க.கிஷாந்தன்-
கொத்மலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பூண்டுலோயா சீன் தோட்டத்தில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் காரணமாக 29 குடும்பங்களை சேர்ந்த 130 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தற்பொழுது தோட்டத்தில் உள்ள கலாசார மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நிவாரண உதவிகள் தோட்ட நிர்வாகம் மற்றும் பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது.
இத்தோட்டத்தில் 6, 7, 8ம் ஆகிய இலக்க லயத் தொகுதியில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதோடு குடியிருப்பு பின்பகுதியில் மண்மேடுகள் மற்றும் கற்பாறைகள் சரிந்து விழ கூடிய நிலை காணப்படுவதனால் 6ம் இலக்க லயத்தொகுதியில் 10 குடும்பங்களும், 7ம் இலக்க லயத்தொகுதியில் 7 குடும்பங்களும், 8ம் இலக்க லயத்தொகுதியில் 10 குடும்பங்களும், இரண்டு தற்காலிக கூடாரங்களில் வாழ்ந்த இரண்டு குடும்பங்கள் அடங்களாக 29 குடும்பங்களை சேர்ந்த 130 பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 35 சிறுவர்களும், 6 மாத குழந்தைகள் இரண்டு பேரும் அடங்குகின்றனர்.
இவர்களுக்கு நிவாரண உதவிகள் பலராலும் வழங்கப்பட்டு வருகின்ற போதிலும் தங்கி இருக்கும் இடத்தில் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் வாழ்ந்து வருவதோடு சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோர் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். மேலும் அதிகமான பெண்கள் தங்கியிருப்பதனால் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத அளவிற்கு பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக பாதிக்கப்பட்ட இவர்கள் அங்கலாகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களை நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் அவர்கள் 22.05.2016 அன்று நேரடியாக சென்று பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட மக்கள் உடனடியாக தங்களுக்கு வீடுகளை அமைத்து தருமாறு பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ்விடம் தெரிவித்துள்ளனர்.
இம்மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் வீடுகள் அமைப்பது தொடர்பாக அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அவர் அம்மக்களிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை 2015ம் ஆண்டு பெய்த கடும் மழையினால் இதே குடியிருப்பில் உள்ள மக்களை மண்சரிவு அபாயம் இருப்பதாக கூறி இயற்கை அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் அதிகாரிகளால் இவர்களை பாதுகாப்பான இடத்திற்கு இடம்பெயருமாறு அப்போது அறிவித்திருந்த போதிலும் ஒரு வருட காலமாக எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாத காரணத்தினாலேயே தங்களுடைய உயிர்களை கையில் பிடித்துக்கொண்டு இக்குடியிருப்பிலேயே வாழ்ந்து வருவதாக இம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
எங்களை தற்காலிகமாக இடம்பெயர செய்திருந்தாலும் அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வீடுகளை அமைத்து கொடுக்குமாறு பாதிக்கப்பட்ட மக்கள் சம்மந்தப்பட்ட மக்களிடம் கோரிகின்றனர்.