இலங்கை முஸ்லிம்களுக்கு அரசியல் அடையாளத்தினை பெற்றுக்கொடுத்த மாபெரும் அரசியல் தலைவர் அஷ்ரப் அவர்கள் சஹீதாகி இன்றுடன் பதினாறு வருடங்கள் பூர்த்தியாகின்றது. இலங்கை சுதந்திரம் அடைந்ததற்கு பின்பு இந்நாட்டில் இரண்டு தேசிய இனங்கள் வாழ்கின்றார்கள் என்ரே நம்பப்பட்டது. இந்நாட்டின் முழு அதிகாரங்களும் பெரும்பான்மை சிங்களவர்களிடம் இருக்கின்ற நிலையில், பன்னிரண்டு சதவீதமான சிறுபான்மை தமிழர்கள் தங்களது அரசியல் உரிமையை கோரி போராட்டங்களை முன்னெடுத்தார்கள்.
எட்டு சதவீதமாக வாழ்ந்த இன்னுமொரு சிறுபான்மை இனமான முஸ்லிம்கள் ஒரு தனித்துவ சமய, கலாச்சார பாரம்பரியங்களை கொண்ட ஒரு தேசிய இனம் என்ற உண்மை இவ்வுலகத்துக்கு மறைக்கப்பட்டிருந்தது. இந்நாட்டு முஸ்லிம் மக்கள் சிங்கள, தமிழ் கட்சிகளிலும், தமிழீழ ஆயுத இயக்கங்களிலும் இணைந்துகொண்டு அக்கட்சிகளினதும், இயக்கங்களினதும் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு தங்களது தனித்துவ அரசியல் அடையாளத்தினை இழந்தவர்களாக காணப்பட்டார்கள். ஆளும் சிங்கள தேசிய காட்சிகளில் அமைச்சர்களாக இருப்பவர்களே முஸ்லிம் மக்களின் தலைவர்கள் என்ற நிலை அப்போது காணப்பட்டது. முஸ்லிம் மக்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டபோது தனது இனத்துக்காக குரல் கொடுக்க முடியாதவர்களாக அந்த முஸ்லிம் தலைவர்கள் காணப்பட்டார்கள்.
திரு எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் முஹம்மத் ஹுசைன், மதீனா உம்மாஹ் தம்பதிகளுக்கு 1948.10.23 ஆம் திகதி சம்மாந்துறையில் பிறந்தார். இவருக்கு மூன்று சகோதரிகள் உண்டு. தனது இளமைப்பருவத்தில் கல்முனைகுடியில் வளர்ந்தாலும் இவர் அதிகமாக பழகிய ஊர் சாய்ந்தமருதாகும். கம்பொலயை சேர்ந்த பேரியல் இஸ்மாயில் என்பவரை திருமணம் செய்தார். இவருக்கு அமான் என்னும் ஆண் மகன் உண்டு. திருமணத்துக்கு பின்பு கல்முனை அம்மன் கோவில் வீதியில் தமிழர்களின் எல்லை பிரதேசத்திலேயே வாழ்ந்து வந்தார். தமிழ் - முஸ்லிம் இனக்கலவரம் ஏற்பட்டபோது இவரது வீடு தீக்கிரையாக்கப்பட்டது.
தனது ஆரம்ப கல்வியை கல்முனைக்குடி அல் அஸ்ஹர் வித்தியாலயத்திலும், பின்பு கல்முனை பாத்திமா கல்லூரி, கல்முனை வெஸ்லி உயர் பாடசாலை, மற்றும் கொழும்பு அலெக்ஸ்சாண்டிரியா கல்லூரியிலும் கல்வி பயின்றார். பின்பு சட்டக் கல்லூரிக்கு தெரிவான திரு எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் 1975 ஆம் ஆண்டு அரச சட்டத்தரணியாக நியமனம் பெற்றார். அடக்கி ஒடுக்கப்பட்ட ஓர் சிறுபான்மை இனம் அரசியல் உரிமையினை பெற்று சுதந்திரக்காற்றை சுவாசிக்க வேண்டும் என்ற அடிப்படை உணர்வினை கொண்டிருந்த சட்டத்தரணி அஷ்ரப் அவர்கள் தனது ஆரம்பகால அரசியலை தமிழர் விடுதலை கூட்டணியிலிருந்து ஆரம்பித்தார்.
சட்டத்தரணி அஷ்ரப் அவர்கள் நினைத்திருந்தால் சிங்கள தேசிய காட்சிகளில் இணைந்துகொண்டு அவர்களின் சலுகைகளை பெற்று சுகபோக வாழ்வினை மேற்கொண்டிருக்கலாம். ஆனால் அடக்கப்பட்டதும், ஒரே தமிழ் மொழியை பேசுகின்ற ஒரு சிறுபான்மை இனத்தினை பிரதிநிதித்துவம் செய்கின்ற கட்சியுடன் சேர்ந்து பயணிப்பதன் மூலம் தமிழர்களுக்கு கிடைக்கின்ற அதே அரசியல் உரிமையினை இன்னுமொரு சிறுபான்மை இனமான முஸ்லிம் மக்களுக்கும் பெற்றுக்கொடுக்க முடியும் என்று நம்பினார்.
தமிழர் விடுதலை கூட்டணியின் உயர்பீட உறுப்பினராக இருந்த சட்டத்தரணி அஷ்ரப் அவர்கள் “அண்ணன் அமிர்தலிங்கத்தினால் தமிழ் ஈழத்தினை பெற்றுத்தராவிட்டால் இந்த அஷ்ரப் ஆகிய நான் அதனை பெற்றுத்தருவேன்” என்று மேடை மேடையாக முழங்கினார். இந்த நிலையில் 1981 ஆம் ஆண்டு மாவட்டசபை தேர்தல் அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. அந்த தேர்தலில் முஸ்லிம்களுக்காக சில விட்டுக்கொடுப்புக்களை கோரியிருந்தனர். அதாவது முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் அம்பாறை மாவட்டத்தில், இந்த மாவட்டசபை தேர்தலுக்கான முதன்மை வேற்பாளராக ஒரு முஸ்லிமை நியமிக்குமாறு முஸ்லிம் ஐக்கிய முன்னணி சார்பாக தமிழர் விடுதலை கூட்டணியிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
ஆனால் அந்த வேண்டுகோள்கள் நிராகரிக்கப்பட்டு முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாறை மாவட்டத்தில் தமிழர் ஒருவரே முதன்மை வேற்பாளராக நியமிக்கப்பட்டார். தமிழர் விடுதலை கூட்டணியின் இந்த ஒருதலைபட்ச செயற்பாடு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்களின் நீதியற்ற செயற்பாட்டினால் சட்டத்தரணி அஷ்ரப் அவர்கள் விரக்தியடைந்தார்.
தமிழர் விடுதலை கூட்டணியில் அரசியல் பயணத்தினை மேற்கொண்டாலும் முஸ்லிம்களின் தனித்துவத்தினை எந்த சந்தர்ப்பத்திலும் சட்டத்தரணி அஷ்ரப் அவர்கள் விட்டுக்கொடுத்ததில்லை. அன்றைய சில முஸ்லிம் அரசியல் பிரமுகர்களுடன் சேர்ந்து முஸ்லிம் ஐக்கிய முன்னணியில் சட்டத்தரணி அஷ்ரப் அவர்கள் முஸ்லிம்களின் தனித்துவ அரசியலை முன்னெடுக்க முற்பட்டார். ஆனால் தன்னுடன் முஸ்லிம் ஐக்கிய முன்னணியில் பயணித்த அனைவரும் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் சங்கமித்தார்கள். அவர்களது கொள்கைகள் அனைத்தும் பதவிகளுக்காக தடம்புரண்டன.
இந்நிலையிலேயே தனது சமூகத்தின் தனித்துவத்தினை உறுதியாக பேணும் பொருட்டு சட்டத்தரணி எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்னும் அரசியல் இயக்கத்தினை 1981.09.21 ஆம் திகதி காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள பாலர் பாடசாலை மண்டபத்தில் வைத்து ஆரம்பித்தார். இருந்தும் அப்பொழுது இக்கட்சி முஸ்லிம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று இருக்கவில்லை. விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே கூட்டத்துக்கும் சமூகமளித்தார்கள்.
1987 ஆம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தம் மூலம் வடக்கும் கிழக்கும் ஒரேமாகானமாக இணைக்கப்பட்டபோது, இம்மாகானங்களில் செறிவாக வாழ்ந்த முஸ்லிம் மக்கள் அரசியல் அனாதையாக்கப்பட்டிருந்தார்கள். இந்த சூழ்நிலையிலேயே முஸ்லிம் காங்கிரசின் செயற்பாட்டினை அதன் தலைவர் சட்டத்தரணி எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் தீவிரப்படுத்தி 1988.02.11 ஆம் திகதி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசினை ஒரு அரசியல் கட்சியாக தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்தார்.
முஸ்லிம் காங்கிரஸ் வடகிழக்கு மாகாணசபை தேர்தலில் விடுதலை புலிகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தனித்து போட்டியிட்டு 168,038 வாக்குகள் பெற்றதுடன் பதினேழு மாகாணசபை உறுப்பினர்களை முஸ்லிம் காங்கிரஸ் பெற்றிருந்தது. அதாவது முஸ்லிம் மக்கள் முஸ்லிம் காங்கிரசுக்கு அங்கீகாரமும், ஆணையும் வழங்கியதுடன், சட்டத்தரணி அஷ்ரப் அவர்களை முஸ்லிம்களின் தலைவராக ஏற்றுக்கொண்டார்கள்.
அதன் பிரதிபலிப்பாக பிரதமர் ஆர். பிரேமதாசா அவர்கள் தலைவர் அஷ்ரப் அவர்களை அழைத்து ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவளிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக்கொண்ட தலைவர் அஷ்ரப் அவர்கள் பிரேமதாசாவிடம் நிபந்தனை விதித்தார். அவர் என்ன நிபந்தனை விதித்தார், மற்றும் அவரது அந்திம வாழ்வு பற்றிய விபரங்களை இதன் தொடர்ச்சியாக அடுத்த பதிவில் வெளிவரும்.
முகம்மத் இக்பால்,
சாய்ந்தமருது.