காரைதீவு நிருபர-
சம்மாந்துறைவலயக்கல்விப்பணிமனை கடந்த இரு மாதகாலமாக நிருவாக
உத்தியோகத்தரின்றி (யு.ழு) இயங்கிவருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் உள்ளீர்ப்பு பதவியுயர்வு சம்பள மாற்றம் மற்றும் இன்னொரன்ன பணிகள் ஸ்தம்பிதநிலையையடைந்துள்ளன. தமக்கான உள்ளீர்ப்பு நடைபெறவில்லையென ஆசிரியர்கள் தமது ஆசிரியர் தொழிற்சங்கங்களிடம் முறையிட்டுவருகின்றனர்.
ஏலவே இருந்த நிருவாக உத்தியோகத்தர் இடமாற்றலாகிச் சென்றதையடுத்து
அவ்விடத்திற்கு வரவேண்டிய நிருவாக உத்தியோகத்தர் இதுவரை சமுகமளிக்காமையே இப்பிரச்சினைக்கு காரணமெனக்கூறப்படுகிறது.
இங்கு வரவேண்டிய நிருவாக உத்தியோகத்தர் வரத்தயார் நிலையிலிருந்தபோதிலும் அவரது இடத்திற்கு வரவேண்டிய நிருவாக உத்தியோகத்தரின் வருகை பிற்போடப்பட்டுள்ளமை தொடர்பிலேயே இச்சிக்கல்நிலை எழுத்துள்ளது.
இது தொடர்பாக சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீமிடம் கேட்டபோது:
ஏலவேயிருந்த நிருவாக உத்தியோகத்தரின் இடமாற்றத்திற்குப் பதிலாக எமக்கு வரவேண்டிய நிருவாக உத்தியோகத்தர் இன்னும் கடமைக்கு சமுகமளிக்காமைதான் இன்றைய ஸ்தம்பித நிலைமைக்கு காரணமாகும்.
இது தொடர்பில் கிழக்கு மாகாண பிரதிப்பிரதம செயலாளரிடம் தெரியப்படுத்தியுள்ளேன். வெகுவிரைவில் புதிதாக ஒருவர் நியமிக்கப்படுவார் என தெரியவருகிறது.
நாம் ஏலவே அதிகூடிய தொகை ஆசிரியர்களின் உள்ளீர்ப்பு வேலைகளை முடித்துள்ளோம். எனினும் ஆசிரியர்களின் பதவியுயர்வு மற்றும் சம்பளமாற்றம் தொடர்பான வேலைகளை மூடிய பணிமனையில் நாம் மீண்டும் இவ்வாரம் ஆரம்பிக்கவுள்ளோம். இக்காலப்பகுதியில் ஆசிரியர்கள் அதிபர்கள் இந்நிருவாகப்பகுதிக்கு வருவதை தவிர்த்து ஒத்துழைக்குமாறு கேட்டுள்ளோம்.

