அப்துல்சலாம் யாசீம், எப்.முபாறக்-
திருகோணமலை-அலஸ்தோட்டம் பகுதியில் நேற்றிரவு (06) துவிச்சக்கர வண்டியுடன் -மோட்டார் சைக்கிள் மோதியதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை-பாலையூற்றைச் சேர்ந்த எம்.சித்ரவேல் மெனி (62 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது-நேற்றிரவு 8மணியளவில் நிலாவெளி பகுதிக்கு வேகமாக சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் துவிச்சக்கர வண்டியுடன் மோதியதினாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பேரும் காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் நிலாவெளி-02ம் வட்டாரத்தைச்சேர்ந்த எஸ்.திவியராஜ் (23வயது) மற்றும் கோபாலபுரம் பகுதியைச்சேர்ந்த எஸ்.கஜன் (21வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.