யாழ் இளைஞனின் புதிய கண்டுபிடிப்பு...!

பாறுக் ஷிஹான்-
நீரை சிக்கனமாக பயன்படுத்தி வெற்றிகரமாக எவ்வாறு விவசாயம் செய்யலாம் என்பதே இன்று இலங்கையில் விவசாயிகள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாக காணப்படுகின்றது. அதற்கு சிறந்ததொரு தீர்வாக அமைந்ததே “அசையும் தூவல் நீர்ப்பாசனத்” தொகுதியாகும்.

நுண் நீர்ப்பாசன முறைகளில் மிகவும் உன்னதமான “அசையக்கூடிய சமச்சீரான பக்க குழாய்களைக் கொண்ட தூவல் நீர்ப்பாசனத் தொகுதி” ஒன்றினை இலங்கை விவசாயத் திணைக்களத்தின் கிளிநொச்சி விதை மற்றும் நடுகைப் பொருள் அபிவிருத்தி நிலையத்தினைச் (Seed & Planting Material Development Center (SPMDC) சேர்ந்த இராஜேஸ்வரன் சஞ்சீபன் சிறப்பாக வடிவமைத்துள்ளார். இந்த உபகரணத்தை Uthayan Micro Irrigation & Agro Services நிறுவனத்தைச் சேர்ந்த கே. உதயகுமார் உருவாக்கியுள்ளார்.

அசையக் கூடிய சமச்சீரான பக்க குழாய்களைக் கொண்ட தூவல் நீர்ப் பாசனத் தொகுதி வடிவமைப்பு என்பது, நுண் நீர்ப்பாசன முறைகளில் மிகவும் உன்னதமான தொழில்நுட்பமாகும். மேலும் தேசிய ரீதியிலான பயிர் மாற்றீட்டுத் திட்டங்களில் இது ஓர் புரட்சியை ஏற்படுத்தும் எனலாம். இது ஓர் எண்ணக்கரு மட்டுமே. இந்த உபகரணத்தினை பயிர் செய்யும் அளவு, இடம் என்பவற்றுக்கு ஏற்ப குறுகியதாகவோ, பெரிதாகவோ மாற்றியமைத்தும் பயன்படுத்தலாம்.

இதன் மூலம் வயல் நிலங்களில் நீர் பற்றாக்குறையாக உள்ள கால கட்டங்களில் குறைந்தளவு நீரினை அதிகபட்ச வினைத்திறனுடன் பயன்படுத்த முடியும். குறித்த தூவல் நீர்ப் பாசனத் தொகுதியானது விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்கள் முன்னிலையில் கடந்த 22.06.2016 அன்று பரந்தன் அரச விதை உற்பத்திப் பண்ணையில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. 

பரிசோதிக்கப்பட்டமை மட்டுமல்லாமல் குறித்த அசையும் தூவல் நீர்ப்பாசனம் மூலம் இதுவரை நீர் தட்டுப்பாடு காரணமாக பயிர்ச்செய்கை செய்யப்படாது இருந்த ஏழு ஏக்கர் வயல் நிலத்தில் வெற்றிகரமாக கச்சானும் (நிலக்கடலை), கௌப்பீயும் பயிரிடப்பட்டுள்ளது.

அவை தற்போது செழிப்பாக வளர்ந்துள்ளமையை காணக் கூடியதாக உள்ளது. குறித்த வெற்றிகரமான மாதிரி பயிர்ச் செய்கையை ஏராளமான விவசாயிகளும், விவசாயத்துறை நிபுணர்கள் மற்றும் ஆர்வலர்களும் பார்வையிட்டுச் சென்றுள்ளனர். குறித்த அசையும் நீர்ப் பாசனத் தொகுதி மூலம் நுண் நீர்ப்பாசனம், பசளைப் பாசனம் (பசளை கரைக்கப்பட்ட நீரை விசிறல்), விவசாய இரசாயனங்களை (விவசாயப் பூச்சி கொல்லி) விசிறலாம். இதன் மூலம் நிலக்கடலை, உழுந்து, பயறு, கௌப்பீ, வெங்காயம், சோளம், மிளகாய், மரக்கறி வகைகளை பயிர் செய்ய முடியும். சாதாரண தூவல் நீர்ப்பாசனத் தொகுதி அமைப்பதற்கான ஆரம்பகால முதலீட்டினை விட இதற்கான முதலீடு மிகக் குறைவாக உள்ளது.

பக்க குழாய்களின் உயரத்தை பயிரின் உயரத்திற்கேற்ப மாற்றி குறைந்தளவு தொழிலாளர்களுடன் மிகக் குறைந்த நேரத்தில் முழுவயல்களுக்கும் சீரான முறையில் நீரை விசிறியடிக்க முடியும். குறித்த தொகுதியினை மனித வலுவினால் அல்லது இரு சில்லு, நான்கு சில்லு உழவு இயந்திரம் மூலம் இழுக்க முடியும். இப்படியான சிறப்பு செயற்திட்டங்களின் ஊடாக தண்ணீர் மேலாண்மையை நாம் சரிவர மேற்கொண்டு வந்தால் விவசாயத்திலும் நிச்சயம் சாதிக்க முடியும்.

இவ்வாறு நவீன தொழிநுட்பங்களை பயன்படுத்தி விவசாயத்தை வினைதிறனுடன் வெற்றிகரமாக மேற்கொள்வதன் மூலம் இளைஞர்களையும் விவசாயத் துறைக்குள் ஈர்க்க முடியும். குறித்த நீர்ப்பாசனத் தொகுதி தொடர்பிலான மேலதிக விபரங்களையும், விளக்கங்களையும் இலங்கை விவசாயத் திணைக்களத்தின் கிளிநொச்சி விதை மற்றும் நடுகைப் பொருள் அபிவிருத்தி நிலையத்தை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். இதேவேளை, குறித்த செயற்திட்டத்தினை பரந்தன் அரச விதை உற்பத்திப் பண்ணை நிலையத்துக்குச் சென்று நேரில் பார்வையிடலாம்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -