யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பிரதேசத்தில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி விவகாரத்தில் தொடர்புபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் புலம்பெயர் தமிழர்கள் இருவரைக் கைதுசெய்வதற்கு சர்வதேச பொலிஸாரின் உதவியை ஸ்ரீலங்கா பொலிஸார் நாடியுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் இருவரும் ஜேர்மன் நாட்டில் வாழ்ந்து வருவதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய கைதுசெய்வதற்கான அடுத்தகட்ட நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
எனினும் இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகரவுடன் வினவியது. இந்த விடயம் சார்ந்த மேலதிக விசாரணைகளை பயங்கரவாத விசாரணைப் பிரிவு முன்னெடுத்துவருவதாக தெரிவித்த அவர், இரகசியமாக முன்னெடுக்கப்படும் தகவல்களை வெளியிட முடியாது என்றும் மறுத்துவிட்டார்.
தற்கொலை அங்கி மீட்கப்பட்ட விடயம் தொடர்பில் இதுவரை 11 பேர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இதில் ஒருவரைப் பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகள் வெள்ளை வானில் கடத்தி கைதுசெய்திருந்தமை குறித்து சந்தேக நபரது உறவினர்கள் சார்பில் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்திலும், கொழும்பிலுள்ள அதன் தலைமையகத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் யாழ். குடாநாட்டில் தீவிர புலனாய்வு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் நிலையில் எதிர்காலத்தில் மேலும் பலர் கைதுசெய்யப்படும் நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
இந்த நிலையில் தற்கொலை அங்கி மீட்கப்பட்ட விடயத்தில் தொடர்புவைத்திருக்கின்றார்கள் என்று சந்தேகிக்கப்படுகின்ற ஜேர்மனில் வாழும் புலம்பெயர் தமிழர் இருவரைக் கைதுசெய்வதற்கான நகர்வுகளை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
