பைஷல் இஸ்மாயில் -
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரின் வேண்டுகோளுக்கிணங்க அம்பாறை மாவட்டத்தில் உள்ள மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் 11 திணைக்களங்கள் இணைந்து பொது மக்களின் குறைகளை அதே இடத்தில் நிவர்த்தி செய்யும் மாபெரும் நடமாடும் சேவை தொடர்பான முக்கிய கலந்துரையாடல் இன்று காலை (24) கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடல் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தலைமையில் இடம்பெற்றது. இதில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கே.கருணாகரன், உதவிச் செயலாளர் ஜே.உசைனுடீன், சுகாதார அமைச்சரின் பிரத்தியோகச் செயலாளர் யு.எம்.வாஹிட், கிழக்கு மாகாண ஆயுர்வேத தினைக்களத்தின் ஆணையார் ஆர்.சிறிதர், கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் என். மணிவன்னண் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.
இங்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,
சிறிலங்கா முஸ்லிம் காங்கிஸ் கட்சியின் தலைமையினால் முன்னெடுக்கப்படுகின்ற மாபெரும் நடமாடும் சேவை எதிர்வரும் மாதம் 1 ஆம் திகதி அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது. இந்த நடமாடும் சேவையில் நீர் பெற்றுக்கொள்ள வசதி இல்லாதவர்களுக்கு இலவசமாக நீர் வினியோகம், 500 பேருக்கு மூக்குக் கண்ணாடி, விஸேட தேவையுடையவர்களுக்காக வேண்டி 100 பேருக்கு நாற்சக்கர வண்டி போன்றவை வழங்கி வைக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.
மேலும் இந்த நடமாடும் சேவையில் சுகாதார, சுதேச வைத்தியசேவை, காணி, கல்வி, விவசாயம், வீதி அபிவிருத்தி தொர்பான பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகள் குறித்த தினத்தில் வழங்கி வைக்கப்படவுள்ளதாகவும் கூறினார். இச்சேவை காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5.00 மணிவரை இடம்பெறவுள்ளதாகவும் கூறினார்.