ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக காவலாளியை தாக்கி காயம் ஏற்படுத்தியதுடன் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பான சந்தேக நபர்களான பல்கலைக்கழக மாணவர்கள் எட்டுப் பேரையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதிவான் நீதிமன்ற நீதிபதியுமான திருமதி நளினி கந்தசாமி உத்தரவிட்டார்.
நேற்று முன்தினம் இவர்களை மன்றில் ஆஜர்படுத்திய போதே மேற்படி உத்தரவை பிறப்பித்தார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
இம்மாதம் 13 ஆம் திகதி இரவு 11 மணியளவில் பல்கலைக்கழகத்திற்குள் சத்தம் கேட்பதாக அறிந்த காவலாளி அவ் இடத்தை நோக்கி சென்று பார்த்த போது கதவு கண்ணாடிகள் உடைந்து கிடப்பதை கண்டு அங்கு நின்ற மாணவர்களிடம் விசாரித்துள்ளார். இதன்போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது மாணவர்கள் பலர் சேர்ந்து காவலாளியை தாக்கியுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த காவலாளி ஒலுவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்தினர் பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார் வர்த்தக முகாமைத்துவ பிரிவில் கற்கும் மாணவர்கள் எட்டு பேரை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காலை கைது செய்து மன்றில் ஆஜர்படுத்தினர். கைது செய்யப்பட்ட மாணவர்கள் மாத்தளை, கண்டி, அநுராதபுரம், அம்பாறை, தெஹியத்தக்கண்டி, ஹட்டன் ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
