சீரழியும் அபாயாக்கள் - ஓர் விரிவான பார்வை

“அபாயா “என்று தலைப்பை பார்த்ததும் பெண்களுக்குரியது என ஆண்களே ஓடி விடாதீர்கள். நீங்கள் தான் பெண்களின் நிர்வாகிகள். உங்களுக்கும் சேர்த்துத் தான் இப்பதிவு.

அபாயா என்பது பல ஆண்டுகளுக்கு முன்னால் ஏதோ அதிக பட்ச தக்வாதாரிகள் மட்டுமே உடுத்திய உடையாகவே இருந்தது. ஆனால் இன்று அது முஸ்லிம் பெண்களின் தேசிய உடையாகவே மாறி விட்டது. அபாயா அணியாதவர்களை விரல் விட்டு எண்ணி விடக் கூடிய அளவிற்கு மலிந்து போய்விட்டது.

ஒரு பெண் அபாயா போட்டுத் தான் தன்னை மறைக்க வேண்டுமா? இல்லை தான் உடுத்தியுள்ள ஏதோ ஆடையால் தன் உடல் , மற்றும் தலை தெரியாத வகையில், உடலின் நிறம், கட்டமைப்பு தெரியாத வகையில் மறைத்துக் கொண்டால் போதுமா? என்று பத்வா கொடுக்கத் தெரியவில்லை. ஆனால் உடலின் கட்டமைப்பு, தலை, கை, கால்களின் அமைவு, கூந்தல், தோளின் பரவல் என்பன தெரியாத வகையில் ஆடை பெரிதாக இருப்பதும் தோலின் நிறம் தெரியுமளவு மெல்லியதாக இருக்காமல் இருப்பதும் முக்கியம் என்பதை பல ஹதீஸ்களினூடாக அறிய முடிகிறது. அபாயாவின் நிறம் பற்றி உறுதியாக தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் அது பற்றி விளக்கவும்.

ஆனால் இன்றைய எமது கண்மணிகளின் அபாயாக்கள் நோக்கத்தை நிறைவேற்றுகிறதா?

ஷல்வார், சாரி போல அபாயாவும் fancy dress ஆக ஆகி விட்டதா?

எவ்வளவு இறுக்கமாக உடுத்த முடியுமோ அவ்வளவு இறுக்கமாக உடுத்துவதால் உடலின் அங்கங்கள் பற்றி வகுப்பே எடுத்து விடலாம் போலுள்ளது. இதில் சில பேர் நிகாபையும் போட்டு நிகாபின் கண்ணியத்தையும் கெடுத்து விடுகின்றனர். உடலை காட்டி விட்டு முகத்தை மூடுவதன் நோக்கம் தான் என்ன? யாருடைய உடல் என தெரியாதிருப்பதா?
saree habaya, shalwar habaya, butterfly habaya, umbrella cut habaya, open habaya-இதென்ன இது?

கேவலமாக இல்லையா?

அபாயா என்பது அழகை மறைப்பதற்கா? மெருகூட்டுவதற்கா?

அபாயாவை போட்டுவிட்டு கைக்குட்டை மாதிரி சிறிய முந்தானையால் அல்லது ஸ்காபால் தலையை மூடுவது. இல்லை தலையை சுற்றி இறுக்கி கட்டிக் கொள்வது..

காதுகளின் அடையாளம் வேறாக தெரிகிறது. தோள்களும் நெஞ்சுப் பகுதியும் தெளிவாக தெரிகிறது. தலையை மட்டும் மூடுவதா நோக்கம்?
பர்தா, ஜில்பாப் தேவையில்லை. இடுப்பு வரை மூடக் கூடிய அகன்ற முந்தானைகளுமா இல்லை?

உங்களுக்கு கண்ணாடியில் முன் பக்கம் மட்டுமே தெரியும். ஆனால் பின்னால் வருபவரின் கண்களுக்கு பூட்டு போட முடிவதில்லை என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

அபாயா உடுத்தும் பெண் கட்டாயமாக ஒரு நீண்ட காற்சட்டை அணிவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.ஏனெனில் சேற்று தரையில் நடக்கும் போதும், சிறு குழந்தைகளை தூக்கி நடக்கும் போதும், கடைத் தெருக்களில் நடக்கும் போதும் , மோட்டார் சைக்கிளில் போகும் போதும் தன் அபாயாவை சற்று உயர்த்தும் போது அவர்களது கால்கள் தெரிகிறது. இது பற்றி கவனத்தில் கொள்ள வேண்டும்.

திடீர் விபத்துகள், தடுக்கி விழும் நிகழ்வுகளை நினைவில் கொண்டு காற்சட்டை ஒன்றை உடுத்துவது உகந்தது.

நம் பெண்களில் சிலர் இலகுவை நோக்காகக் கொண்டு அபாயாவின் உள்ளே டீ சேட், மற்றும் லெகின்ஸ் உடுத்துவதை அவதானித்திருக்கிறேன். ஆனால் அவர்கள் சூரிய ஒளிக்கு முன்னால் நடக்கும் போது ஒளியின் ஊடுபுகவிடும் தன்மை காரணமாக உடலின் அமைப்பு தெரிய வருகிறது. கருப்பு நிற அபாயாக்களிலும் இதை அவதானிக்கலாம். உள்ளே உடுத்தும் உடை பெரிதாக இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அபாயாவின் துணி சில்க், மற்றும் stretched ஆக இருப்பதால் உள்ளே உடுத்தும் ஆடைகள் பற்றி சிரத்தை எடுப்பது சிறந்தது. (எழுத முடியாமை காரணமாக எழுதவில்லை. புரியாத சகோதரிகள் இன்பொக்ஸில் வரவும்)

அல்லாஹ் அழகானவன். அழகையே விரும்புகிறான். எப்படிப் பட்ட அபாயாவையும் அணிந்து கொள்ளுங்கள். ஆனால் அபாயாவின் நோக்கம் பற்றி நினைவில் கொள்ளுங்கள்.

ஒரு சமுகத்தை பிரதிபலிக்கும் ஒரு கண்ணியமான ஆடை அதே சமுகத்தை சேர்ந்தவர்களாலே சீரழிக்கப்படுவது வருந்தத் தக்கது.

மாற்றுமத சகோதரிகள் எங்கும் வெளியில் போவதென்றால் தம் உடலை கழுவி வாசனையெல்லாம் பூசி இருப்பதிலேயே சிறந்த ஆடையை உடுத்தி தான் போவார்கள். ஆனால் துரதிஷ்டம் “சுத்தம் ஈமானில் பாதி”என்ற மதத்துப் பெண்களோ வீட்டில் எப்படி அழுக்குடன், நாற்றத்துடன் இருந்தார்களோ அவ்வாறே அதே நிலையுடன் அழகாக அபாயாவை மட்டும் போட்டுக் கொள்கிறார்கள். சிலரது அபாயாக்களின் வியர்வை நாற்றம் அருகில் போகும் போதே கவர்கிறது.

திடீர் விபத்தின் போது வைத்தியசாலையில் பெக்கிங் உடைக்கும் போது வைத்தியர்களும் தாதியர்களும் மூக்கை பொத்தும் சம்பவங்கள் எண்ணிலடங்காது.

வெளியில் போகும் போது புறத்தோற்றத்தை மட்டும் கருதாமல் அவசர நிலமைகள் பற்றியும் எண்ணிக்கொள்வது புத்தி சாதுரியமானது.

கர்ப்பிணிகளின் கிளினிக்’களில் ஸ்கேனிங் போன்ற வேளைகளில் அபாயாக்கள் களையப்படும் போது உள்ளே அடங்கிய நாற்றம் அணையுடைத்த வெள்ளம் போல பரவும் போதைய அவஸ்தைகள்தான் வைத்தியர்களுக்கு அபாயாவின் மீதே வெறுப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

பிரஷர் பார்க்கும் போதும், ஊசியேற்றும் போதும் கையை முழுமையாக உயர்த்தக் கூடிய அபாயாக்கள் வைத்தியர்களுக்கும், தாதியருக்கும் இலகுவாக இருக்கும். அவர்களதும் எமதும் நேரமும் மிச்சமாகும்.

ஆனால் நம் சகோதரிகளோ நல்ல இறுக்கமான அழகான அபாயாக்களை அணிந்து சென்று அவர்களை வெறுப்பேற்றுவதை பல தடவைகள் அவதானித்திருக்கிறேன். எமது பெருமையை காட்டும் இடம் வைத்தியசாலை அல்ல.

அபாயாவை கழற்றிவிட்டு வரச் சொல்லும் மருத்துவர்களை துவேசம் பிடித்தவர்களாகவே பார்த்துக் கொண்டிருக்கிறோம், எமது பிழைகளை உணராமலே.

வைத்தியசாலைக்கு போகும் போது கழற்ற இலகுவான, முன் பகுதி முழுமையாக திறக்கக் கூடிய, தளர்வான அபாயாக்களை உடுத்துவதும், பர்தாவை கழற்றும் தேவைகளை உணர்ந்து ஒரு முந்தானையை கைவசம் வைத்திருப்பதும் சமயோசிதமானது.

ஒருமுறை காது சம்பந்தமான கிளினிக்கில் ஒரு பெண் ஏச்சு வாங்கும் போது பரிதாபமாக இருந்தது. காதை காட்ட வரும் பெண் தானாகவே பர்தாவை கழற்றி ஒரு முந்தானையை போட்டிருந்தால் அந்த தாதியிடம் பாவம் அபாயாவும் பர்தாவும் ஏச்சு வாங்கியிருக்காது என தோன்றியது.

குழந்தைகள் பிரிவிலுள்ள நோயாளிகளை தரிசிக்கச் செல்லும் நிகாப் போடும் பெண்கள் முதலே முகத்தை திறந்து கொள்வது நல்லது. ஏனெனில் அங்குள்ள சிறு குழந்தைகள் பயந்து கத்தி பெரும் பிரச்சினைகள் ஏற்பட்டதை பலமுறை தாதியர் சொல்லியிருக்கிறார்கள்.

தீவிர சிகிச்சை பிரிவிலுள்ள (ICU) நோயாளியை பார்க்கச் செல்லும் பெண் தன் அபாயா, பர்தாவை கழற்ற முடியுமென்றால் “மட்டும்” பார்க்கச் செல்லவும். ஏனெனில் ICU வினுள் போகும் யாரும் தன் ஆடையை மாற்றி அவர்களது கிருமி நீக்கம் செய்யப்பட்ட ஆடையையே அணிதல் வேண்டும். சில வருடங்களுக்கு முன் கண்டி வைத்தியசாலையில் அபாயாவை கழற்றச் சொன்னதால் பிரச்சினை நடந்தது இதனால்தான். நாம் பிழை செய்து விட்டு மற்றவரில் பழி போடுவது நல்லதல்ல.

நம்முடைய முட்டாள்தனமான சாதுரியமற்ற “சில “பெண்களது நடவடிக்கைகளினால்தான் பிற மதத்தவரும் “அபாயா “என்றாலை வெறுக்கிறார்கள். அவர்களுக்கு அந்த கெட்ட அபிப்பிராயத்தை கொடுத்ததே நாம்தான்.

ஒரு பானை பாலுக்கு ஒரு துளி விஷம் போதும் தானே?
– Fauzuna Binth Izzadeen –
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -