ஷபீக் ஹுஸைன்-
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அஷ்ரப் அல்குர்ஆன் ஆய்வு மையம் நடாத்தும் கிராஅத் போட்டி இன்று (28) காலை கட்சியின் 'தாருஸ்ஸலாம்' தலைமையகத்தில் ஆரம்பமானது. தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கட்சி தலைமையகத்துக்கு வருகை தந்து நடுவர்கள், போட்டியாளர்கள், பெற்றோர் ஆகியோருடன் அளவலாவியதன் பின்னர் போட்டிகள் ஆரம்பமாகின. நடுவர் குழாம்களில் உள்நாட்டு நடுவர்களுடன் வெளிநாட்டு காரிகளான நடுவர்களும் இடம்பெற்றனர்.
நாடெங்குமிலிருந்து வந்திருந்த ஏறத்தாழ 400 பேர் வரையிலான ஆண் போட்டியாளர்கள் 8 நடுவர் குழாம்களின் முன்னிலையில் இனிமையான தொனியில் திருக்குர்ஆன் வசனங்களை ஓதிக் காண்பித்தனர். அவர்களில் 20 வயதுக்கு குறைந்தர்கள், 20 வயதுக்கு மேற்பட்டவர்கள், சர்வதேச கிராஅத் போட்டிகளில் கலந்துகொண்டவர்கள் என மூன்று ஆண்கள் பிரிவினருக்கான போட்டிகள் நடைபெற்றன. தெரிவு செய்யப்பட்டவர்கள் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர். தொடர்ந்து ஆண்களுக்கான இறுதிப் போட்டி இடம்பெற்றது.
பெண் போட்டியாளர்ளுக்கான நாடு தழுவிய கிராஅத் போட்டி நாளை (29) தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் காலை 8.00 மணியிலிருந்து நடைபெறவுள்ளது.
ஆண், பெண் பிரிவினருக்கான இறுதிச் சுற்று போட்டிகளில் வெற்றிபெறுபவர்களுக்கு பெறுமதியான வெகுமதிகள் வழங்கப்படவுள்ளன.
இறுதி சுற்றில் தெரிவு செய்யப்பட்டவர்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் மறைந்த தினமான செப்டம்பர் மாதம் 16ஆம் திகதியன்று அஷ்ரப் அல்குர்ஆன் ஆய்வு மையத்தினால் கொழும்பு தாமரைத்தடாக கலையரங்கில் நடத்தப்படவுள்ள கிராஅத் நிகழ்வில் அழகிய குரலில் திருக்குர்ஆனை ஓதுவர்.