எம்.எஸ்.எம்.சாஹிர்-
பொதுபல சேனா மறுபடியும் அவர்களது இனத் துவேச செயற்பாட்டை ஆரம்பித்திருக்கிறது. இது பெரும் விபரீதத்தை எற்படுத்தும். எனவே அவர்களுடைய இந்த இனத்துவேச செயற்பாடுகளை முடக்குவதற்கு அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முஸ்லிம் சமய கலாசார அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
இன்று நாடெங்கிலும் பரவலாக முஸ்லிம் பள்ளிவாசல்கள், பாடசாலைகள், மத்ரஸாக்கள் என்பவற்றுக்கு பலவகையிலும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. பள்ளிவாசல்களுக்கு எதிராக ஏற்படும் எதிர்ப்பு நடவடிக்கை சம்பந்தமாக ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் அறிவித்திருக்கின்றோம். அதற்கு சுமூகமான தீர்வைப் பெற்றுத் தருவதாக அவர்கள் கூறியிருக்கின்றார்கள் என அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அறிவித்திருந்தும் இன்னும் ஒன்றும் நடைபெறவில்லை. நான் முன்பு கூறியது போல் வேதாளம் முருங்கை மரத்தின் மேல் ஏறி இன்னும் அதற்கு மேலும் ஏறிச் செல்கின்றது. இதனை சுமூகமான நிலைக்குக் கொண்டு வராவிட்டால், நிலைமை கட்டுக் கடங்காமல் போகும் என்ற அச்சம் கிராமப் புறங்களில் வாழுகின்ற முஸ்லிம்கள் மத்தியில் எழ ஆரம்பித்துள்ளது.
நூற்றாண்டுகளுக்கு மேலாக அமைந்திருக்கின்ற மஹியங்கனைத் தொகுதி கந்தரகமுன பள்ளிவாசலை அண்மையில் முஸ்லிம் பரோபகாரி நவீன முறையில் கட்டியெழுப்பியிருக்கின்றார். அது மட்டுமல்ல, ஆரம்பத்தில் இந்த கிராமத்தின் முன்னேற்றத்துக்காக வேண்டி நானும் சகோதர அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாகாரும் பாடசாலை, விடுதி, ஆயுள்வேதவைத்தியசாலை, தபாலகம் என்று பல வழிகளிலும் உதவி செய்திருக்கின்றோம். அதை இன்றும் அந்த மக்கள் நினைவு கூருகிறார்கள்.
இது பாதுகாக்கப்பட வேண்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடம். இதனை பாதுகாப்பதற்கும், அங்குள்ள முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ்வதற்கும், பள்ளிவாசலுக்குப் பாதிப்பு ஏற்படாத வண்ணம் இருப்பதற்கும் அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.
மஹிந்த ராஜபக்ஷ பள்ளிவாசல்களை உடைக்கின்றார், முஸ்லிம் பெண்களுடைய ஹிஜாபுகளை களைவார் என்ற அச்சத்தை வேண்டுமென்றே அரசியல் ரீதியாகப் பயன்படுத்தி, முஸ்லிம்களைத் திசை திருப்பி வாக்குளைப் பெற்றார்கள். ஆனால் அதற்கு அமைய இந்த அரசாங்கம் ஒன்றும் செய்யவில்லை. ஆகவே நாங்கள் சமூதாயத்தின் சார்பில் வேண்டிக் கொள்வது என்னவென்றால், குறிப்பாக கிராம மட்டத்தில் வாழுகின்ற முஸ்லிம் மக்கள் மத்தியில் இருக்கின்ற இந்த அச்சத்தை நீக்க வேண்டும்.
அச்சத்தை நீக்குவதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் விசயம் முற்றிப் போய் எங்கு போய் முடியுமோ என்று தெரியாத ஒரு நிலைக்கு வரும். அந்த நிலையை உருவாகாமல் தடுப்பது இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் பொறுப்பு. ஏனென்றால் இந்த நல்லாட்சி தலைவர்கள். நாட்டில் முன்பு நடந்த இனத் துவேசங்கள் போல் இனி நடக்க விடமாட்டோம். நாங்கள் வந்த உடனேயே அதற்கு முற்றுப்புள்ளி வைப்போம். நிறுத்துவோம். என்றெல்லாம் முஸ்லிம்களிடம் சொன்னார்கள். அதனைச் செய்யுமாறுதான் இன்று வற்புறுத்திக் கேட்டுக் கொள்கின்றோம். எனவே எல்லா விடயங்களிலும் அவர்கள் நல்லாட்சி பற்றி வாய்ச்சவாலாக மட்டும் சொல்லித் திரிகின்றார்களே தவிர, இது குறித்து ஒரு தீர்க்கமான முடிவு எடுப்பதற்கு முயற்சிக்கின்றார்கள் இல்லை என்பது இன்று தெட்டத் தெளிவாக புரிந்து கொள்ள முடிகின்றது.
அடங்கி இருந்த பொது பல சேன மறுபடியும் அவர்களது இனத் துவேச செயற்பாட்டை ஆரம்பித்திருக்கின்றார்கள். இது பெரும் விபரீதத்தை ஏற்படுத்தும். எனவே, அவர்களுடைய அந்த இனத்துவேச செயற்பாடுகளை முடக்குவதற்கு அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.