இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் தின விழாவும், பேசப்பட்ட விடையங்களும் (முழு விபரம்)



செய்தியாளர் - க.கிஷாந்தன்-

“ஆண் பெண் சமத்துவம்” என்ற தொனிப்பொருளின் கீழ் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் தின விழா 20.03.2016 அன்று தலவாக்கலை நகர சபை மைதானத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.

கட்சியின் மகளிர் அணி தலைவியும் முன்னால் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சருமான அனுஷியா சிவராஜா தலைமையில் நடைபெற்றது.

இந்த மகளிர் அணி விழாவில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் தலைவருமான முத்து சிவலிங்கம், போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பெருந்தோட்டதுறை அபிவிருத்தி அமைச்சர் நவீன் திஸாநாயக்க, உள்ளிட்ட மத்திய மாகாண விவசாயத்துறை அமைச்சர் எம்.ரமேஷ்வரன் மற்றும் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.பீ.ரத்நாயக்க, இ.தொ.காவின் மத்திய மாகாண சபை மற்றும் ஊவா மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோருடன் ஏனைய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

தலவாக்கலை நுவரெலியா பிரதான வீதியில் நகரசபைக்கு முன்னால் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த பேரணியில் மத்திய மாகாணத்தை உள்ளடக்கிய அனைத்து பிரதேசங்களிலிருந்தும் வருகை தந்த மகளிர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் பெண்கள் பேரணியும் இடம்பெற்றது. அத்தோடு இ.தொ.காவின் மூத்த மகளிர்க்கான மாலையிட்டு பொன்னாடை போர்த்தி அவர்களின் சேவைகளை பாராட்டிய கௌரவிப்பு நிகழ்வும், இசை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.


தோட்ட தொழிலாளர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு சுபீட்சமடைய தொண்டானுடன் நவீன் கை கோர்ப்பு

தோட்ட தொழிலாளர்களின் எதிர்கால வாழ்க்கையை இந்த சூழ்நிலையில் சுபீட்சமடைய செய்ய ஆறுமுகன் தொண்டமானுடன் அமைச்சர் நவீன் திஸாநாயக்க கைகோர்த்து செயலாற்ற உள்ளதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

தலவாக்கலை நகரில் 20.03.2016 அன்று நடைபெற்ற இ.தொ.காவின் மகளிர் தின விழாவில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் பெருந்தோட்டதுறை அபிவிருத்தி அமைச்சர் நவீன் திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தனது உரையில் தெரிவித்ததாவது,

தோட்ட தொழிலாளர்கள் நாட்டின் பொருளாதாரத்தின் கண்கள், இவர்கள் மதிக்கப்பட வேண்டிய மக்கள் இன்றைய சூழ்நிலையில் அவர்களுடைய வாழ்வுக்கு புதுயுகம் படைக்க வேண்டும்.

இதனை அடிப்படையாக கொண்டு நானும், ஆறுமுகன் தொண்டமானும் கலந்தாலோசித்து கைகோர்த்து செயல்பட உள்ளோம்.

தோட்டங்கள் தொழிலாளர்களால் பலப்படுத்தப்பட்டது. கூடிய உரிமை தொழிலாளர்களுக்கு தோட்ட பகுதிகளில் உண்டு. எதிர்வரும் காலத்தில் தோட்டப்பகுதிகளை இத் தொழிலாளர்களுக்கு 50 வீதமாக பிரித்து அவர்களுக்கு ஒப்பனையும் வழங்கி கௌரவப்படுத்தவுள்ளோம்.

எந்த தோட்ட நிர்வாகமாக இருந்தாலும் சரி அந்த தோட்டத்தின் அரைவாசி தொழிலாளர்களுக்கு அரைவாசி நிர்வாகத்திற்கும் வழங்கி தொழிலாளர்களின் வாழ்க்கையின் வறுமையை இல்லாதொழிக்கவுள்ளோம்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பது சாதாரணமான ஒரு கட்சி அல்ல. இந்த கட்சியின் ஊடாக நடைபெறும் இவ்விழாவுக்கு தனிப்பட்ட நவீன் திஸாநாயக்கவாக நான் வரவில்லை. இந்த நாட்டின் பெருந்தோட்ட தொழிலாளர்களின் அபிவிருத்தியை முன்னெடுக்கும் ஒரு அமைச்சராக வந்திருக்கின்றேன்.

இந்த நிகழ்வில் நான் கட்டயமாக கலந்து கொள்ள வேண்டும். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றது. அதில் ஒன்று தான் இ.தொ.காவின் மக்கள் பலம். ஒரு காலமும் இ.தொ.கா வை யாராலும் அழித்தொழிக்க முடியாது என்பது நான் கூறும் உண்மை.


எனது தந்தை காமினி திஸாநாயக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக இருந்த போது மறைந்த தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் அவர்க்காள செயலாற்றினார்.

அவர் இன்று உயிரோடு இருந்திருந்தால் தலைவர் தொண்டமானுடன் கூட இருந்திருப்பார். இவ்வாறான ஒற்றுமையை வலுப்படுத்தவே எதிர்காலத்தில் நானும் ஆறுமுகன் தொண்டமானும் கைகோர்த்து செயலாற்றவுள்ளோம். இனவாதத்தை முற்றிலும் எதிர்க்கும் ஆறுமுகன் தொண்டமான் இன்று நம் மத்தியில் இருக்கின்றார். இவரை நம்பியே மலையக தோட்ட தொழிலாளர்கள் இருக்கின்றார்கள் என்பதை யாரும் மறந்துவிட கூடாது என்றார்.

சம்பள விடயத்தில் இ.தொ.கா பின்வாங்காது - ஆறுமுகன் எம்.பி தெரிவிப்பு

தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பின்வாங்கவில்லை. உலக சந்தையில் தேயிலையின் விலை வீழ்ச்சி கண்டுள்ளதால் இத் தருணத்தில் சம்பள உயர்வை கேட்க சென்றோமானால் அதனை சதத்தில் தான் தருவார்கள். ஆனால் நம்முடைய கோரிக்கை ஆயிரம் ரூபா ஆகும். கடந்த சம்பள பேச்சுவார்த்தையில் தேயிலை உற்பத்தி விலை 430 ரூபாய் என கூறினார்கள். 

ஆனால் உலக சந்தையில் விற்பை செய்த தேயிலை 360 ரூபாயாக உள்ளது என காரணம் காட்டினார்கள். ஆகையினால் பொறுமையுடன் இருந்து உலக சந்தையில் தேயிலை விலை உயர்வு அடைந்தவுடன் இ.தொ.கா கூறிய சம்பளத்தை கட்டாயம் பெற்று தரும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தலவாக்கைளில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் உரை நிகழ்த்துகையில் தெரிவித்தார்.

அவர் மேலும் தனத உரையில் தெரிவித்ததாவது,

இன்று நடைபெறும் விழாவின் இதே இடத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் அடுத்த கணமே ஆயிரம் ரூபாயை சம்பளமாக தருகின்றோம் என சிலர் கூறினார்கள். அவ்வாறு கூறப்பட்ட ஆட்சி எது என்று தெரியவில்லை. இ.தொ.கா 4 மாதத்திலும் சம்பளத்தை பெற்றுக்கொடுத்துள்ளது. 

4 நிமிடத்திலும் சம்பளத்தை பெற்றுக்கொடுத்துள்ளது. காங்கிரஸ் சொல்வதை தான் செய்யும். செய்வதை தான் சொல்லும். இதனை நம்பி அணைவரும் ஒற்றுமையுடனும் கட்டுப்பாடுடனும் இருங்கள். இன்று நம்மிடமுள்ள பாரிய பிரச்சினை சம்பள பிரச்சினை இதனை வெற்றிகரமாக இ.தொ.கா பெற்றுக்கொடுக்கும் என்பதில் ஐயப்பட வேண்டாம் என்றார்.

5 ஆண்டு வேலைத்திட்டத்தில் 50,000 வீடுகள் கட்டிகொடுக்கப்படும் - அமைச்சர் திகாம்பரம் தெரிவிப்பு

இதுவரை காலமும் மலையக மக்களுக்கு 10 ஆண்டு வேலைத்திட்டம் ஒன்று துசுபடிந்து இருந்தது. இதனை தட்டி துப்பரவு செய்து அரசாங்கத்திடம் கையளித்து 5 ஆண்டு வேலைத்திட்டமாக முன்னெடுக்கவுள்ளோம். இந்த 5 ஆண்டு வேலைத்திட்டத்தில் 50,000 ஆயிரம் வீடுகளை அமைத்து கொடுப்போம் என மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பி. திகாம்பரம் தெரிவித்தார்.

அட்டன் டன்பார் மைதானத்தில் 20.03.2016 அன்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் தின விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது,

பெண்கள் நினைத்தால் இந்த நாட்டில் எதையும் செய்ய முடியும். பெரும்பாலான பெண்கள் ஒரு அரசியல் மாற்றத்தை கொண்டு வந்துள்ளன. பெண்கள் மதிக்க கூடியவர்கள் என்பது தொழிலாளர் தேசிய சங்கத்தின் முன்னோடி தலைவர் வீ.கே.வெள்ளையனின் கனவு அது இப்பொழுது நனவாக்கப்பட்டு வருகின்றது.

உலகளாவிய ரீதியில் மார்ச் 8ம் திகதி கொண்டாடப்படும் மகளிர் விழா இன்று நாம் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஊடாக கொண்டாடுகின்றோம்.

கடந்த காலத்தில் இருந்த தலைவர்கள் எமக்கு அமைச்சு பதவி மற்றும் மக்களுக்கு சேவையாற்றும் பொறுப்புகள் வழங்க வேண்டாம் என முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கூறினார்கள். அந்த நிலை இப்பொழுது மாற்றம் பெற்றுள்ளது.

உண்மையில் சேவை செய்தால் மக்கள் நம்மை கைவிட மாட்டார்கள். எமது கூட்டமைப்புடன் மலையக மக்களுடைய கோரிக்கையாக ஜனாதிபதியிடமும் மற்றும் பிரதமரிடமும் சம்பள பிரச்சினையை முன்வைத்தோம்.

இதன் அடிப்படையில் 2500 ரூபாய் அடுத்த மாதம் அளவில் கிடைக்கும். இதனை நாம் பாராளுமன்றத்தில் முன்வைத்து பெற்றுள்ளோம். இது கட்டாயமாக கிடைக்கும். இந்நாட்டின் பெருந்தோட்டதுறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தோட்டப்பகுதிகளை அரைவாசியாக பிரித்து ஒரு பகுதியை தொழிலாளர்களுக்கும் மற்றதை நிர்வாகத்திற்கும் வழங்க ஏற்பாடு செய்து வருகின்றார்.

இவ்வாறு வழங்குவதற்கு நாங்கள் ஏமாந்தவர்கள் அல்ல. கொடுத்தால் மழு தோட்டத்தையும் நமது மக்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும். நல்ல தேயிலையை நிர்வாகமும் சரிவுபற்றதை தொழிலாளிகளும் அனுபவிக்க இடம் கொடுக்க போவதில்லை என இதன்போது தெரிவித்தார்.


தேர்தல் காலத்தில் சம்பளத்தை உயர்த்துவேன் என சாவல்விட்டு ஆட்சியை கைப்பற்றியவர்களுக்கு சக்தி இல்லை - இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம் தெரிவிப்பு

ஜனாதிபதி தேர்தலிலும் பிரதமரை நியமிக்கும் பொது தேர்தலிலும் தலவாக்கலையில் கூறிய சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க தவறும் பட்சத்தில் அரசியல் மற்றும் தொழிற்சங்கத்திலிருந்து இன்றைய ஆட்சி பொறுப்பிலும் அதிகார பொறுப்பிலும் உள்ள எதிரணிக்கு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான முத்து சிவலிங்கம் சவால் விட்டு பேசினார்.

தலவாக்கலையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் உரை நிகழ்த்துகையில் தெரிவித்தார்.

அவர் மேலும் தனது உரையில் தெரிவித்ததாவது,

மக்களுடைய வாக்கு பலத்தால் ஆட்சியையும் அதிகாரத்தையும் பெற்றுள்ளவர்கள் ஆயிரம் ரூபா சம்பளத்தை அரசாங்கத்திடம் பேசி பெற்றுக்கொடுக்க முடியாதுள்ளனர். இவர்களுக்கு சக்தி இல்லை. காரணம் அங்கே ஆறுமுகன் தொண்டமான் இல்லை என்பது தான்.

இன்று தோட்டப்பகுதியில் தொழில் செய்வர்களில் 80 வீதமானவர்கள் பெண்கள். இவர்கள் இன்று கௌரவிக்கபடுகின்றார்கள். இது பெருமைக்குரிய விடயம். ஆண்கள் அகங்காரம் கொண்டவர்கள். நான் தான் எதையும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இதனால் பெண்களை கவனிக்க முடியாமல் போய்விட்டது. இன்று பெண்களாகிய நீங்கள் எங்களின் கண்களை திறந்துள்ளீர்கள். இன்று இந்த நாட்டுக்கு சோறு போடுவர்கள் மலையக தோட்ட தொழிலாளர்கள்.

இதுவரை காலமும் சம்பள பிரச்சினையை தீர்த்து வைத்தவர் ஆறுமுகன் தொண்டமான் என்பதை யாரும் மறந்துவிட கூடாது. இன்று நடைமுறையில் உள்ள சம்பளத்தை கூட ஆறுமுகன் தொண்டமான் தான் பெற்றுக்கொடுத்தார்.

இன்று 2500 ரூபாய் பெற்று தருவதாக கூறுகின்றார்கள். இதற்கு முறையான சட்ட விதிகள் இல்லை. சம்பள உயர்வு சம்மந்தமாக எதிர்வரும் காலத்தில் ஆறுமுகன் தொண்டமானுடன் தொழில் அமைச்சர் மற்றும் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாட உள்ளது. இதன்போது நாம் கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கவுள்ளோம். அப்போது தோட்ட நிர்வாகம் விரும்பினால் இருக்கலாம் இல்லை என்றால் தோட்டத்தை விட்டு போகலாம்.

யாரையும் நாம் கட்டுப்பிடித்துக்கொண்டு இருக்கும் அவசியம் எமக்கு இல்லை. அதுவரை நாம் சிலருக்கு காலகேடு விதித்துள்ளோம் என்றார்.

வெளிநாட்டவர்கள் விரும்பி பருகும் தேனீரை அன்றும் இன்றும் வழங்குபவர்கள் பெருந்தோட்ட தொழிலாளர்கள் - போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பெருமிதம்

(க.கிஷாந்தன்)

வெளிநாட்டவர்கள் விரும்பதக்க தேனீரை பருகுவதற்காக தேயிலை தொழிலை மேற்கொண்டு இந்த நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு வித்திட்டவர்கள் தோட்ட தொழிலாளர்கள். காலம் காலமாக தோட்ட தொழிலை மேற்கொண்ட இவர்கள் ஆடை தொழிற்சாலை தொழில்கள் மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் தொழில்களை செய்து தமது வியர்வையை சிந்திய தொழிலாளர்கள் இந்த நாட்டின் அபிவிருத்திக்கான பொருளாதாரத்திற்கு முதுகெழும்பாக செயல்பட்டு வருகின்றனர் என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

தலவாக்கலையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் உரை நிகழ்த்துகையில் தெரிவித்தார். அவர் மேலும் தனத உரையில் தெரிவித்ததாவது,

உலக மகளிர் தினத்தை ஞாபகப்படுத்தி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னெடுக்கும் இந்த மாபெரும் மகளிர் தின விழா மறைந்த அமரர்.சௌமிய மூர்த்தி தொண்டமான் காலத்திலிருந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நாட்டில் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் எதிர்கட்சியில் அமராது தோட்ட தொழிலாளர்களின் நலன் கருதி ஆளுங்கட்சியில் அங்கமாக விளங்கி சேவைகளை முன்னெடுத்து வருகின்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பது சாதாரண ஒரு அமைப்பு அல்ல. பல்வேறு வரலாற்றுகளை கொண்ட அமைப்பாகும். இதை யாரும் மறந்து விட கூடாது. அதை வேலை அழித்து விடவும் முடியாது. இவ்விடத்தில் பெருந்தோட்ட அபிவிருத்தித்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க இருக்கின்றார். இவரை இப்பகுதி மக்கள் தேர்ந்தெடுத்துள்ளமை பெரும் வரப்பிரசாதமாகும்.

இவரின் கூடாக வியர்வை சிந்தும் மலையக தொழிலாளர்களுடைய கோரிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் அரசாங்கத்தின் அமைச்சரவையில் எடுத்துக்கூறி உரிமைகளை பெறும் வாய்ப்பு உள்ளதை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினரில் ஒருவரான நான் பெருமையடைகின்றேன் என தனது உரையில் தெரிவித்தார்.














இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -