எம்.ரீ.ஹைதர் அலி-
உன்னிச்சை இருனுருவில் பிரதேசத்திற்கு விஜயமொன்றினை மேற்கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அங்கு யுத்தத்தின் பின் மீள்குடியேறியுள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடினார். இருனுருவில் பிரதேச மக்களுக்கும் கிழக்கு மாகாணச பை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு 20.08.2016ஆந்திகதி (சனிக்கிழமை) இருனுருவில் முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்றது.
கடந்த கால யுத்தத்தின்போது தமது சொந்த இடங்களிலிருந்து வெளியேறிய இருனுருவில் பிரதேச முஸ்லிம் மக்கள் தமது மீள் குடியேற்றத்தின்போது பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக தமது வீடு, மலசல கூட வசதிகள், வாழ்வாதார வசதிகள், வீதி அபிவிருத்தி மற்றும் குடிநீர் பிரச்சினை என்பன தொடர்பாகவும் சொந்த இடங்களுக்கு தாங்கள் மீண்டும் மீள்குடியேறும்போது அரசின் மீள்குடியேற்ற திட்டங்கள் அனைத்திலும் தொடர்ச்சியாக தாங்கள் புறக்கணிக்கப்பட்டு நிர்க்கதியாக விடப்பட்டுமை தொடர்பாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருக்கு இருனுருவில் பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் சுட்டிக்காட்டினர்.
இது தொடர்பாக மக்களுக்கு கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தங்களின் வாழ்வாதார நடவடிக்கைகளை முன்னேற்றும் விதமாக கால்நடை வளர்ப்புக்கான அரசினுடைய மானிய அடிப்படையிலான திட்டங்களை பெற்றுதருவதற்கும், மேலும் அரசாங்கத்தினுடாக வழங்கப்படுகின்ற உதவிகளைப் பெற்றுத்தருவதற்கும் தாம் முயற்சிப்பதாக உறுதியளித்தார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில் அரசினால் வழங்கப்படும் அனைத்து வீட்டுத்திட்டங்களிலும் முஸ்லிம்கள் புறக்கனிக்கப்பட்டுள்ளமை கிழக்கு மாகாணத்தில் பல்வேறு முஸ்லிம் பகுதிகளிலும் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளது. இது மிகவும் வேதனைக்குரியதாகும். நடைபெற்றுக் கொண்டிருக்கும் நல்லாட்சி அரசாங்கத்தில் இதற்கான நியாயமானதொரு தீர்வினைப் பெற்றுக்கொடுக்க தான் முழுமையாக முயற்சிப்பதாகவும், இருனுருவில் கிராம மக்களினுடைய குடி நீர் மற்றும் வீதி சம்பந்தப்பட்ட விடயங்களை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்து இருனுருவில் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு உதவி செய்வதாகவும் உறுதியளித்தார்.
மேலும் தற்போது தூர இடங்களிலிருந்து வந்து செல்லும் இருனுருவில் மக்களுக்கு தாம் போக்குவரத்து செய்வதற்குரிய பேருந்து வசதி உரிய நேரத்திற்கு கிடைக்காமை சம்பந்தமான மக்களின் முறைப்பாட்டிற்கமைய இருனுருவில் கிராமத்திற்கு விசேடமாக பேருந்து சேவை ஒன்றை ஏற்படுத்தி தருவதற்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.
இருனுருவில் பள்ளிவாயல் மற்றும் சுற்றுப்பிரதேசம், காணிகள், பயிர்ச்செய்கை நிலங்கள், கால்நடை வளர்ப்பு பகுதிகள், வீதி, மக்களின் வீடுகள் மற்றும் மக்கள் தமது குடிநீர், பயிர்செயகைக்கான நீர் என்பனவற்றை பெற்றுக்கொள்ளும் விதம் என்பனவற்றை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் சிங்கள மக்கள் வசித்து வந்த சிப்பிமடு பிரதேசத்தையும், காட்டு யானைகளால் சேதமாக்கப்பட்ட பகுதிகளையும் பார்வையிட்டார்.
இவ்வியைத்தின்போது காத்தான்குடி இளைஞர் காங்கிரஸின் அமைப்பாளரான இல்மி அஹ்மத் லெப்பை அவர்களும் கலந்து கொண்டார்.