மஹிந்தவிற்கு அவரைச்சார்ந்த கூட்டத்திற்கும், மஹிந்தவையும் அவரது முன்னைய அரசையும் இன்னமும் அபிவிருத்தி அரசு என்று பீத்தித்திரிபவர்களுக்கும் பிரதமர் ரணிலிடம் சிறந்த முன்மாதிரி இருக்கின்றது இவர்கள் சிந்திக்கத்தவறியவர்கள் ஆகையால் நிச்சயமாக அவர்கள் இதை புரிந்துகொள்ள தவறிய வண்ணமே உள்ளனர். முஸ்லீம் விரோதச்செயல்களும் சிறுபான்மை மக்களுக்கான இனரீதியிலான தாக்குதல்களும் அடாவடித்தனங்களும், அநீதிகளும் அச்சுறுத்தல்களும் பேரினவாத குழுக்களாலும், சில மதச்சாயம் பூசிய காடையர்களாலும் கட்டவிழ்த்து விடப்பட்ட சந்தர்ப்பத்தில் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அரியாசனத்தில் குடும்ப பலத்தோடு அமர்ந்திருந்த மன்னர் மஹிந்த அத்தனையையும் பார்த்து ரசித்த வண்ணம் வாய் மூடியே இருந்தார் என்பது திண்ணமான உண்மை. (தோற்றுவித்தவர்களே அவர்கள் தானே) அன்று அவர் நினைத்திருந்தால் அனைத்தையும் தனது ஒற்றை வார்த்தை மூலம் தடுத்து நிறுத்தி, முளைவிட்ட இனவாதத்தை அடியோடு கிள்ளி எறிந்து பிரிவினை அற்ற இலங்கையை உருப்பெறச்செய்து ஆசியாவின் உண்மையான அதிசயமாகவே உருவாக்கி இருக்கலாம். ஆனால் அவர் வாயடைத்து வேடிக்கை பார்த்த வண்ணமே வெளிநாட்டு பயணங்களில் படு பிசியாக இருந்தார்.
அவர் பயந்தார் முஸ்லிம்களுக்கு சாதகமான கருத்துக்களை நான் வெளியிடும் பட்சத்தில் எதிர் வருகின்ற தேர்தலில் பெரும்பான்மை மக்கள் என்னை நிராகரித்து விடுவார்கள் என்று. அனால் நடந்தது வேறு கதை. எந்த சமூகம் அழிந்தாலும் பரவாயில்லை என்று அவர் வாய் மூடி இருந்தாரோ அந்த ஒட்டு மொத்த முஸ்லீம் தமிழ் மக்களின் வாக்குகள் பொதுவேட்பாளருக்கு கட்டியாய் விழ நீர்வழிந்த கண்ணோடு அந்தப்புரம் விட்டகழ்ந்தார் அன்றைய ராஜா. சொந்த வீடு சென்றதும் சிறுபான்மை மக்களே நான் தோற்க காரணம் என்று புலம்பி அழுதார் அது ஒரு புறம் இருக்கட்டும் பாவம் அவர். சிறுபான்மைச்சமூகங்களின் வியர்வையால் துளிர்விட்டு வளந்துள்ள இந்நல்லாட்சியின் பிரதமர் ரணில் தலைமையில் அண்மையில் நடைபெற்ற பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் முஸ்லீம் பெண்கள் அணியும் புர்கா/நிகாப் ஆடைக்கு தடை விதிக்கும் படியான யோசனை ஒன்று முன் வைக்கப்பட்டதோடு அது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான ஒன்று என்றும் கூறப்பட்டது.
குறித்த இந்த யோசனைக்கும், கருத்திற்கும் தனது எதிர்ப்பை தெரிவித்த கெளரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அவ்வாறு தடை விதிப்பது அரசாங்கத்தை கடுமையாகப் பாதிக்கும் என்றும் முஸ்லிம் நாடுகளின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டி வரும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளதோடு, இலங்கை முஸ்லிம் சமூகம் கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திற்கே தமது ஆதரவை வெளிப்படுத்தினர் என்றும் அதுமட்டுமல்லாமல் முஸ்லிம்கள் காலகாலமாக ஐக்கிய தேசிய கட்சி அரசின் மீது நம்பிக்கையும் அபிமானமும் கொண்டுள்ளனர் என்றும் கூறி குறித்த பிரேரணைக்கு தனது முழு எதிப்பையும் வெளிப்படுத்தி உள்ளார். இதே பிரதமருக்கு தெரியாதா எதிர்காலங்களில் இவாறான நடவடிக்கைகள் மூலம் சிறுபான்மை அபிமானி எனும் பேரில் தன்னை பெரும்பான்மை மக்கள் நிராகரித்து விடுவார்கள் என்று சிந்திப்பதற்கும் வாய் மூடி மெளனம் காப்பதற்கும் ??? கடந்த சில காலங்களாக இந்நல்லாட்சி அரசின் செயற்படுகள் பாராட்டத்தக்கவையாக அமைந்துள்ளமை மகிழ்ச்சி அளிக்கின்றது.
அதிலும் குறிப்பாக அண்மையில் போலீஸ் அதிரடிப்படை பிரிவிற்கான தளபதியாக முஸ்லீம் ஒருவரை நியமித்தமை மற்றும் மேல் கூறப்பட்ட நிகாப் ஆடை விவகாரம் போன்றவற்றை குறிப்பிடலாம். இனிவரும் காலங்களிலும் தமிழ் முஸ்லீம் மக்களின் அபிலாசைகளை நிறைவு செய்யும் போக்கிலான நல்லாச்சிப்பாதையையே நாம் அனைவரும் எதிர் பார்க்கிறோம். நாட்டில் எந்த வித பிரிவினைகளும் அற்ற ஒரு நிலை உருவாக வேண்டும். சிங்கள தமிழ் முஸ்லீம், மற்றும் ஏனைய அனைவரும் ஒரே இரத்தத்தை உடைய இலங்கையர்கள் என்ற அடிப்படையில் சமாதானமானதும் இன நல்லுறவு கொண்டதுமான சகவாழ்வையே நாம் விரும்புகிறோம். குறித்த இந்த அரசு சில விடயங்களில் தாமதம் காட்டுவதாக ஒரு குற்றச்சாட்டு பொதுவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆகவே குறித்த இந்த விடயங்களையும் கருத்திற்கொண்டு துரித கதியில் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையிலான செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கி செயற்படுவது அவசியம்.
யாசீர் எம். அனீபா-
