பொலிஸ் நிதிமோசடிப் பிரிவுக்கு எதிராக நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகள் குறித்து பாதகமான தீர்ப்பு வர முன்னர் நிதி மோசடி பிரிவைக் கலைக்க அரசாங்க உயர்மட்டம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இலங்கைப் பொலிஸ் திணைக்களம் தொடர்பான அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகளின் பிரகாரம் பாராளுமன்ற அனுமதியின்றி புதியதொரு பொலிஸ்பிரிவை அமைக்க முடியாது.
எனினும் கடந்த வருடம் நடைபெற்ற அதிகார மாற்றத்தின் பின்னர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொலிஸ் மா அதிபரின் இணக்கப்பாட்டுடன் பொலிஸ் நிதிமோசடிப் பிரிவு என்றொரு துணைக்கட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற பாரிய நிதிமோசடிகள் தொடர்பான சம்பவங்களை விசாரணைக்குட்படுத்தி, குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கித் தருவது இந்த துணைக்கட்டமைப்பின் பிரதான பணியாகும்.
எனினும் பாராளுமன்ற அனுமதியின்றி உருவாக்கப்பட்ட இந்தத் துணைக்கட்டமைப்பு உருவாக்கத்தை எதிர்த்து ஆறு முறைப்பாடுகள் பல்வேறு நீதிமன்றங்களின் முன்னால் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் சில வாரங்களுக்குள் பொலிஸ் நிதிமோசடிப் பிரிவிற்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்பொன்று வரலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு முன்னராக குறித்த பொலிஸ்பிரிவை கலைத்துவிட அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தெரிய வந்துள்ளது.