ஏ.எஸ்.எம்.ஜாவித்-
கடந்த சில தினங்களாக ஏற்பட்டிருந்த சீரற்ற காலநிலை காரணமாக வெல்லம்பிட்டி உள்ளிட்ட நாட்டின பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கின. தற்போது நீர் மட்டம் குறைவடைந்து வருகின்றது. இவ்வாறு நீரில் முழ்கிய பிரதேசங்களின் இவ்வாறு காட்சியளிக்கின்றது.
நிலைமைகளைக் கண்டறியும் பொருட்டு வெல்லம்பிட்டியின் வென்னவத்தை, ஹித்தம்பகுவ, பிறண்டியாவத்தை, சேதவத்தை போன்ற இடங்களுக்கு கடற்படையினரின் உதவியுடன் எமது ஊடகவியலாளர் ஏ.எஸ்.எம்.ஜாவித் நேரடியாகச் சென்று செய்தி சேகரித்தபோது எடுக்கப்பட்ட படங்கள்
இதன்போது நீர் மட்டம் கணிசமானளவு குறைந்து செல்வதனையும், சில வீடுகளின் உரிமையாளர்கள் வீடுகளின் மேல் மாடிப் பகுதிகளிலும், கூரைகளிலும் இருப்பதை அவதானிக்க முடிந்ததுடன் அவர்களிடம் ஏன் இவ்விடத்தை விட்டுச் செல்ல வில்லை என வினவியபோது தமது உடமைகளுக்கு பாதுகாப்பு இல்லை அதனால்தான் தாங்கள் இங்கு தங்கியிருப்பதாக கூறினர்.
இதேவேளை அவ்வாறு தங்கியிருப்பவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், குடி நீர்ப்போத்தல்கள், மற்றும் சிறுவர்களுக்குத் தேவையான பொருட்களையும் படையினருடன் இணைந்து தொண்டு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. சகல வீடுகளும் முற்றாகவே நீரில் மூழ்யிருப்பதுடன் உடமைகளும் மீண்டும் பாவிக்க முடியாதளவு பழுதடைந்து வருகின்றன.
அத்துடன் அப்பகுதியில் மனிதர்களைப் போல் ஒருசில நாய்கள், பூனைகள் வீட்டுக் கூரைகளிலும், மரங்களிலும் தஞ்சமடைந்துள்ளதுடன் அவை பசி காரணமாக உதவிகளை வழங்கச் செல்பவர்களைக் கண்டவுடன் அலறிக் கொண்டு உணவை எதிர்பார்ப்பதை எமக்கு கவலையைத் தந்நது. எனினும் தொண்டர்கள் முழுமையாக உதவா விட்டாலும் பிஸ்கட் போன்ற பொருட்களை அவற்றிற்கும் கொடுத்து வந்ததை அவதானிக்க முடிந்தது.
ஏனைய எந்தவித மிருகங்களோ அல்லது கோழி மற்றும் வீட்டுப் பிராணிகளோ எனது கண்களுக்கு தென்படவில்லை அந்தளவிற்கு வெள்ள நீர் அவற்றை காவு கொண்டிருப்பதையும், அப்பகுதி முழுமையாக மின்சாரமற்றுள்ளதுடன், தேங்கியிருக்கும் நீரில் குப்பைகளும் கழிவுப் பொருட்களும் கலந்து நீர் அசுத்தமடைந்து வருவதையும் காண முடிந்ததுடன் மக்களின் பாதுகாப்புக் கருதி பொலிஸார் பொதுமக்களை அப்பகுதிகளுக்கு செல்வதையும் தடை செய்துள்ளனர்.


















