புனித ரமழான் மாதத்திலும் முஸ்லிம்கள் அவதி : அரசு பாராமுகம் - முன்னாள் அமைச்சர் அஸ்வர்

எம்.எஸ்.எம்.சாஹிர்-
வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறத் துவங்கியுள்ளது. புனித ரமழான் மாதத்தில் பல இடங்களில் முஸ்லிம்களுக்கு இடைஞ்சல்கள் ஏற்பட்ட வண்ணமே இருப்பதை அவதானிக்க முடிகின்றது. பல பள்ளிவாசல்களில் தொழ முடியாத நிலையும் பள்ளிவாசல்களின் கட்டடங்களை முடிப்பதற்குத் தடையும் பலவாறு நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. 

இது குறித்து இந்த நாட்டின் ஜனாதிபதியும் பிரதம அமைச்சரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முஸ்லிம் கலாசார அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் கூறினார்.

நேற்று டாக்டர் என்.எம் பெரேரா மத்திய நிலையத்தில் நடை பெற்ற கூட்டு எதிர்க்கட்சி முன்னணிகளின் ஊடக சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் இது பற்றி மேலும் கூறுகையில்,

இந்தப் புனிதமான மாதத்தில் முஸ்லிம்கள் பல இடங்களில் அச்சம் கொண்டு வாழக் கூடிய சூழல் இன்று ஏற்பட்டுள்ளது. இது மிகவும் கண்டிக்கத் தக்கது. முஸ்லிம் இன விரோத சக்திகள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. பள்ளிவாசல்கள் கட்டுவதற்கும் கட்டிய பள்ளிவாசல்களை முடிப்பதற்கும் முஸ்லிம் பாடசாலைகளை எழுப்புவதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து வரக்கூடிய இனத்துவேசம் இப்பொழுது தலைக்கு மேல் செல்லும் போல் தெரிகிறது. 

இந்த சூழ்நிலையில் இதற்கு ஒரு முடிவு காண வேண்டும். சென்ற அரசாங்கம் விட்ட தவறை நாங்கள் செய்ய மாட்டோம் என்று ஜனாதிபதியும் பிரதமரும் ஏனையவர்களும் கூறியதோடு, பலர் வாய் கிழியக் கத்தினார்கள். இவர்கள் எல்லோரும் ஒளிந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் முஸ்லிம் மக்கள் கஷ்டத்துக்கு உள்ளாகி இருக்கின்றார்கள். 

இவ்விடயத்தில் ஜனாதிபதிக்கும் பிரதம அமைச்சருக்கும் இதில் பெரும் பங்கு உண்டு. இன ஒற்றுமை பற்றிப் பேசுவதால் மட்டும் அதில் ஒற்றுமை ஏற்படாது. ஒரு பக்கம் இன ஒற்றுமையைப் பற்றி பேசும் நேரம் அடுத்த பக்கத்திலிருந்து இன ஒற்றுமையின் கற்களை அகற்றும் போது அங்கே விடிவு ஏற்படாது. இடிவுதான் ஏற்படும். கட்டிடம் இடிந்து விழும். 

ஆகவே, இதனை அவர்கள் சீக்கிரமாக ஒரு முடிவுக்குக் கொண்டு வரவேண்டும். அவர்களால்தான் முடியும். ஏனென்றால் இந்த நாட்டு முஸ்லிம்கள் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும்தான் வாக்களித்தார்கள். எனவே, அவர்கள் கூடி முஸ்லிம்கள் மத்தியிலே ஏற்பட்டிருக்கின்ற இந்த அச்சத்தை நீக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிவாசல்களைப் பாதுகாக்க வேண்டும். 

சில்மியா புரம் போன்ற பகுதிகளில் பாடசாலை கட்டுவதற்கு முதலமைச்சர் கூட முன் வந்த போதும் எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடிய நிலை தோன்றியிருக்கிறது. ஆகவே பிள்ளைகளின் பாடசாலை மற்றும் கல்வி நிலையங்களைக் கூட எதிர்க்கக் கூடிய நிலை இந்த அரசாங்கத்திலே இப்போது நடப்பதை நாங்கள் பார்க்கிறோம். எனவே இதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக நடவடிக்கை எடுக்கு வேண்டும்.

சென்ற தேர்தலின் போது இந்த அரசாங்கத்தில் உள்ளவர்கள் முஸ்லிம்களை நன்றாக ஏமாற்றினார்கள். மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பதவிக்கு வந்தால் முஸ்லிம்களுடைய பர்தாக்கள், முக்காடுகளை எல்லாம் களைவார். பள்ளிவாசல்களை எல்லாம் உடைப்பார் என்று பிரசாரம் செய்து முஸ்லிம்கள் மத்தியில் ஒரு பீதியை ஏற்படுத்தி அவர்கள் வாக்குகளைக் கொள்ளையடித்தார்கள். 

இப்படிக் கொள்ளையடித்து வாய் கிழியக் கத்தியவர்கள் இப்பொழுது எங்கே? அவர்கள் மௌனியாக இருக்கின்றார்கள். மீண்டும் இதே நிலைதான் ஏற்பட்டுள்ளது. இந்த அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிப்படி அவர்கள் நடக்க வேண்டியது கடமை. அதை முஸ்லிம்கள் எதிர் பார்க்கிறார்கள். முஸ்லிம்கள் ஏமாற்றுப் பேர்வழிகள் என்று அவர்கள் நினைக்கக் கூடாது. 

புனித நோன்பு காலங்களில் இரவு வேளையில் பெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று தம் தொழுகைகளை நிறைவேற்றினார்கள். இப்போது அவர்களுக்குக் கூட பள்ளிக்குப் போவதற்கு அச்சமாக இருப்பதாக சில இடங்களிலிருந்து எமக்கு தகவல்கள் கிட்டியுள்ளது. 

ஆகவே உடனடியாக இதற்கு முற்றுப் புள்ளி வைப்பதற்கு ஜனாதிபதியும் பிரதம அமைச்சரும் முன்வந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூகத்தின் சார்பாக நான் கேட்டுக் கொள்கின்றேன். என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -