சத்தார் எம் ஜாவித்-
இலங்கையின் வரலாற்றை புறட்டிப்போட்ட கடந்த முப்பது வருடகால யுத்தம் வடகிழக்கில் சமுகங்களுக்கிடையில் ஒற்றுமையற்ற தன்மையை ஏற்படுத்தியதன் விளைவாக இன்று வரை ஒவ்வொரு சமுகமும் மற்றய சமுகத்தினை குற்ற உணர்வுடனும், எதிரிகலாகவும் கண்டு கொள்ளும் ஒரு கலாச்சாரமே மேலோங்கி வருகின்றது.
இந்த வகையில் வடகிழக்கில் பெரும்பான்மையாக வாழ்ந்த சமுகங்களாக தமிழர்களும், முஸ்லிம்களும் காணப்படுகின்றனர். இவர்களின் பிரிவிற்கு 1990ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் வடகிழக்கிலிருந்து குறிப்பாக வடக்கிலிருந்து முஸ்லிம்கள் முற்றாக விடுதலைப் புலிகளால் இனச் சுத்திகரிப்புச் செய்யப்பட்டதன் விளைவாக தமிழ், முஸ்லிம் உறவுகள் சின்னாபின்னமாக்கப்பட்டன.
இவ்வாறு முஸ்லிம் சமுகம் விரட்டப்பட்டதன் பின்னர் விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் வடக்கில் அதிகரித்து யுத்த கொடூரம் எல்லோரையும் காவுகொள்ளத் தொடங்கியதுடன் பெரும்பான்மை சிங்கள மக்களின் பரம எதிரிகளாக தமிழ் மக்கள் நோக்கப்பட்டு பலவாறான பிரச்சினைகளுக்கும் அவர்கள் முகங்கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது எனலாம்.
இவ்வாறான காலகட்டத்தில் வடகிழக்கு தமிழ் மக்களுக்க முஸ்லிம் சமுகத்தின் தாக்கம் தெரியத் தொடங்கியது. வடக்கில் தமிழ் மக்கள் மீது பாரியளவில் தாக்குதல்களை மேற்கொள் விடுதலைப் புலிகள் வழி சமைத்து விட்டனர். குறிப்பாக படைத்தரப்பினரை கொலை செய்வது, சிங்கள மக்களைக் கொலை செய்வது, இராணுவ முகாம்கள், பொலிஸ் நிலையங்கள், அரச அலுவலங்கள் என தமது தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட விடயங்கள் சிங்கள மக்களையும், படைத் தரப்பினரையும் கிளர்ந்து எழுவதற்க வழி சமைத்து விட்டது.
இந்த நிலைமைகளின் பிரதிபலிப்புக்கள் வடக்கில் தமிழ் மக்கள் மட்டும் இருக்கின்றனர் என்ற வகையில் படைத்தரப்பினர் தமது தாக்குதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கு ஒரு காரணமாக அமைந்து விட்டது. இதேவேளை வடக்கிலிருந்து முஸ்லிம் சமுகம் விரட்டப்படாது இருந்திருந்தால் இன்று வடக்கு தமிழ் மக்கள் இந்தளவு கஷ்டங்களை அனுபவித்திருக்க மாட்டார்கள் எனலாம்.
காரணம் என்னதான் யுத்தக் கோரங்கள் இடம் பெற்றாலும் இருசமுகங்கள் இருக்கின்றனர் என்ற அடிப்படையில் படைத்தரப்பினர் தமது தாக்குதல் நடவடிக்கைகளை விரிவு படுத்தியிருக்க மாட்டார்கள். ஏதோ ஒரு வகையில் நெகிழ்ச்சித் தன்மையில் பிரச்சினைகள் காணப்பட்டிருக்கும் என்ற விடயத்தினை இங்கு சுட்டிக்காட்டலாம்.
இவ்வாறு பல்வேறுபட்ட துன்பியல் நிலைமைகளை அனுபவித்த தமிழ் மற்றும் முஸ்லிம் சமுகம் கடந்த 2009ஆம் ஆண்டின் யுத்த வெற்றிக்குப் பின்னர் ஏதோ ஒரு வகையில் சுதந்திரக் காற்றை சுவாசித்தாலும் அது சமுகங்களுக்கிடையில் இதய சுத்தியுடன் சமாதானத்தை நுகர்பவர்களாகத் தெரியவில்லை மாறாக இன்றும் ஒவ்வொருவரும் முன்னைய குற்ற உணர்வகளுடன் செயற்படுவதைக் காணக் கூடியதாகவுள்ளது.
குறிப்பாக வடக்கில் தற்போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீள் குடியேற்றப்பட்டு அவர்களுக்கான அரசின் வீடமைப்புத்திட்டங்களும் வழங்கப்பட்டு வருகின்ற இவ்வேளையில் முஸ்லிம் சமுகம் தமிழ் மக்களாலேயே புறக்கணிக்கப்படும் நிலைமைகளும், ஒருசில தமிழ் அரசியல்வாதிகள் முட்டுக்கட்டைகள் போடுவதையும் அங்குள்ள முஸ்லிம் அமைப்புக்கள் அரசுக்கு சுட்டிக்காட்டி வருகின்றமையைக் குறிப்பிடலாம்.
இவ்வாறான துர்ப்பாக்கிய நிலைமைகளை போக்கி இரு சமுகங்களும் பாதிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் தேவைகள் ஒரேவிதமானவையாகவே காணப்படுவதால் அதனை ஏற்படுத்தி அல்லது நிறைவேற்றிக் கொடுப்பதில் அரசுக்கு இருப்பதுடன் இதனை சிறப்பாகப் பெற்றுக் கொள்வதற்கு வடகிழக்கின் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் தலைமைகளும், அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டிய முக்கிய தேவைப்பாடு தற்போது ஏற்பட்டுள்ளது.
