சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் நேற்று சனிக்கிழமை (13) கல்முனை மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்ட கொத்தணி முறையிலான சுத்திகரிப்பு வேலைத்திட்டத்தின் மூலம் அப்பகுதியிலிருந்து சுமார் 80 ஆயிரம் கிலோ கிராம் குப்பை கூளங்கள் சேகரித்து அகற்றபட்டுள்ளன. .
கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமதின் வழிகாட்டலில் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலியின் நேரடி கண்காணிப்பில் அன்றைய தினம் காலை 6.00 மணி தொடக்கம் முழுநாள் முன்னெடுக்கப்பட்ட இவ்வேலைத் திட்டத்தில் கொம்பெக்டர்கள், பெக்கோ இயந்திரங்கள், உழவு இயந்திரங்கள், லொறிகள் உட்பட 15 வாகனங்களுடன் 80 ஊழியர்கள் ஒரே தடவையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டனர்,
இதன்போது சாய்ந்தமருது பிரதேசத்தில் பல பொது இடங்களில் குவிக்கப்பட்டிருந்த குப்பைகள் முற்றாக அகற்றப்பட்டு, அப்பகுதிகளின் சுற்றாடல் சுத்தம் செய்யப்பட்டதுடன் பெரும்பாலான வீதிகளில் வாகனங்கள் களமிறக்கப்பட்டு வீட்டுக்கு வீடு, குப்பைகள் சேகரிக்கப்பட்டன.
இதற்கான திட்டமிடலின்போது சுமார் 50 ஆயிரம் கிலோ கிராம் திண்மக் கழிவுகளை சேகரித்து அகற்றுவது என இலக்கு வைக்கப்பட்ட போதிலும் சுமார் 80 ஆயிரம் கிலோ கிராம் அகற்றப்பட்டு, வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார்.
கொத்தணி முறையின் கீழ் இவ்வேலைத் திட்டத்தில் இணைந்து செயற்பட்ட நாவிதன்வெளி பிரதேச சபையின் செயலாளர் மற்றும் ஊழியர்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கிய சாய்ந்தமருது பிரதேச செயலகம், பெரிய பள்ளிவாசல் என்பவற்றுக்கும் இவ்வேலைத் திட்டத்திற்கு அனுமதி, ஆலோசனை, வழிக்காட்டல்களை வழங்கிய கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமத், முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் ஆகியோருக்கும் எமது மாநகர சபை உத்தியோகத்தர்களுக்கும் பணிகளில் சிறப்பாக ஈடுபட்ட சுகாதாரத் தொழிலாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் அவர்களும் இதன்போது பிரசன்னமாகியிருந்தார்.
இவ்வேலைத் திட்டம் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு சாய்ந்தமருது பிரதேசம் முழுவதும் குப்பைகள் அகற்றப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டமை குறித்து பொது மக்கள் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கின்றனர்.