதவது சந்த்தேகம் இருந்தால் யாரும் என்னை கேள்வி கேட்கலாம். தெளிவு கொடுக்க தயாராக இருக்கிறேன். இது ஒரு திறந்த தொழிநுட்பம். 720 மில்லியன் திட்டம் பூட்டிய அறைக்குள் விளையாடும் விளையாட்டு அல்ல. ஆனால் ஒன்றை கூறுகிறேன் நித்திரை செய்பவனை எழுப்பலாம் நடிப்பவனை என்னால் தட்டி எழுப்ப முடியாது.

இது நூற்றுக்கு நூறு வீதம் என்மீது கொண்டுள்ள தனிப்பட்ட பொறாமையின் வெளிப்பாடு. எனது இந்த திட்டம் 100% மக்களுக்கு அதிலும் குறிப்பாக விவசாயத்துக்கு அடிப்படையான, விவசாயிகளின் பொருளாதாரத்தை உச்சப்படுத்தும், ஊக்கப்படுத்தும் திட்டமாகும். இது தொடர்பில் எமதூரில் உள்ளவர்கள் அனைவருக்கும் தெரியும். இதனை எமது மக்கள் ஒரு வரப்பிரசாதமாக பார்க்கிறார்கள்.

கேள்வி : உங்களது இந்த திட்டம் சமூக நலன் சார்ந்தது என்று நீங்கள் கூறினாலும் இதன் மூலம் வழங்கப்பட்டுள்ள தொழிவாய்ப்புகள் எமது சமூகத்தை சார்ந்தவர்களுக்கு வழங்கப்படவில்லை என்பது பற்றி?

ஹைரு : இது ஒரு பொய்யான தகவல், 2 சிங்கள இனத்தவர்களை தவிர மற்றைய அனைவரும் எமது பிராந்தியத்தை சேர்ந்தவர்களும் எமது சமூகத்தை சார்ந்தவர்களுமே. இதிலே ஒன்றை சொல்லவேண்டும் இங்கு நேரடியாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொழில் வாய்ப்பினையே வழங்க முடியும் ஆனால் மறைமுகமாக ஆயிரக்கணக்கானவர்கள் தொழில் செய்கிறார்கள் நன்மையடைகிறார்கள்.

கேள்வி : எது எப்படி இருந்த போதும் இதற்குரிய அனுமதிகள் முறையாக பெறப்படவில்லை, பணம் கொடுத்து கடந்த மஹிந்த ஆட்சியின் போது பஸீல் ராஜபக்சவை வைத்து உருவாக்கப்பட்ட ஒன்று என்றும் சொல்லப்படுகிறது?

ஹைரு : மஹிந்த காலத்தில் உருவாக்கப்பட்ட மத்தள விமான நிலையம் முறையாக இன்று இயங்குகிறதா? அரிசி களஞ்சியத்துக்கல்லவா பயன்படுகிறது, மஹிந்த காலத்தில் உருவாக்கப்பட்ட கொழும்பு போர்ட் சிட்டி திட்டம் எவ்வளவோ தடைகளை எதிர்நோக்கி இருக்கிறது, இன்னும் மீள ஆரம்பிப்பதில் சிக்கல் இருக்கிறது. அப்படிப்பார்த்தால் எமது மின்நிலையத்தை மூடுவது தற்போதுள்ள நல்லாட்சி அரசுக்கு மிகவும் சுலபமான காரியம். எமது அனுமதியில் குறை இருக்குமானால் நல்லாட்சி அரசு அதனை பார்த்துக்கொண்டு சும்மா இருப்பார்களா!

இன்றும் கூட ஜனாதிபதி செயலகத்துக்கு, பிரதமர் அலுவலகத்துக்கு முறைப்பாடுகள் சென்ற வண்ணமே உள்ளன, எல்லாமே ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் ஒவ்வொரு கிழமையும் எம்மை பரிசீலிக்க அதிகாரிகள் வருகிறார்கள். மாவட்ட சுகாதார பரிசோதகர்கள் வருகிறார்கள், நாம் அரசின் சட்டதிட்டங்களை மதித்தது உரிய முறைப்படி செயல்படுகிறோம்.

கேள்வி: நமது பிராந்தியத்தில் தொழில் வாய்ப்பினை வழங்க கூடிய கைத்தொழில் பேட்டைகள் உருவாக்கப்பட வேண்டும் உற்பத்தி நிலையங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றெல்லாம் அரசியல் தலைமைகள் தொடக்கம் சாதாரண பொது மக்கள் வரை பேசிக்கொள்கிறார்கள். ஆனால் எவரிடத்திலும் எந்த திட்டமும் இல்லை. அமைக்கப்பட்டிருக்கும் இது போன்ற நிறுவனகள் மூலம் எமது பிராந்தியத்தின் தொழில் பேட்டைக்கான தேவை பூர்த்தியாகும் என எதிர்பார்க்கலாமா அல்லது தொடர்ந்தும் பாரிய சவாலாகவே இருக்குமா?

ஹைரு : 2009 யுத்தம் முடிவுற்றதன் பின்னர் தனியார் தொழில் நிறுவனம் ஒன்றை அம்பாரை மாவட்ட மக்களுக்கு நானே முதலில் கொண்டுவந்ததேன். எமது பிராந்தியத்தில் மர்ஹூம் அஷ்ரபினால் தென் கிழக்கு பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. அதிலே தற்போது பொறியியல் பீடமும் உருவாகியுள்ளது. அண்மையில் பொறியியல் பீட மாணவர்கள் பிரச்சினையை எல்லோரும் அறிவீர்கள். அவர்களுக்கு தேவையான கைத்தொழில் பயிற்ச்சி நிறுவனம் இங்கு இல்லை, என்பது பாரிய குறைபாடு அவற்றுக்காக பல போராட்டங்கள் நடாத்தினார்கள்.

இவற்றுக்கு தீர்வு என்ன என்று யாரும் சிந்திப்பதில்லை. மாறாக இருப்பதை இல்லாமல் செய்யவே அனைவரும் விரும்புகிறார்கள்.

இந்த பிரதேசம் முன்னேற வேண்டும். இன்னும் இன்னும் நிறைய தொழில் பேட்டைகள் உருவாக்க வேண்டும். அப்போதுதான் எமது பிராந்தியத்தில் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகமும் வாழும், அவர்களுக்கும் சிறந்த கல்வி வாய்ப்பு கிடைக்கும். பொறியியல் துறை என்பது வெறும் புத்தகத்தை படிப்பதால் முழுமை பெறாது, அவர்கள் சிறந்த முறையில் பயிற்றுவிக்கப்படவேண்டும்.

அந்த வகையில் எமது நிறுவனத்துக்கு தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள் மாத்திரம் அல்ல பேராதெனிய, மொரட்டுவ, ருகுணு ஆகிய பல்கலைக்கழகத்தில் இருந்தும் மாணவர்கள் வந்து பயிற்ச்சி பெறுகிறார்கள்.

இவற்றையெல்லாம் அரசு செய்து தரும் என்று நாம் வாய்பார்த்துக்கொண்டு இருக்க முடியாது, இந்த பிராந்தியம் அபிவிருத்தியில் தன்னிறைவு அடைய வேண்டுமானால் இவ்வாறான உற்ப்த்தி நிறுவனங்கள் உருவக வேண்டும்.

அந்தவகையில் பாரிய நெல் களஞ்சிய சாலை (SCIENTIFIC STORAGE )ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளேன் எதிர்காலத்தில் விவசாயிகள் நேரடியாக நெல்லை களஞ்சியப்படுத்தும் ஒரு முறையாகும். இதன் மூலம் விவசாயத்துறை பாரிய அபிவிருத்தியை காணும், நெல் உற்பத்தியில் புதிய நவீன முறை உட்படுத்தும் போது நேரடியாக ஏற்றுமதி தேவைக்கு எமது உற்பத்திகள் உருவாகும். சந்தை வாய்ப்பு கிடைக்கும். அந்த வகையில் புதிய அரிசி ஆலைகள் உருவாகும். இதன் மூலம் எமது பிரதேசம் பொருளாதார ரீதியில் முன்னேறும்.

அதே போன்று மீன்பிடி துறையில் பாரிய திட்டம் என்னிடம் உள்ளது. நவீன மீன்பிடி முறை இங்குள்ளவர்களுக்கு தெரியாது. ஏற்றுமதிக்கான மீன்பிடிமுறை இல்லை. அவற்றையெல்லாம் அறிமுகப்படுத்தும் திட்டம் என்னிடம் உள்ளது. அந்த அடிப்படையிலே ஒலுவில் துறைமுகத்துக்கு அருகில் பாரியளவில் படகு உற்பத்தி நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு பிரயோசனமும் இல்லாத உமியினை மூலப்பொருளாக்கி இருக்கிறோம். இதிலிருந்து சிந்திக்கவேண்டும். இதை விட பெரிதாக ஒன்றும் சொல்ல தேவையில்லை. நாம் எமது பிரதேச அபிவிருத்தியினை தூர நோக்கில் சிந்திக்கிறோம் இதனை நாம் ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டு செய்ய முடியாது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -