அரசியலமைப்புச் சட்ட மாற்றம் பாகம் -12 வை. எல் . எஸ். ஹமீட்

பிரித்தானிய பாராளுமன்றத்தின் தோற்றம் (தொடர்ச்சி )
------------------------------------------------/

பாகம் 11 இல், பிரித்தானிய பாராளுமன்றத்தின் ஆரம்பம் Anglo-Saxons களால் அறிமுகப்படுத்தப்பட்ட Witenagemot மற்றும் 1066 ம் ஆண்டு நோமாண்டியர்களால் உருவாக்கப் பட்ட The Curia Regis அல்லது Great Council என்றும் பாராளுமன்ற 'அதிகாரத்தின்' அடித்தளம் 'Magna Carta' என்ற ஒப்பந்தம் , என்றும் பார்த்தோம் .


பாராளுமன்றம் (Parliament) என்ற சொல்லின் அறிமுகம்
--------------------------------------------------------
Parliament என்ற சொல் முதல்தடவையாக 1236ம் ஆண்டே பாவிக்கப் பட்டது. இச்சொல் French சொல்லாகிய 'Parler' என்ற சொல்லில் இருந்து வந்தது. "பேசுவதும் கலந்தாலோசிப்பதும்" (speaking and discussion) என்பது இதன் பொருளாகும் .

ஆரம்பத்தில் பாராளுமன்றத்திற்கு சட்டவாக்க மற்றும் நீதித் துறை அதிகாரம் இருந்ததாக நம்பப்படுகிறது.

நாம் இதுவரை பார்த்த Witenagemot, Great Council ஆகியன பிரபுக்களை மட்டுமே உள்ளடக்கி இருந்தது. ஆனால், குறிப்பாக வரிவிதிப்பு சட்டங்களை இலகுவாக அமுல் படுத்துவதற்கு ஏதுவாக கிராமப்பறங்களிலுள்ள மக்களையும் பிரதிநிதித்துவப் படுத்தும் விதத்தில் 13ம், 14ம் நூற்றாண்டில் பிரபுக்கள் அல்லாதவர்களும் ஆலோசனைகளுக்காக மன்னனால் அழைக்கப்
பட்டார்கள்.


குறிப்பாக 1254ம் ஆண்டு பிரதேச உயர் அதிகாரிகள் ( sheriffs) ஒவ்வொரு உள்ளூர்ப் பிரதேசத்தில் இருந்தும் ( Shire ) இரண்டு knights களை பிரதிநிதிகளாக அனுப்புமாறு மன்னன் உத்தரவிட்டார் . ( knights என்பவர்கள் சிறிய அளவில் நிலம் உள்ளவர்கள் ) இவர்கள் knights of the Shire என அழைக்கப் பட்டார்கள்.


சில சமயங்களில் வரிவிதிப்பு , நிதி தொடர்பான விடயங்களைக் கலந்தாலோசித்தவுடன் knights களை அனுப்பி விட்டு ஏனைய விடயங்களை பிரபுக்களுடன் மட்டும் மன்னன் கலந்தாலோசித்தான். ஆனாலும் சாதாரண மக்களின் பிரதிநிதிகளும் பிரபுக்களும் ஒரே சபையில்தான் அமர்ந்தார்கள். அதுவரை மன்னன் விரும்புகின்றபோது மாத்திரம் கூட்டப்பட்டு வந்த பாராளுமன்றம் பிரபுக்களின் போராட்டத்தினால் வருடத்திற்கு மூன்று தடவை கூட்டும்படி, நிர்ப்பந்திக்கப் பட்டது. இது ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படியும் ( provisions of Oxford) புதிதாக செய்ய வைக்கப்பட்ட ஒப்பந்தத்தின் படியும் ( provisions of Westminster) ஆகும். ஆனாலும் இந்நடைமுறை சரியாக பின்பற்றப்படவில்லை.


ஆங்கிலக் கலவரம் (English Rebellion)
-------------------------------------------

அரசர்களின் தன்னிச்சையான செயற்பாடுகள் புரபுக்களுடனான தொடர்ச்சியான முறுகலுக்கு வழிவகுத்து கலவரத்தில் முடிந்தது. இக்கலவரத்திற்கு Montfort என்ற ஒரு பிரபு தலைமை தாங்கினார் .1264ம் ஆண்டு மே மாதம் 14ம் திகதி இக்கலவரத்தில் மன்னன் ஹென்ரி தோற்கடிக்கப் பட்டு சிறைப்பிடிக்கப் பட்டான்.


அரச ஆணையின்றி பாராளுமன்றம் முதல் தடவையாக கூட்டப்படல்
-------------------------------------------------

நாட்கள் செல்ல, செல்ல Montfort இற்கான பிரபுக்களின் ஆதரவு குறைய ஆரம்பித்தது. இந்நிலையில் 1264ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் திகதி பிரித்தானிய வரலாற்றில் முதல் தடவையாக அரச ஆணையின்றி Montfort பாராளுமன்றத்தைக் கூட்டினார் . அப்பாராளுமன்றத்திற்கு வழமைபோல் பிரபுக்கள் , மதத்தலைவர்கள் மற்றும் knights of the shires அழைக்கப்பட்ட அதேவேளை, ஒவ்வொரு நகரங்கள் அல்லது நகர்ப்புறங்களில் ( borough) இருந்தும் முதல் தடவையாக இரண்டு பிரதிநிதிகள் விகிதம் அழைக்கப் பட்டனர். பிரபுக்களின் ஆதரவு குறைந்ததால் தன்னை ஸ்திரப்படுத்திக்கொள்ள அவர் இதனைச் செய்தார் . 1265 ம் ஆண்டு ஜனவரி மாதம்14ம் திகதி கூடிய அப்பாராளுமன்றம் அதே ஆண்டு பிப்ரவரி மாதம் கலைக்கப் பட்டது.


தந்தையுடன் சேர்த்து சிறைப்பிடிக்கப் பட்ட மன்னன் ஹென்ரியின் மகன் எட்வார்ட் சிறையில் இருந்து தப்பியதைத் தொடர்து அதே ஆண்டு Montfort கொல்லப்பட்டார் . அதன்பின் ஆட்சிக்கு வந்த முதலாம் எட்வார்ட் Montfort இனுடைய பாராளுமன்ற முறைமையையே பின்பற்றினார் . அப்பாராளுமன்றம் ' model Parliament ' எனவும் அழைக்கப் பட்டது.


இவ்வாறு சாதாரண மக்களின் பிரதிநிதிகளாக அழைக்கப்பட்ட knights களும் burgesses (borough க்களில் இருந்து அழைக்கப்பட்ட பிரதிநிதிகள்) களுமே 'Commons' என அழைக்கப் பட்டார்கள். Commons என்ற சொல் ' commune' என்ற Norman French சொல்லில் இருந்து வந்தது. இதன் பொருள் ' community of the realm' என்பதாகும் .


மன்னன் எட்வார்ட்டைத் தொடர்து வந்த மன்னர்களைப் பொறுத்தவரை , பாராளுமன்றத்தின் அதிகாரம் என்பது ஆட்சியிலிருக்கும் அரசன் அல்லது அரசியின் பலம் அல்லது பலயீனத்திற்கேற்ப மாறுபட்டது.?


பலமான அரசன் தனக்கு வேண்டிய சட்டங்களை இலகுவாக பாராளுமன்றத்தினூடாக ஆக்க முடியும். சில நேரங்களில் பாராளுமன்றத்தைப் புறந்தள்ளி மன்னனே சட்டங்களை ஆக்கிய சந்தர்ப்பங்களும் உண்டு. பலயீனமான மன்னர்களின் ஆட்சியில் , பாராளுமன்றம் மன்னனுக்கு ஒரு சவாலாக, மன்னனை கடுமையாக விமர்சிக்கின்ற ஒரு நிலைமை இருந்தது.


பாராளுமன்றத்தின் இரு சபைகள்
-------------------------------------
1341 ம் ஆண்டுதான் முதல் தடவையாக பிரபுக்கள் வேறாகவும் Commons வேறாகவும் கூடினார்கள். அதிலிருந்து பாராளுமன்றம் இரு சபைகளாகியது. மேல் சபை House of Lords என்றும் கீழ்சபை House of Commons என்றும் அழைக்கப்பட்டன. படிப்படியாக Commons தங்களது அதிகாரத்தை நிலை நாட்ட முற்பட்டார்கள்.


தேர்தல் முறை
----------------
Commons ( knights and burgesses) இதுவரை சகல சுதந்திர மக்களாலும் ( freemen) தெரிவு செய்யப்பட்டு வந்த நிலைமை 1430ம் ஆண்டு தொடக்கம் மாற்றப்பட்டு 40 shillings இற்கு மேற்பட்ட சொத்துக்கள் உள்ள ஆண்களுக்கு மட்டும் வாக்குரிமை வழங்கப் பட்டது. அதாவது சுமார் மூன்று விகித ஆண்களுக்கே வாக்குரிமை வழங்கப்பட்டது. மட்டுமல்லாது இரகசிய வாக்களிப்பு முறையும் வழங்ஙகப்படவில்லை. எனவே தேர்தல்கள் தனவந்தர்களால் கட்டுபப்படுத்தப் பட்டது. ஏனெனில் ஒவ்வொரு தொகுதியிலும் (borough) இருந்த வாக்காளர்களில் பெரும்பான்மையானோர் யாரோ ஒரு செல்வாக்குள்ள தனவந்தரில் தங்கி இருந்தார்கள் , அல்லது பணத்தின் மூலமோ அல்லது சலுகைகளுக்கூடாகவோ வாங்கப்படக் கூடியவர்களாக இருந்தார்கள் . எனவே வாக்காளர்களைக் கட்டுப்படுத்தும் செல்வந்தர்கள் மன்னனுக்கு சார்பானவர்களாக இருந்தால் அமைகின்ற பாராளுமன்றம் மன்னர் சார்பானதாகவும் இல்லாவிட்டால் மன்னருக்கு எதிரானதாகவும் இருந்தது.

( கிழக்கு மாகாணத்தில் அந்தக் காலத்தில் நமது பிரதேசங்களில் 'போடி' மார், அல்லது 'முதலாளி'மார் வாக்காளர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த வழக்கத்தை நினைத்துப் பார்க்கவும் .)



சபாநாயகர் (Speaker) என்ற பதம்
--------------------------------------
சபாநாயகர் என்ற பதம் 1540 ம் சபைக்குத் தலைமை தாங்குபவருக்கு பாவிக்கப் பட்டது. சபை உறுப்பினர்கள் அரசன்மீது அதிருப்தி அடைகின்றபோது அதனை மன்னனின் கவனத்திற்கு கொண்டுவருவது சபாநாயகரின் பொறுப்பாகும் .


சட்டமூலம் கொண்டு வருதல்
--------------------------------
இரு சபைகளைக் கொண்ட பாராளுமன்றத்தின் எந்தச் சபையிலும் ஒரு சட்டமூலத்தை முன்வைக்கலாம் . ஆனால் அச்சட்டமூலம் இரு சபைகளிலும் நிறைவேற்றப் பட்டு அரசனாலும் அங்கீகரிக்கப் படல் வேண்டும். அஅரசனுக்கு அச்சட்ட மூலத்தை வீட்டோ செய்வதற்கும் அதிகாரம் உண்டு. 16ம் 17ம் நூற்றாண்டுகளில் பல தடவைகள் அரசர்கள் வீட்டோ அதிகாரத்தை பாவித்து இருக்கிறார்கள் . ஆனாலும் 1707ம் ஆண்டிற்குப் பிறகு வீட்டோ அதிகாரம் பாவிக்கப்பட வில்லை.


ஏன் பாராளுமன்றத்திற்குள் நுழையும் போதும் வெளியறும் போதும் தலையைக் குனிந்து சபா பாடத்திற்கு மரியாதை செலுத்த வேண்டும்
--------------------------------------------------------
இன்று இருக்கின்ற Westminster Parliament அரச மாளிகையாக இருந்தது. (Palace of Westminster) அதனை இறுதியாக பாவித்த அரசன் ஹென்ரி 8 ஆகும். அந்த மாளிகையில் இருந்த St. Stephan's Chapel ஐ House of Commons தொடர்ச்சியாக கூடுவதற்கு அந்த அரசன் வழங்கினான் .

Chapel என்பது ஒரு கல்லூரியில் அல்லது ஒரு பாடசாலையில் வணக்க வழிபாடுகள் செய்வதற்கு இருக்கின்ற ஒரு அறையாகும். சில கிறிஸ்தவ பிரிவுகளில் சொந்த பலிபீடத்தைக் கொண்ட (Altar) தேவாலயத்தின் ஒரு பகுதி ( a separate part of a church or a cathedral) chapel என அழைக்கப்படும். ( ஏற்கனவே அங்கு இருந்த ஒரு கல்லூரியை இடித்துவிட்டே, Palace of Westminster கட்டப் பட்டது)


அந்த House of Commons கூடிய Chapel இன் பலி பீடத்திற்கு (Altar) முன்னால்தான் சபாநாயகரின் கதிரை போடப்பட்டிருந்தது . பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளே வரும்போதும் வெளியே போகும்போதும் அப்பலி பீடத்திற்கு தலைவணங்கி மரியாதை செய்வது வழக்கமாக இருந்தது.


பின்னர் அப்பலிபீடம் நீக்கப்பட்ட போதும் அவ்வழக்கம் தொடர்ந்தது. அந்த வழக்கம்தான் இன்று இலங்கையிலும் தொடர்கிறது .


கலகமும் புரட்சியும்
----------------------
மன்னர்களுக்கும் பாராளுமன்றத்திற்கும் தொடர்ச்சியாக ஏற்பட்டு வந்த இழுபறி ஒரு நீண்ட வரலாறாகும் . 1628 ம் ஆண்டு அன்றைய மன்னனான முதலாம் சார்ள்ஸ் இடம் பாராளுமன்றத்தின் சுதந்திரத்தை அங்கீகரிக்குமாறு கோரியபோது அதனை ஏற்றுக்கொண்ட மன்னன் பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு 11 ஆண்டுகள் பாராளுமன்றம் இல்லாமல் ஆட்சி செய்தான் . ( வாக்குமாறுவதென்பது தொன்று தொட்டு வருகின்ற ஒரு அரசியல் பண்பு ) பின்னர் Scottish bishops களினால் உருவாக்கப்பட்ட சண்டைக்கு நிதி திரட்டுவதற்காகவே பாராளுமன்றம் மீண்டும் கூட்டப் பட்டது.


இவ்வாறு, மன்னனுக்கும் பாராளுமன்றத்திற்குமிடையில் முறுகல் தீவிரமடைந்திருந்த நிலையில் அயர்லாந்து கத்தோலிக்கர்களால் கலவரம் உருவாக்கப்பட்டிருந்தது. அக்கலவரத்தை அடக்க மன்னன் வேறாகவும் பாராளுமன்றம் வேறாகவும் படை திரட்டினர் . அக்கலவரம் அடக்கப்பட்டதன் பின் எதிர்பார்க்கப் பட்டதுபோல் அவ்விரு படைப்பிரிவுகளுக்குமிடையில் 1642 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் Edgehill என்ற இடத்தில் ஏற்பட்ட சண்டையோடு, ஆங்கில சிவில் யுத்தம் ( English Civil War ) தொடங்கியது. இது 1649 ம் ஆண்டு மன்னனுக்கு மரணதண்டனை வழங்குவதில் முடிந்தது. அதன்பின் 11 ஆண்டு காலம் இங்கிலாந்தில் குடியரசு ஆட்சி நடைபெற்றது . இக்காலப்பகுதியில் பாராளுமன்றத்தின் பிரபுக்கள் சபை முறைமை ஒழிக்கப்பட்டு பாராளுமன்றம் ஒரு சபையைக் கொண்டதாக (unicameral) அமைந்தது .


இந்நிலையில் 1653 ம் ஆண்டு அப்போதைய ராணுவத் தளபதி Oliver Cromwell பாராளுமன்றத்தைக் கலைத்தார் . பின்னர் அவர் கூட்டிய பாராளுமன்றமும் ஒரே சபையைக் கொண்டதாகவே அமைந்தது.


மன்னன் முதலாம் சார்ள்ஸ் கொல்லப்பட்டதிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் பாராளுமன்ற முறைமையில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. MP ( member of parliament) என்ற பதமும் இக்காலப்பகுதியிலேயே உபயோகத்திற்கு வந்தது.


பாராளுமன்றமே வாக்களித்து மன்னன் இரண்டாம் சார்ள்ஸை 1660ம் ஆண்டு மே மாதம் புதிய மன்னராக்கியது. ஆனாலும் மன்னன் சார்ள்ஸ் தன்னை மன்னனாக்கிய பாராளுமன்றத்தையே கலைத்து 4 ஆண்டுகள் பாராளுமன்றம் இல்லாமல் ஆட்சி செய்தார் .


Glorious Revolution
------------------------

மன்னன் இரண்டாம் சார்ள்ஸ் 1685ம் ஆண்டு இறந்தார் . அதனைத் தொடர்ந்து அவரது சகோதரர்
இரண்டாம் ஜேம்ஸ் மன்னரானார் . மன்னர் சார்ள்ஸ் கத்தோலிக்கத்தின் மீது உள்ளக ஆதரவு வைத்திருந்தாலும் வெளியில் ஒரு புரொட்டஸ்டன்ட் ஆக நடந்து கொண்டார். ஆனால் மன்னன் ஜேம்ஸ் வெளிப்படையாகவே ஒரு கத்தோலிக்க விசுவாசியாக நடக்க முற்பட்டார். புரொட்டஸ்டன்ட் மக்களைப் பெரும்பான்மையாக கொண்ட இங்கிலாந்தில் கத்தோலிக்கர்களுக்கு உயர்பதவி வகிப்பதில் இருந்த தடைகளை நீக்கினார். இவ்வாறான அவரது நடவடிக்கைகள் புரட்டஸ்தாந்து மக்களின் எதிர்ப்பிற்குள்ளாகியது. இந்நிலையில் மன்னன் ஜேம்ஸின் மகள் மேரியை திருமணம் முடித்த William of Orange ஒரு புரட்டஸ்தாந்துக் காரராக இருந்தார் . எனவே அவரை இங்கிலாந்திற்கு படையெடுத்துவந்து நாட்டைக் கைப்பற்றுமாறு மக்கள் கோரினார்கள். அதன்பேரில் அவரும் படையெடுத்து வர, மன்னன் ஜேம்ஸின் அணியில்
இருந்த புரொட்டஸ்டன்ட் மதத்தைச் சேர்ந்த பலர் William உடன் இணையத் தொடங்கினர். இந்நிலையில் மன்னன் இரண்டாம் ஜேம்ஸ் நாட்டை விட்டு ஓட்டம் பிடித்தார் .


எனவே, வில்லியம் இரத்தம் சிந்தாப் புரட்சி மூலம் மன்னரானதால் அப்புரட்சி Glorious Revolution என அழைக்கப்படுகிறது . ( சில வரலாற்றாசிரியர்கள் , அடியோடு இரத்தம் சிந்தப்பட வில்லை; என்பது பிழை. ஒப்பீட்டளவில் மிகக்குறைந்த அளவு இரத்தம் சிந்தப்பட்டதாக கூறுகின்றார்கள் )


Parliament of Great Britain/ Parliament of United Kingdom ( பெரிய பிரித்தானிய/ ஐக்கிய ராஜ்ஜிய பாராளுமன்றம் )
--------------------------------------------------------

1707 ம் ஆண்டு இங்கிலாந்திற்கும் ஸ்காட்லாந்திற்கும் இடையில் செய்யப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைய (Treaty of Union) இரு நாட்டுப் பாராளுமன்றங்களாலும் ஸ்கொட்லாந்து இங்கிலாந்துடன் இணைக்கப் பட்டதைத் தொடர்ந்து Great Britain உருவானது. எனவே பாராளுமன்றம் , Parliament of Great Britain என அழைக்கப் பட்டது. அதன்பின் 1801ம் ஆண்டு Act of Union ஊடாக அயர்லாந்தையும் பிரித்தானியாவுடன் இணைத்தன்மூலம் Parliament of United Kingdom ( ஐக்கிய ராஜ்ய பாராளுமன்றம் ) என அழைக்கப் பட்டது.


( தொடரும் )
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -