எம்.எஸ்.சம்சுல் ஹுதா-
எமது நாட்டில் 30வருட காலமாக நிலவிய யுத்த காலத்தில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாது பயங்கரமான சூழ்நிலையில் கூட எமது பிரதேசங்களுக்கு வந்து ஏழை விவசாயிகளுக்கு சிறந்த பணியைச் செய்ய வேண்டும் என்ற தூய எண்ணத்தில் தியாகங்கள் செய்து கடமையாற்றிய கடமையாற்றிக் கொண்டிருக்கின்ற நீர்ப்பாசன பொறியியலாளர்கள், தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் ஊழியர்களது பணி பாராட்டத்தக்கதும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரன் தம்பிலுவில் நீர்ப்பாசனப் பொறியியலாளர் பணிமனையின் கீழ் உள்ள கஞ்சிகுடிச்சாறு குள அங்குரர்ப்பண நிகழ்வில் தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,
இன மத பேதமின்றி பணியாற்றும் அம்பாறை பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளரது பணி பாராட்டத்தக்கதாகும். இக்குளத்தின் மூலம் சேமிக்கப்படுகின்ற நீரை சரியாக பயன்படுத்தப்பட வேண்டும். இக்குளத்தில் கொள்ளளவு அதிகரிக்கின்ற போது விவசாயம் மட்டுமல்லாமல் மீன்பிடி ஏனைய பயிர்ச் செய்கைகளும் விருத்தியடையக் கூடிய சந்தர்ப்பம் உள்ளன. இச்சந்தர்ப்பத்தில் நான் இங்கு உள்ள அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் ஒரு கோரிக்கை ஒன்றை விடுக்கின்றேன், இங்கு புனரமைப்பு செய்கின்ற குளத்தில் வலது கரை என்ற வாய்க்கல் ஏற்படுத்த வேண்டும். இப்பிரதேசத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அதிக உயிர்களை பறிகொடுத்த இடம்பெயர்ந்து மீள குடியமர்த்தப்பட்டுள்ள மக்களை நிரந்தரமாக குடியமர்த்த வேண்டுமென்றால் அவர்களுக்கான குடிநீர் வசதி, ஏனைய வசதிகள் இங்கு ஏற்படுத்தப்பட வேண்டும். அந்த வகையில் தங்க வேலாயுதபுரம், கஞ்சிகுடிச்சாறு பிரதேசங்களுக்கு முக்கியமான ஒரு குளமாக இந்தக் குளம் திகழ்கின்றது. வலது கரை வாய்காலை ஏற்படுத்துவதன் மூலம் இவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தலாம் என நினைக்கின்றேன். இதற்கான ஆக்கபூர்வமான செயற்பாடுகளை நாங்கள் செய்து தருவோம். இவ்வாறு செய்வதன் மூலம் தான் மக்கள் நிலைத்திருந்து அவர்களது செயற்பாடுகளை சரியான முறையில் நடைமுறைப்படுத்த முடியும்.
மேலும், இப்பகுதி மக்களது கல்வியினை வருகின்ற வழியிலே நாம் அவதானித்திருக்க முடியும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இன்னும் வடு நீங்கா பாடசாலையொன்று இங்கு காணப்படுகின்றது. இப்பகுதி மாணவர்களது கல்வியினைப் பறித்து சிதைவடைத்தார்கள் இன்று அப்பாசாலை பாழடைந்து காணப்படுகின்றது. அகவே இப்பாடசாலை புனருத்தானம் செய்யப்பட்டு மாணவர்களின் கல்வியில் அக்கறை கொண்டு செயற்பட வேண்டும்.
இப்பகுதி மக்களின் அடிப்படை வாழ்வாதாரமாக விவசாயம் காணப்படுகின்றது. இதனை இங்குள் அரச அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கட்டியெழுப்ப வேண்டும். அநடத வகையில் இக்குளத்தை புனரமைப்பதற்கு நாம் அனைவரும் பூரணமாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு வழங்குமிடத்த பயனுள்ள ஒரு குளமாக நாம் இதனைப் பயன்படுத்த முடியும்.
உலக விவசாய ஸ்தாபனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட விவசாய அபிவிருத்தியின் மூலம் வறுமையை ஒழித்தல் எனும் திட்டத்தின் கீழ் 63 மில்லியன் ரூபா செலவில் கஞ்சிகுடிச்சாறு குள புனரமைப்பு அங்குரர்ப்பண வேலை ஆரம்ப நிகழ்விலே இவ்வாறு தெரிவித்தார்.
கிழக்கு மாகாண நீர்ப்பாசனப் பணிப்hளர் எந்திரி.எஸ்.திலகராஜா அவர்களின் தலமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண நீர்ப்பாசன அமைச்சர் கி.துரைராஜசிங்கம், மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், மாகாண சபை உறுப்பினர்கள், நீர்ப்பாசன அதிகாரிகள் மற்றும் விவசாயப் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.