நல்லாட்சி அரசின் ஒருவருட நிறைவுக்கு யாழ் முஸ்லிம் சிவில் சமூகம் விடுக்கும் வாழ்த்துச் செய்தி..!

ல்லாட்சி அரசு ஒருவருட நிறைவைப் பூர்த்தி செய்யும் இச்சந்தர்ப்பத்தில் யாழ் முஸ்லிம்கள் சார்பாக, யாழ் முஸ்லிம் சிவில் சமூகம் விடுக்கும் வாழ்த்துச் செய்தி

மக்கள் ஏற்படுத்திய நல்லாட்சி அரசாங்கத்தின் ஒருவருட நிறைவை நினைவுகூறும் இச்சந்தர்ப்பத்தில் யாழ் முஸ்லிம்களும் தங்களோடு இணைந்துகொள்கின்றோம், நல்லாட்சி அரசாங்கத்தினை யாழ் முஸ்லிம்களாகிய நாமும் வாழ்த்துகின்றோம்.

இற்றைக்கு ஒரு வருடத்திற்கு முன்னர் நாமெல்லோரும் இலங்கையில் நல்லாட்சி ஏற்படவேண்டும், இந்த சந்தர்ப்பம் தவறவிடப்படுமாக இருந்தால் இந்த நாட்டை நிரந்தர அழிவில் இருந்து எவராலும் காப்பாற்ற முடியாது என்ற கருத்தைக் கொண்டிருந்தோம். 

இந்த நாட்டில் நிலவிய அராஜக ஆட்சி, சர்வாதிகார ஆட்சி, இனங்களுக்கிடையில் விரோதங்களையும் குரோதங்களையும் வளர்க்கின்ற ஆட்சி, அந்நிய சக்திகளை அளவுக்கதிகமாக எமது தாய்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்வதை அனுமதித்த ஆட்சி, குடும்ப ஆட்சி, சட்டம் ஒழுங்கிற்கு எதிரான ஆட்சி, மனித உரிமைகளுக்கு எதிரான ஆட்சி, அமைதிக்கும் சமாதானத்திற்கும் எதிரான ஆட்சி, இராணுவ ஆக்கிரமிப்புக்கு ஆதரவான ஆட்சி, மக்களின் நலன்களைக் கண்டுகொள்ளாத ஆட்சி, ஊடக சுதந்திரத்தை மதிக்காத ஆட்சி, என பல்வேறு விதத்திலும் மக்களால் அங்கீகரிக்க முடியாத ஆட்சியொன்று எமது தேசத்தில் நிலவிய சந்தர்ப்பத்தில்தான் “மாற்றத்திற்காக ஒருங்கிணைவோம்” என்ற தொனிப்பொருளில் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக அதிமேதகு மைத்திரிபால சிறிசேனா அவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கினார்கள். 

மக்கள் எல்லோரும் ஒருமித்த குரலில் அவரை ஆதரித்தார்கள், குறிப்பாக வடக்குக் கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்கள் தமது முழுமையான ஆதரவையும் அவருக்கு வழங்கினார்கள். யாழ்ப்பாணத்தில் மாத்திரம் 253,574 (74.42%) வாக்குகளை வழங்கி மக்கள் மேதகு. மைத்திரிபால சிறிசேனா அவர்களை வெற்றி பெறச்செய்திருந்தார்கள்.

யாழ்ப்பாண முஸ்லிம்களும் மேதகு. மைத்திரிபால சிறிசேனா அவர்களை வெற்றிபெறச் செய்வதில் முழுமையான பங்களிப்புகளை வழங்கியிருந்தார்கள். அதன் அடிப்படையில் கடந்த 2015 ஜனவரி 8ம் திகதி இடம்பெற்ற அந்த மாற்றத்தின் சிறப்புமிகு பங்காளிகளாக தம்மையும் நிலைநிறுத்திக்கொள்கின்றார்கள். 

அதனைத் தொடர்ந்துவந்த பாராளுமன்றத் தேர்தலிலும் யாழ்ப்பாண முஸ்லிம்கள் மாற்றத்தினை மேலும் பலப்படுத்தும் வகையில் தமது வாக்குகளைப் பயன்படுத்தியிருந்தார்கள். அதன்மூலம் இப்போது நாட்டில் நல்லாட்சியை முன்னெடுக்கும் அரசொன்று நிறுவப்பட்டிருக்கின்றது. 

இது எமக்கு மனமகிழ்வைத் தருகின்ற சந்தர்ப்பத்திலும் நாம் முன்னோக்கிச் செல்லவேண்டிய தூரம் இன்னமும் நிறையவே இருக்கின்றது என்பது எமது எதிர்பார்ப்பாகும். அவ்வாறான ஒரு நல்லாட்சிப் பயணத்தில் நாம் கருத்தில் கொள்ளவேண்டிய பல முக்கிய விடயங்கள் இருக்கின்றன, அவற்றை எமது மக்களின் கருத்துக்களாக இவ்விடத்தில் பதிவிடுகின்றோம்.

தற்போதைய அரசாங்கம் நீதி, சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகம், மனித உரிமைகளை மதிக்கும் தன்மை, அதிகாரத் துஷ்பிரயோகத்தின் மட்டுப்படுத்தப்பட்ட தன்மைகள், மக்கள் நலன் போன்ற விடயங்களில் முடியுமானவரை சிறப்பாக செயற்பட்டாலும், அவை மேலும் வலுவாக அமுலாக்கப்படவேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்.

கடந்த காலங்களிலே நிகழ்ந்தேறியதாகக் கூறப்படும் அனைத்து ஊழல் மோசடிகளும், சட்டவிரோத நடவடிக்கைகளும், அரச உடமை துஷ்பிரயோகங்களும், கொலை கொள்ளை போன்ற குற்றச்செயல்களும் தேசவிரோத செயற்பாடுகள், இனவிரோத செயற்பாடுகள், மனித உரிமை மீறல்கள் அனைத்தும் உரிய முறையில் துரிதமாக விசாரணைக் குட்படுத்தப்பட்டு குற்றவாளிகளுக்கு சட்டரீதியான தண்டனைகளைப் பெற்றுக்கொடுப்பதனை அரசாங்கம் உத்தரவாதப்படுத்தபடுத்த வேண்டும்

வடக்கில் யுத்தத்தின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களினதும், பலவந்த வெளியேற்றத்தைச் சந்தித்த மக்களினதும் துரித மீள்குடியேற்றமானது முழுமையான அரச அணுசரனையோடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், இதற்கு ஏதுவாக இராணுவத்தினரினால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டு, காணித் தேவையுள்ளவர்களுக்கு அரச காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டு வீடமைப்பு, தொழில்வாய்ப்பு, கல்வி, சுகாதாரம் உட்பட ஏனைய வசதிகளும் துரிதமாக செய்து தரப்படவேண்டும்

இந்த நாட்டிலே நீண்டகாலமாக புரையோடிப்போயிருக்கும் இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வு துரிதமாகப் பெற்றுத்தரப்படவேண்டும். இந்த நாட்டிலே வாழ்கின்ற எந்த மக்களும் அநீதமிழைக்காத, பாதிப்பில்லாத தீர்வொன்றினை அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினை அரசு மக்களுப் பெற்றுத்தரவேண்டும்.

சமூக நல்லிணகம் மிகப்பிரதானமான ஒன்றாக எமது நாட்டிலே காணப்படுகின்றது, மதத்தின் பெயராலும் மொழியின் பெயராலும் மக்களைப் பிரித்தாளுகின்ற செயன்முறையினை எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், அரசும் நல்லிணக்க முயற்சிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

நீண்டகால யுத்தம் ஏற்படுத்தியிருக்கின்ற மனித அவலங்களை அரசு துரிதமாக நிவர்த்திக்க வேண்டும், காணிகள் விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோர் விவகாரம் என பல முக்கிய மனிதாபிமான விடயங்களில் துரித தீர்வு கிட்டும் வகையில் அரசு செயற்படுதல் அவசியமாகும்.

பொருளாதார அபிவிருத்தி, நிலைத்து நிற்கும் அபிவிருத்தி போன்ற செயற்பாடுகளிலும் அரசு முழுமையான கவனம் செலுத்தி, இந்த நாட்டிலே நிலவுகின்ற, வறுமை, மந்த போஷாக்கு வேலையற்றோர் பிரச்சினை, வன்முறைக் கலாச்சாரம், போதைப்பொருள் பாவனை, பெண்களுக்கு எதிரான வன்முறைகள், சிறுவர் துஷ்ப்பிரயோகம் போன்ற சமூகத்தீங்குகளை விட்டும் இந்த நாட்டை மீட்டெடுத்தல் அவசியமாகும்.

மனித உரிமைகளையும், மக்களுக்குரித்தான சுதந்திரங்களையும், சுயாதீனத்தையும், மத சுதந்திரத்தையும், ஊடக சுதந்திரத்தையும், இந்த நல்லாட்சி அரசாங்கம் மேலும் உத்தரவாதப்படுத்துதல் அவசியமாகும். 

மேற்படி முக்கிய விடயங்களை எமது மக்கள் சார்பாக நல்லாட்சி அரசின் அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கும், மான்புமிகு பிரதமர் அவர்களுக்கும், மான்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்கும் இத்தகைய முக்கியமான சந்தர்ப்பத்தில் முன்வைக்கின்றோம்.

நன்றி.
இவ்வண்ணம்-

ஜனாப் கே.எம்.நிலாம்,
தலைவர்,
யாழ் முஸ்லிம் சிவில் சமூகம், 

ஜனாப் எம்.எம்.எம்.நிபாஹிர்,
செயலாளர்,
யாழ் முஸ்லிம் சிவில் சமூகம்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -